ரோகிணி, பசுபதி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தண்டட்டி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா எழுதி, இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.


முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல கிராமியக் கதைக்கான முன்னோட்டத்தை வழங்கி ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘தண்டட்டி’ பூர்த்தி செய்ததா எனப் பார்க்கலாம்!


கதை




போலீஸே  நுழையக்கூடாது என அடாவடித்தனம் பண்ணும் தேனி பக்க கிராமத்தில் வாழும் தங்கப்பொண்ணு (ரோகிணி), தன் பிள்ளைகள் தொடங்கி ஊரில் உள்ளவர்களுக்கும் நல்லது செய்து, தன் சொத்துக்களை எல்லாம் இழந்து உயிரிழக்கிறார்.


இச்சூழலில், தங்கப்பொண்ணுவின் காதில் இருக்கும்  ‘தண்டட்டி’க்காக (தங்கத்தால் ஆன காதணி) இவரது ஐந்து பிள்ளைகளும் அடித்துக் கொள்கிறார்கள். இதனிடையே பணி ஓய்வு பெறவிருக்கும் சூழலில், தொடர் சிக்கல்களில் மாட்டும் போலீஸ் ஏட்டான (சுப்பிரமணி) பசுபதி, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக நடப்பது என்ன? தண்டட்டி கிடைத்ததா, பசுபதி என்ன செய்கிறார் ஆகிய கேள்விகளுக்கான பதில்களை சிரிப்புடன் கலந்து உணர்வுப்பூர்வமாகக் கொடுத்திருக்கிறார்கள்.


ரோகிணி, பசுபதியின் நடிப்பு


முதலில் இப்படத்துக்கு பெரும் பலம் படத்தின் நடிகர்கள். தண்டட்டியை அடையாளமாக அணிந்து, பிள்ளைகள் தொடங்கி அனைவருக்கும் கரிசனம் காட்டும் கிராமத்து தாயாக ரோகிணி, பாத்திரத்துடன் வழக்கம்போல் ஒன்றி நம்மையும் படத்துடன் ஒன்ற வைக்கிறார். படத்தில் பாதிநேரம் பிணமாக நடித்தாலும் ரோகிணி நம்மை ஏமாற்றாமல் நிறைவுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளார்.


பொறுப்புடன் வலம் வந்து தேவையான நேரத்தில் சீறும் மிடுக்கான ஏட்டு கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி. தன் க்ளோஸ் அப் காட்சி ரியாக்‌ஷன்களிலும், முதிர்ச்சியான நடிப்பாலும் நம்மை எப்போதும்போல் ஈர்க்கிறார்.


படத்தின் பலம்


இவர்கள் தவிர ரோகிணியின் பிள்ளைகளாக வரும் நடிகர் விவேக் பிரசன்னா, நடிகைகள் தீபா, பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் உள்ளிட்டோர் படத்தின் கதையோட்டத்துக்கும் காமெடி போர்ஷனுக்கும் உதவி, தங்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.




ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் நடிகை அம்மு அபிராமியின் காதல் காட்சிகளில் நாடகத்தன்மை மேலோங்கி இருந்தாலும், படத்தின் உயிரோட்டமாக அமைந்து கதையை நகர்த்திச் செல்கிறது. அதேபோல் ஒரு துக்க வீட்டையும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும், அங்கு நடக்கும் அவல நகைச்சுவையையும் படத்தில் சிறப்பாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.


ஒப்பாரி வைத்தபடி வார்த்தைக்கு வார்த்தை பழமொழி சொல்லும் பாட்டிகள், எழவு வீட்டுக்கு வந்து தன்னை கவனிக்கவில்லை என்று குறைகூறும் சம்மந்தி ஆகியோர் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றனர். 


நிறை, குறைகள்


மகேஷ் முத்துசாமியின் கேமரா தேனி பக்க அழகையும், துக்கவீட்டையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது. சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை சில இடங்களில் நம்மை ஈர்த்தும், சில இடங்களில் மிகையாகவும் ஒலிக்கிறது.


படத்தின் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பொறுமையாகவும் அதே சமயம் தேவையான வேகத்திலும் முதல் பாதியில் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் குழம்பித் தவிக்கிறது. தண்டட்டியைச் சுற்றி நடக்கும் கதையில், தண்டட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காட்சிகளை படத்தின் தொடக்கத்திலேயே சொல்வதைத் தவிர்த்து, பொறுமையாக சொல்லி இருக்கலாம்!




அதேபோல் படத்தின் பக்கபலமாக அமையும் காமெடி, சில இடங்களில் ஓவர்டோஸாகி நம்மை கதை ஓட்டத்தில் இருந்து விலக வைக்கிறது. காமெடி, எமோஷன், காதல் என அனைத்தும் தனித்தனி ட்ராக்கில் பயணிப்பது படத்தின் பெரும் பின்னடைவு!


ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தண்டட்டி நம்மை ஈர்க்கிறது. மேற்கண்ட குறைகளைக் களைந்திருந்தால் தண்டட்டி இன்னும் ஜொலித்திருக்கும்! தண்டட்டியை ஒரு மதிய நேரத்தில் ஆற, அமர்ந்து குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்!