Thalainagaram 2 Review in Tamil: வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா, 'பாகுபலி' பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் என பலரும் நடித்துள்ள ‘தலைநகரம் 2’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ளார். இது சுந்தர்.சி 2006 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான ‘தலைநகரம்’ படத்தின் தொடர்ச்சியாகும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தலைநகரம் 2’ படத்தின் விமர்சனத்தைக் காணலாம். 


கதையின் கரு


‘தலைநகரம்’ படத்தில் ரைட் என்னும் கேரக்டரில் மிகப்பெரிய ரவுடியாக வரும் சுந்தர்.சி தன்னுடைய நண்பனின் (போஸ் வெங்கட்) மரணத்திற்கு பிறகு திருந்தி வாழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள 2ஆம் பாகத்தில் திருந்தி வாழும் சுந்தர்.சி தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பணிகளை மேற்கொள்கிறார். மறுபக்கம் வடசென்னை (ஜெய்ஸ் ஜோஸ்), மத்திய சென்னை (விஷால் ராஜன்), தென் சென்னை (பிரபாகர்) பகுதிகளை ஆட்டிப்படைக்கும் ரவுடிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவுகிறது. 


இதில் மத்திய சென்னை ரவுடி விஷால் ராஜன் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகை பாலக் லால்வானி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அவரை கடத்தியது தொடர்பாக விஷால் ராஜனும், தம்பி ராமையாவுடனான பிரச்சினையில் ஜெய்ஸ் ஜோஸூம்,  யதேச்சையாக ஒரு பிரச்சினையில் பிரபாகரும் சீண்டிப் பார்க்க சுந்தர்.சி மீண்டும் ‘ரவுடி ரைட்’ ஆக மாறுகிறார். இதன்பின்னர் இவர்கள் 4 பேரின் நிலைமை என்ன ஆனது? .. தலைநகரத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம். 


நடிப்பு எப்படி? 


படத்தில் நடித்துள்ளவர்களில் சுந்தர்.சி தவிர்த்து அத்தனை பேரும் தங்களுடைய கேரக்டர்களை குறைவில்லாமல் செய்துள்ளனர் என்று சொல்லலாம். ஆனால் யாரும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் சுந்தர்.சி மிரட்டுகிறார். ரிட்டையர்ட் ரவுடியின் கேரக்டரை அசால்டாக செய்து பாராட்டைப் பெறுகிறார். 


படம் எப்படி? 


தொட்டி ஜெயா படத்தின் மூலம் தன்னால் ஆக்‌ஷன் படமும் இயக்க முடியும் என நிரூபித்த வி.இசட்.துரைக்கு இந்த படம் என்ன சொல்லவா வேண்டும். பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜை கொடுத்துள்ளார். காட்சிகளில் இருக்கும் மெனக்கெடல்கள் திரைக்கதையில் ஆங்காங்கே இல்லாமல் போவது மைனஸாக உள்ளது. குறிப்பாக சுந்தர்.சியை பழிவாங்க நினைக்கும் காட்சிகள் பெரும்பாலும் வசனங்களோடு கடந்து போகிறது. ஆக்‌ஷன் படங்கள் என்றால் ரசிகர்களை அப்படியே ஒன்ற வைக்க வேண்டும். படத்தில் அத்தனை கொலை நடக்கிறது. போலீஸ் எங்கேயுமே வரவில்லை. 


முதல் பாகத்தில் எப்படி ரவுடிகளை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் போலீஸ், திருந்த நினைப்பவனை தடுக்கும் போலீஸ் என இருவேறு கேரக்டர்கள் காட்டப்பட்டிருக்கும். ஆனால் இதில் அப்படியான காட்சிகளே இல்லை.  அதேபோல் பழிவாங்கும் காட்சிகளை அப்படியே கொடூரமாக காட்டுவதை தவிர்த்திருக்கலாம். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உதவியுள்ளது. ஆனாலும் முதல் பாகத்தை விட பெட்டராக இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என சொதப்புபவர்கள் மத்தியில் தலைநகரம் 2 தப்பியுள்ளது என சொல்லலாம்.