VJ Chitra: முல்லையாக நடித்து இதயங்களை அள்ளிய சித்து.. விஜே சித்ராவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்!

VJ Chitra: என்றுமே கலகலப்பாகவும் தன்னைச்சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் ஒரு நபராக இருந்த விஜே சித்ராவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. 

Continues below advertisement

சில மரணங்கள் மிக மோசமான ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அப்படி ஒரு இழப்பு தான் “சிட்டாய் மேலே உயரப் பறந்த சித்து” என செல்லமாக அழைக்கப்பட்ட விஜே சித்ராவின் திடீர் மரணம்! ஏராளமான போராட்டங்கள், ஏமாற்றங்களை சந்தித்து ஒரு கட்டத்தில் வெற்றியின் விளிம்பில் ஊஞ்சலாடி, பின் நொடிப்பொழுதில் திடீரென காணாமல் போனவர் விஜே சித்ரா. அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. 

Continues below advertisement

 

தொடங்கிய பயணம் :

மக்கள் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளினியாக பிரபலமடைந்த சித்ராவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் நடிகையாக அறிமுகமான சித்ரா, அதைத் தொடர்ந்து சின்ன பாப்பா பெரிய பாப்பா,  டார்லிங் டார்லிங், வேலுநாச்சி உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்து வந்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீ டான்ஸ் லீக் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்று தனது நடனத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரமாக பிரபலமான சித்ராவை, அனைவரும் முல்லை என்றே செல்லமாக அழைத்து வந்தனர். கடைசியில் முல்லையாகவே அவர் மரணித்தது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வெள்ளித்திரை அறிமுகம் :

தொகுப்பாளினியாக, சின்னத்திரை நடிகையாக ஜொலித்த சித்ரா வெள்ளித்திரையில் 'கால்ஸ்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அப்படம் வெளியாவதற்கு முன்னரே சித்ரா தனது முடிவை தேடிக்கொண்டது படம் வெளியான அன்றைய தினத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

 

தற்கொலையின் பின்னணி :

திருமண ஏற்பாடுகள் மிகவும் மும்மரமாக நடைபெற்ற வேளையில் திடீரென ஒரு நாள் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அவரின் தற்கொலையின் பின்னணியில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. இதுவரையில் தற்கொலைக்கான காரணம் பிடிபடாமல் உள்ளது அவரின் ரசிகர்கள் பலருக்கும் வேதனையைக் கொடுத்து வருகிறது. 

கலகலப்பான சித்து :

சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஒரு பர்சனாலிடியாக வலம் வந்த சித்ரா, தனது ரசிகர்களுடன் என்றுமே தொடர்பில் இருந்து வந்தார். என்றுமே கலகலப்பாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் ஒரு நபராக இருந்தவர். மிகவும் துணிச்சலான ஒரு பெண்மணியாக இருந்து வந்த சித்ரா எதற்காக இப்படி ஒரு அவசர முடிவை எடுக்க வேண்டும் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 

ரசிகர்கள் வருத்தம் :

இன்றும் அவரின் இழப்பை அவரின் ரசிகர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் நினைவுகள் ரசிகர்கள் நெஞ்சங்களில் கலையாமல் அப்படியே உள்ளது. இன்றும் சித்ராவின் நினைவாக அவரின் பிறந்தநாள், நினைவு நாள் அன்று போஸ்டர்களை ஒட்டி நினைவு கூர்ந்து வருகிறார்கள் சித்ராவின் ரசிகர்கள். 

Continues below advertisement
Sponsored Links by Taboola