நிசாமாபாத்தில் உள்ள ஜூம்பா ஃபிட்னெஸ் செண்டர் பிஸினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்து வரும் ரேவந்த் (நாக சைதன்யா) , இன்ஜினியரிங் படித்துவிட்டு, படிப்புக்கு ஏற்ற நல்ல சம்பளத்துடன் வேலையை தேடி அலையும் மெளனிகா (சாய் பல்லவி). இருவரும் சந்தித்து கொள்கின்றனர். மெளனிகாவை பார்த்ததும் காதல் ரேவந்த்துக்கு, பழகப்பழக காதல் ஏற்படுகிறது மெளனிகாவிற்கு. ஆனால், பொருளாதர சுமை, ஊர் பிரச்சனை, ஜாதி, மதம் என தடைகளைக் கடந்து ஒன்று சேர்ந்தார்களா இல்லை என்பதுதான் ‘லவ் ஸ்டோரி’.


ரேவந்த்தும், மெளனிகாவும் சந்தித்து கொள்வது முதல் அவர்களிடத்தில் நட்பு மலர்ந்து, பிஸினஸ் பார்ட்னர்களாக மாறி, நட்பு காதலாய் உருவெடுக்கும் மாற்றத்தை தனது வழக்கமான ஸ்டைலில் இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்திலும் யதார்த்தமாக காண்பித்திருக்கிறார். அழகான விஷுவல்ஸ், ஆங்காங்கே இதமான பாடல்கள், செண்டிமெண்ட் வசனங்கள் என படத்தின் முதல் பாதியிலேயே ஒரு பக்கா ’ஃபீல் குட் மூவி’ ஃபீல் வந்துவிடுகிறது. 



ஆனால், ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான ஹீரோ, ஹீரோயின், காதல், செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களையும் கொண்டு போகிற போக்கில் சில சமூகப் பிரச்சனைகளையும் சொல்லிவிட்டு போகிறார் இயக்குனர். சாதி மறுப்பு திருமணம் ; வீட்டிலேயே, குடும்பத்திற்குள்ளே பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனை - இந்த இரண்டு சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் பேசி இருக்கும் ‘லவ் ஸ்டோரி’, வெறும் ரேவந்த் - மெளனிகாவின் வாழ்க்கை கதையாக கடந்துவிட்டது போல இருந்தது படத்தில் ப்ளஸ், மைனல் இரண்டுமே. படம் பார்த்தவர்களில் எத்தனை பேருக்கு நிஜத்தில் நடந்து கொண்டிருக்கும் சாதிய பிரச்சனைகள், அதை சார்ந்த புரிதல் உண்டாகி இருக்கும் என்பது சந்தேகமே.  


படத்தின் இரண்டாம் பாதியில், சாதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிடாமல், வேறு நாட்டிற்கு தப்பி ஓடுவது பற்றியும், அதற்கு ப்ளான் செய்யும் ‘கோல்மால்’ திட்டங்களும் கொஞ்சம் தவறாக வழிநடத்துவது போல இருந்தது. படம் முழுவதும் “நான் செத்திடுவேன், செத்திர்லாம்” என நெகடீவ் வசனங்கள் ஆங்காங்கா வந்துபோகின்றன. காதலிலும் சரி, சாதிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போதும் சரி ரேவந்த் - மெளனிகா இடையே இருக்கும் அத்தனை பாசிடீவ் மொமண்ட்ஸ்களுக்கும் மத்தியில் இந்த நெகடீவ் அலைகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.


நடிகர்கள் நாக சைதன்யா, சாய் பல்லவி (தியேட்டரில் பல்லவிக்கு மட்டும்தான் ஸ்பெஷல் விசில்கள் பறந்தன, அவரது நடனத்திற்கு டபுள் விசில்கள்), ரேவந்த் அம்மாவாக கஸ்தூரி ராவ், மெளனிகா அம்மாவாக தேவயானி, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த  உட்டேஜ் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நாக சைதன்யா, தனது கரியர் பெஸ்ட் பெர்ஃபாமென்ஸை கொடுத்துள்ளார். எனினும், தனது இயல்பான நடிப்பாலும், அசத்தல் நடனத்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது சாய் பல்லவிதான். 


ஓடிடி மெட்டிரீயலாக இல்லாமல், தியேட்டரில் பார்க்கலாம் என ‘டிக்’ மார்க் வாங்குகிறது ‘லவ் ஸ்டோரி’. ஒரு ஃபீல் குட் லவ் ஃபீலுக்காக, ஒரு முறை இந்த லவ் ஸ்டோரியை பார்க்கலாம்.