வாங்கா (Wonka)
பிரித்தானிய எழுத்தாளர் ரோல்ட் தால் எழுதிய புகழ்பெற்ற ஃபாண்டஸி நாவல் ‘சார்லீயும் சாக்லெட் ஃபாக்டரியும்’. பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகம், 1971ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக இப்புத்தகத்தை படமாக்கி வார்னர் ப்ரோஸ் நிறுவனம் இந்தப் படத்தை வழங்கியது.
மிகப்பெரிய சாக்லெட் ஃபாக்டரியின் முதலாளியான வில்லி வாங்கா தன்னுடைய நலிந்துபோன சாக்லெட் தயாரிக்கும் தொழிலை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதும், சார்லீ என்கிற சிறுவன் இதற்கு உதவுவதும் இந்தப் படத்தின் கதை.
இந்த சாக்லேட் தயாரிக்கும் நபரான வில்லி வாங்கா எப்படி இவ்வளவு பெரிய ஃபாக்டரியை உருவாக்கினான். அவனது வாழ்க்கை எப்படித் தொடங்கியது. இந்த நிலைக்கு வர அவன் என்ன சவால்களை எதிர்கொண்டான் என்பதை மையமாக வைத்து கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் வாங்கா.
இளம் நடிகர் டிமத்தி சாலமெட், ஹியூ கிராண்ட், ரொக்வன் அட்கின்சன் ( மிஸ்டர் பீன்), சாலி ஹாகின்ஸ், உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் பாடத்தை பால் கிங் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பாடில்டன் என்கிற படம் பெரும் கவனத்தை ஈர்த்தது. வார்னர் ப்ரோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
சிறு வயதில் நம் அனைவருக்கும் சாக்லெட் மீதான அதீத காதல் எப்போதும் இருக்கும். விளம்பரங்களில் காட்டப்படும் சாக்லெட் உலகத்தைப் பார்த்து நாமும் அந்த உலகத்திற்கு செல்ல முடியுமா என்று பலவகை கற்பனைகளில் ஆழ்ந்திருப்போம். சாக்லெட் அருவியில் குளித்து, சாக்லேட் படகில் சென்று, சாக்லெட் மெத்தையில் உறங்கி, சாக்லெட் சூரியன் வந்ததும் சாக்லெட்டில் பல்தேய்த்து சாக்லெட் மரம், சாக்லெட் செடி, கொடி என இப்படி எல்லாம் கற்பனை செய்யவில்லை என்றால் பிறகு என்ன சாக்லெட் காதலர்கள் நாம்? அப்படியான சாக்லெட் உலகத்தில் மாஜிக் கலந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
கதை
மாஜிக் கலைஞனாக வேண்டும் என்கிற ஆசையுள்ள வில்லி வாங்கா, தன் அம்மா தனக்கு செய்து கொடுத்த சாக்லெட்டை சாப்பிட்டபின் அனைவருக்கும் அதே மாதிரியான சாக்லெட்டை செய்து தர வேண்டும் என்று தீர்மானிக்கிறான்.
சொந்தமாக சாக்லெட் ஃபாக்டரி ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவில் நகரத்திற்கு புறப்பட்டு வரும் வாங்கா, எதிர்பாராதவிதமாக ஒரு மோசடிக்கார பெண்ணின் ஹோட்டலில் அடிமையாக மாட்டிக் கொள்கிறான். அதே நகரத்தில் ஏற்கெனவே சாக்லெட் தயாரிப்பதில் பிரபலமாக இருக்கும் மூன்று முதலாளிகள் தங்களது தொழிலுக்கு வில்லி வாங்கா இடைஞ்சலாக வருவான் என்று அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள்.
தன்னுடன் அடிமைகளாக வேலை பார்க்கும் நண்பர்களின் உதவியுடன் வில்லி வாங்கா எப்படி தன்னுடைய சொந்தமான சாக்லெட் ஃபாக்டரியை உருவாக்குகிறான் என்பதே வாங்கா படத்தின் கதை.
பொதுவாக வெனிலா, ஸ்ட்ராபெர்ரி என்று பலவிதமான ஃப்ளேவர்களில் நாம் சாக்லேட் சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்தக் கதையில் வரும் சாக்லெட்களை நாம் நிச்சயம் சாப்பிட்டிருக்க மாட்டோம். மின்னலில் இருந்து, சூரிய ஒளியில் இருந்து, சாப்பிட்டால் அழுகை , சிரிப்பு தூக்கம் வரும் வகையில் சாக்லெட்டில் மாஜிக் கலந்து என விதவிதமாக சாக்லேட்டுகள் தயாரிக்கிறான் வாங்கா.
இந்த உலகத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாக்லெட்டிற்கு அடிமையாக இருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் பணமாக இல்லை, சாக்லெட்களாக லஞ்சம் வாங்குகிறார்கள். இப்படி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் படத்தில் நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
விமர்சனம்
இதற்கு முன்பாக வந்த சார்லீயும் சாக்லெட் ஃபாக்டரியும் படத்தில் முழுக்க முழுக்க பாடல்களால் கதை நகர்த்தியிருப்பார்கள். ஆனால் அதே முறையை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை படத்தில் ஒரு பாடல் வரும்போதும் கதையில் ஒன்றிய பார்வையாளர்கள் கடுப்பாகி உச்சு கொட்டத் தொடங்குகிறார்கள். பாடல்களைத் தவிர்த்து கற்பனையான இந்த உலகத்தில் இன்னும் நுணுக்கங்களை சேர்த்திருக்கலாம்.
டிஸ்னி வார்னர் ப்ரோஸ் போன்ற தயாரிப்புகளில் வரும் படங்களுக்கு என இருக்கும் வழக்கமான டெம்ப்ளேட்டிற்குள் சில நல்ல கதைகள் மாட்டிக்கொண்டு அவற்றின் தன்மைகளை இழந்திருக்கின்றன. வாங்கா படமும் அப்படியான ஒரு படமாக சென்றுவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
டிமதி சாலமட் போன்ற திறமையான, அதே நேரத்தில் ஒரு ஃபாண்டஸி படத்திற்கு ஏற்ற முகபாவனைகள், தோற்றம் கொண்டிருக்கும் ஒரு நடிகருக்கு, இன்னும் சிறப்பான ஒரு கதைக்களத்தை வழங்கியிருக்கலாம். சாக்லெட்டைப் போல் சிறியவர்கள் முதல் பெரியவர்களை கவர்ந்திருக்க வேண்டிய வாங்கா திரைப்படம், வாயில் போட்ட மாத்திரத்தில் கரைந்துபோய் விடுகிறது.