Weapon Movie Review in Tamil: நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி லீட் ரோலில் நடிக்க, குகன் சென்னியப்பன் இயக்கத்தில்  இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இயக்குநர் ராஜீவ் மேனன், நடிகை தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், சூப்பர்  ஹியூமன் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட இப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா எனப் பார்க்கலாம்.


வெப்பன் திரைப்பட விமர்சனம்




சாதாரண மனிதனுக்கு உள்ள சக்திகளைத் தாண்டி, சூப்பர் ஹியூமன்கள் எனப்படும் மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என அழுத்தமாக நம்பும் வசந்த் ரவி, தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் வலம் வருகிறார். இன்னொரு புறம் பளாக் சொசைட்டி என்ற பெயரில் ரகசியக் குழு ஒன்றையும், பயோடெக் நிறுவனத்தின் மூலம் மனிதர்களை பலிகடாவாக்கும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் வில்லன் ராஜீவ் மேனன்.


தேனியில் நிகழும் அதிசய நிகழ்வு ஒன்றைத் தொடர்ந்து, தன் சேனலுக்காக கண்டெண்ட் தேடி அங்கு வசந்த் ரவி பயணிக்க, மற்றொரு புறம் அடுத்தடுத்து உயிரிழக்கும் தங்கள் ப்ளாக் சொசைட்டி நபர்களுக்கு ஆபத்தாக ஒரு சூப்பர் ஹியூமன் தான் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து ராஜீவ் மேனன் ஆட்களும் பயணிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, இருவரும் தேடிச் சென்ற சூப்பர் ஹியூமன் நபரைக் கண்டறிந்தார்களா, வசந்த் ரவிக்கும் இந்தக் குழுவுக்கும் என்ன சம்பந்தம், தேனியில் காட்டுக்குள் அமைதியாக வாழ்க்கை நடத்தி வரும் சத்யாஜ் யார் என்பன போன்ற கேள்விகளுக்கு ட்விஸ்ட்டுகள் மற்றும் சர்ப்ரைஸ்களுடன் பதில் சொல்லி சுவாரஸ்யம் கூட்ட முயற்சித்திருக்கிறர்கள். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெற்றதா?


நடிப்பு


படத்தின் நாயகன் வசந்த் ரவி. சாதாரண யூடியூபராக, சூழலியல் பற்றி வகுப்பெடுக்கும் நாயகனாக அறிமுகமாகி முதல் பாதியில் “இவர் என்ன துணைக் கதாபாத்திரம் போல் வலம் வருகிறார்!” என யோசிக்க வைக்கும் வசந்த் ரவி, இரண்டாம் பாதியில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்வாகுடன் வசந்த் ரவி கச்சிதமாகப் பொருந்திப்போனாலும், மிகை நடிப்பை சற்று தவிர்க்கலாம். 



சூப்பர் ஹியூமன் என விளம்பரப்படுத்தப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தோன்றும் சத்யராஜ் கதாபாத்திரம். சந்திரமுகி பாம்பு கணக்காய் எங்கே எங்கே எனத் தேட வைத்து கிட்டத்தட்ட இடைவேளையின்போது மாஸாக அறிமுகமாகிறார். எதிர்பார்த்ததை குறைவான ஸ்க்ரீன் டைம் என்றாலும் யானையுடன் கட்டிப்பிடித்து விளையாடுவது, மறுபக்கம் வில்லன்களை தயவு தாட்சண்யமின்றி புரட்டிப்போட்டு அடிப்பது, குடும்பத்தை எண்ணி கலங்குவது என கதாபாத்திரத்துக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார். ஏஐ சத்யராஜ் ப்ளாஷ்பேக் காட்சிகளில் வருவதாக விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் எங்கே எனத் தேட வேண்டியுள்ளது.


தமிழ் சினிமாவின் வழக்கமான பொம்மை நாயகியாக படத்தில் நடிகை தான்யா ஹோப் வந்து செல்கிறார். ஸ்டைலிஷ் ஹை சொசைட்டி வில்லனாக வரும் ராஜீவ் மேனன், அவரது அடியாள் ராஜீவ் பிள்ளை உள்ளிட்டோர் பெரிய அழுத்தமின்றி கதாபாத்திரத்துக்கு தேவையானதை செய்து செல்கிறார்கள்.


நிறை, குறை


ஹிட்லர் காலக்கட்டத்தில் சிப்பாய்களுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சூப்பர் ஹியூமன் சீரம், அதை இந்தியாவுக்கு திருடி வருவது, பல ஆண்டுகள கழித்து அதனை உயிருக்குப் போராடும் தன் மகனுக்கு செலுத்தி பிழைக்க வைக்கும் அப்பா என கன்னாபின்னா கற்பனை ஒருபக்கம் இருந்தாலும், சூப்பர் ஹியூமன் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என முடிவு செய்து சுவாரஸ்யத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தால், முதல் பாதியில் சூப்பர் ஹியூமன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சத்யராஜை காண்பிக்காமல் நமக்கு அயற்சியை தருகிறார்கள்.



மற்றொருபுறம் ஆரா, குண்டலினி மூலம் சூப்பர் பவரை எழுப்புவது, புராணக் கதைகள் என்றெல்லாம் பேசி வசமாக சிக்கிக் கொண்டோமா என யோசிக்க வைக்கிறார்கள். நீட்டி முழுக்கி பேசிப் பேசி முதல் பாதியை வசனங்களாலேயே விளக்குவதைத் தவிர்த்து காட்சிகளால் கடத்த முற்பட்டிருக்கலாம். இடைவேளைக் காட்சி மாஸ் சத்யராஜ் அறிமுகத்துக்குப் பிறகு ஜிவ்வென்ற இரண்டாம் பாதி மற்றும் சத்யராஜின் காட்சிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றமே!


க்ளைமேக்ஸ் வரை ட்விஸ்ட்டுகள் வைத்தாலும் அவற்றில் சில மட்டுமே ஒர்க் அவுட் ஆகி, மற்றவை இதையெல்லாம் அனுபவிக்கலாமா வேண்டாமா என யோசிக்கவே வைக்கின்றன. பல ஹாலிவுட் படங்கள், மார்வெல் கதைகளை நினைவூட்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதும் பெரும் அயற்சி!


சூப்பர் ஹியூமன் டூ சூப்பர் ஹீரோ


இவற்றுக்கு மத்தியில் பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. ஜிப்ரான் இசையில் நானாக நானுமில்லை பாடல் ஈர்க்கிறது. சூப்பர் ஹியூமனாகத் தொடங்கி சூப்பர் ஹீரோவாகப் பயணிக்கும் கதையில் சண்டைக் காட்சிகள் சலிப்பு. கலை இயக்கத்தில் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம். 


இரண்டாம் பாகத்துக்கான லீட் கொடுக்கப்பட்டு முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் குறைகளை எல்லாம் களைந்து வெப்பன் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளை அழுத்தமாக பூர்த்தி செய்யும் என நம்புவோமாக!