உதிரிப்பூக்கள் அஸ்வினி


அமைதி ததும்பும் அழகான முகம் கொண்ட நடிகையாக `அழகியக் கண்ணே…’ என நினைவலைகளை எழுப்பும் உதிரிப்பூக்கள் நடிகை அஸ்வினியை ஞாபகம் இருக்கிறதா? தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் மனதில் பதிந்த இந்த நடிகை இப்போ என்ன செய்து கொண்டு  இருக்கிறார் தெரியுமா?


கர்நாடகா மாநிலத்தில் பிறந்த அஸ்வினி சிறு வயது முதலே படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். அதிலும் குறிப்பாக கணிதப் பாடம் என்றால் உயிர். 1977ம் சித்தலிங்கய்யா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான 'ஹேமாவதி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பி.எஸ்.ரங்கா தயாரிப்பில் சோம சேகரராவ் உடன் 'சாவித்ரி' என்ற படத்தில் நடித்து இருந்தார். கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற அஸ்வினியை  இயக்குநர் மகேந்திரன் தான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.


முதல் படத்திலேயே ஈர்த்த நடிகை 



 


1979ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் விஜயன், சரத்பாபு, மதுமாலினி, சுந்தர், உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான 'உதிரிப்பூக்கள்' படத்தின் மூலம் தான் அஸ்வினி அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல ஒரு படமாக அமைந்து பாராட்டுகளை குவித்தது. கதையை முழுவதுமாக உள்வாங்கி அதற்கு ஏற்றார் போல் அறிமுக நடிகை என சொல்ல முடியாத அளவுக்கு  அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றார். 


அஸ்வினியின் சோகமான விழிகள், பாந்தமாக முகம், அமைதியான தோற்றம் இவை அனைத்தும் லட்சுமி என்ற அந்த கதாபாத்திரத்துடன் அத்தனை பொருந்தி இருந்தது. சாருஹாசனின் தங்கை, குறுகிய மனம் பொறாமை பிடித்த கணவன், இரு குழந்தைகளில் தாய் என பல பரிணாமங்களில் அதற்கு ஏற்றார் போல தன்னுடைய முகபாவங்களில் வித்தியாசத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து ஒரே படத்தின் மூலம் உச்சிக்கு சென்றார். வெற்றி விழா கண்ட' உதிரிப்பூக்கள்' திரைப்படம் நூற்றாண்டுகளை கடந்த இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த 100 படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 




அதை தொடர்ந்து 1980ம் ஆண்டு கே.பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய 'ஒரு கை ஓசை' படத்தில் படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் கலகலப்பாக இருக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். மீண்டும் மகேந்திரன் இயக்கத்தில் சுரேஷ், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்த 'நண்டு' படத்தில் சீதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருத்தலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ஒரு நடிகை அஸ்வினி.  


தற்போது அஸ்வினி தன்னுடைய 'ஈஸி ஈஸி மேத்ஸ்' என்ற யூடியூப் சேனல் மூலம் மாணவர்களுக்கு கணிதம் கற்றுக்கொடுத்து வருகிறார். பெங்களூரில் வசித்து வரும் அஸ்வினியின் மகளுக்கு திருமணமாகி பேரக்குழந்தையுடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.