விக்டிம் என்கிற பெயரில் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியிருக்கும் அந்தாலஜி படம். நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு அந்தாலஜி மூவி. வழக்கம் போல நான்கு பாகங்களாக வெளியாகியிருக்கிறது. முதல் பாகம், தம்மம். பா.ரஞ்சித் இயக்கத்தில், குருசோமசுந்தரம், கலையரசன் உள்ளிட்ட வழக்கமான ரஞ்சித் படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள்.


வயல் வெளியில் தன் மகளோடு நடவை பணிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் விவசாயி. அப்பா விவசாயம் செய்து கொண்டிருக்க மகளோ, அங்குள்ள வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பார். இந்த நேரத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவ்வழியாக செல்வார். அவர், வயலில் வேலை செய்யும் அந்த விவசாயிடம் சிறிது நேரம் உரையாடிச் செல்வார்.


அடுத்த சில நிமிடங்களில், வெள்ளை வேட்டி, சட்டையோடு மைனர் மாதிரி ஒரு இளைஞன் அங்கு வருகிறார். அவர் ஆடைக்கும், விவசாயத்திற்கு சம்மந்தமே இல்லை. வந்த அந்த இளைஞர், விவசாயி உடன் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணோடு வாதிடுகிறார். அவர் தான், அந்த இளைஞரின் தாய். அந்த இளைஞரை கடுமையாக சாடிய பின், அங்கிருந்து நகர்கிறார் அந்த பெண்.


விவசாயி கடந்து செல்ல அவ்வழியாக வரும் இளைஞருக்கு, மீன் பிடித்துக் கொண்டிருக்கும் சிறுமி வழி விட மறுக்கிறார். யார் சேற்றில் இறங்குவது என்கிற பிரச்சனை. தன்னை விட கீழ் நிலையில் இருக்கும் சிறுமி தான் சேற்றில் இறங்க வேண்டும் என்பது உறுதியாக இருக்கிறான் அந்த அடம்பிடித்த இளைஞன். ஒரு கட்டத்தில், அந்த இளைஞரை சேற்றில் தள்ளிவிடுகிறார் சிறுமி.






ஆத்திரமடைந்த இளைஞன் சிறுமியை சேற்றில் தள்ளிவிட, தடுக்க அவரது தந்தைக்கும் இளைஞருக்கும் தள்ளுமுள்ள ஏற்பட்டு, வாய்க்காலில் இருவரும் விழுகின்றனர். விழுந்த வேகத்தில் வாய்க்கால் முழுவதும் ரத்தம் ஓடுகிறது. அந்த இளைஞருக்கு கழுத்தறுபட்டு, ரத்தம் ஓட, அதை கண்ட அவரது தாய், கூச்சலிட்டபடி ஊருக்குள் கூற ஓடுகிறார். 


என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து போன விவசாயி, மகளின் உதவியோடு அந்த இளைஞரை அங்கிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். அதற்குள் அவரது தந்தை உள்ளிட்ட சகோதரர்கள் அங்கு ஆயதங்களுடன் வந்து, விவசாயியை தாக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் தாக்குதலில் விவசாயி என்ன ஆனார்? விவசாயி மகளுக்கு என்ன நடந்தது? 


உயிருக்கு போராடிய அந்த இளைஞன் உயிர் பிழைத்தானா இல்லையா என்கிற பல்வேறு பரபரப்போடு முடிகிறது தம்பம். பசுமையான வயல் வெளி, அதில் ஒரு புத்தர் சிலை. சிலை மீது சிறுமி ஒருவர் ஏறி விளையாட, ‛சாமி மீது ஏறக்கூடாதும்மா...’ என அவரது தந்தை அறிவுரை கூறுவதும், ‛சாமியே இல்லை என்று தானே புத்தர் சொன்னாரு’ என்று சிறுமி கூறுவதுமாய் துவங்குகிறது படம். எடுத்த எடுப்பிலேயே தனது முத்திரையோடு கதையை தொடங்கும் ரஞ்சித், க்ளைமாக்ஸ் வரை அதில் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். 






உயிருக்கு போராடும் மகனை காப்பாற்றாமல், அதற்கு காரணமானவரை கொலை செய்யத் துடிக்கும் தந்தையும், மகன்களும் , அவர்களிடமிருந்து எப்படியோவது உயிர் பிழைக்க போராடும் விவசாயி, தன் தந்தையை காப்பாற்ற கையில் கத்தி எடுக்கும் சிறுமி என ஒரு சிறிய பகுதிக்குள் நிறை குரோதம் , பாடம், பாசம் அனைத்தையும் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். 


இதுவரை அவர் தொடாத விவசாய பகுதி. மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஏதார்த்தமான வசனங்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள் என எல்லாமே கச்சிதமாக உள்ளது. நான்கு எபிசோடுகள் உள்ள ஒரு கதையில், முதல் பக்கம் நன்றாக இருந்தால் தான், மற்ற பக்கங்களை புரட்டுவார்கள். அந்த வகையில், விக்டிம் படத்திற்கு, நல்ல முன்னுரை தம்மம்!