தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக, நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “ என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் குழுவோடு பேசி பிரச்னையை சரி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
நடிகர்கள் பொதுவாக தாங்கள் சார்ந்த படங்கள் மற்றும் தங்களின் பர்சனல் தொடர்பான தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது ஃபேஸ்புக் பக்கத்திலும் தன்னைப்பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தனது புதிய படமான ஜப்பான் பூஜை தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து, கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கேம் சம்பந்தமான வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு, லைவ் செய்யப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கார்த்தியிடம் ஏன் கேமை லைவ் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், கார்த்தி இது குறித்தான தனது விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து தீபாவளி பரிசாக அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் “ சர்தார்”. தண்ணீர் பாட்டிலால் வரும் காலத்தில் ஏற்படும் பாதிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்தப்படத்தின் இராண்டாம் பாகமும் உருவாக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தில் கார்த்தியுடன் ராஷிகண்ணா, லைலா, ரெஜிஷா விஜயன், முனீஷ்காந்த், அவினாஷ், மாஸ்டர் ரித்விக், யூகி சேது, முரளி சர்மா உள்ளிட்டோர் பலநட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் படத்தில் கார்த்தி கமிட் ஆகியிருக்கிறார்.