காஷ்மீர் பிரச்னையை வைத்து இந்தியில் எத்தனையோ வெப்சீரிஸ்கள் வந்துள்ளன; வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் ‛டனாவ்’ என்கிற சீரிஸூம் இணைந்துள்ளது. காஷ்மீர் சுதந்திரத்தை முன்னெடுக்கும் உமர் ரியாஸ் என்கிற தீவிரவாதி. அவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவன் உயிரோடு தான் இருக்கிறான் என சிறப்பு பணிப்படைக்கு தகவல் வருகிறது. 


அவனை கொலை செய்ய ஆபரேஷனில் இருந்த ஓய்வு பெற்ற அதிகாரியான கபீர் என்பவரை மீண்டும் அழைத்து, உமர் ரியாஸை பிடிக்கும் பணியில் இறங்குகிறது சிறப்பு படை. உமர் தம்பியின் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு ஆகிறது. அதில் கட்டாயம் உமர் வருவான் என்று திட்டமிட்டு, அங்கு கபீர் தலைமையில் மாறுவேடத்தில் இறங்குகிறது சிறப்பு படை. எதிர்பாராத விதமாக, அவர்கள் மீது சந்தேகம் எழு, அங்கிருந்தவர்கள் சிறப்பு படை மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.


பதிலுக்கு சிறப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்த, அதில் உமர் தம்பி பரிதாபமாக பலியாகிறார். மேலும் சிலரும் கொல்லப்படுகிறார்கள். திருமணத்தில் கலந்து கொள்ள வரும் உமர் மீதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. அதில் படுகாயம் அடைந்த அவர், அங்கிருந்து தப்பிக்கிறார். பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காரணத்தால், கபீர் மீது குற்றச்சாட்டு எழுகிறது. அந்த அணி முழுவதும் அப்செட் ஆகிறது. 






இது ஒருபுறமிருக்க, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில், மறைமுகமாக உமருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதை அறிந்த கபீர், அவனை மடக்கி பிடிக்க முயல்கிறார். ஆனால், அங்கிருந்து சாதுர்யமாக தப்பிக்கிறான் உமர். அடுத்தடுத்து உமரை பிடிக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் போக, தன் தம்பியை கொலை செய்தவர்களை பழிவாங்க உமர் ஒரு திட்டம் தீட்டுகிறான். தன் காதல் கணவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க காத்திருக்கும் உமரின் தம்பி மனைவியே, அத்திட்டத்தை மனித வெடிகுண்டாக மாறி செயல்படுத்துகிறார். 


அந்த குண்டு வெடிப்பில் கபீர் அணியை சேர்ந்த அவரது மைத்துனரின் மனைவி பலியாகிறார். இதனால் கபீரின் மைத்துனருக்கு உமரை பழிதீர்க்கும் வெறி ஏற்படுகிறது. இதற்கிடையில், உமரை பிடிக்க செல்லும் இடத்தில் கபீரின் மைத்துனம் சிக்கி விடுகிறார். அவரை சித்ரவதை செய்து துன்புறுத்துகிறது உமர் டீம். இந்நிலையில் , உமரின் இந்த செயல்பாடு, காஷ்மீர் விடுதலையை முன்னெடுத்து செல்லும் அமைப்பு ஒன்றின் தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. ராணுவ வீரரை கடத்தி கொடுமை படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. அது இந்திய ராணுவத்தை மேலும் கோபம் ஏற்றும் என அவர்கள் கூறும் அறிவுரையை உமர் ஏற்க மறுக்கிறான். 


தன் மனைவியின் தம்பியான மைத்துனரை பணையக் கைதியாக வைத்திருக்கும் உமரிடம் இருந்து மீட்க, ராணுவ உத்தரவின்றி களமிறங்குகிறார் கபீர். அவரோடு அவரது அணியும் சேர்கிறது. உமருக்கு வழிகாட்டியாக இருக்கும் சமுதாய பெரியவர் ஒருவரை கடத்தி வந்து, உமருடன் பேச்சு வார்த்தையில் இறங்குகிறார் கபீர். அத்தோடு அந்த  முதல் சீரிஸ் முடிகிறது. இரண்டாம் பாகம் வரும் வெள்ளியன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதல் பாகத்தின் அத்தனை எபிசோடும் பரபரப்பாக நகர்கிறது. எதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் நகர்கிறது காட்சிகள். புதிய கதைக்களம் இல்லை என்றாலும், தீவிரவாதியின் குடும்பம், அவனது பாசம், அவனது பழிவாங்கும் நோக்கம் என இன்னும் கூட ஆழமாக சென்று வேறு கோணத்தை காட்ட முயற்சித்திருக்கிறார்கள். வெறி கொண்டு வேட்டையாடும் கபீர் கதாபாத்திரமும் உடல் மொழியை கடந்த உத்வேகத்தை காட்டுகிறது. இரண்டாம் பாகம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை கொடுத்திருக்கும் வகையில், ‛டனாவ்’ பார்க்கும் படியான தொடரே. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வந்துள்ள இந்த சீரிஸ், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.