மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் படத்தில் இருந்து நடிகர் விஷ்ணு விஷால் விலகியிருக்கலாம் என்று அரசல் புரசலாகப் பேசப்படுகிறது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கைவண்ணத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ள “லால் சலாம்” படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. இங்கு ரஜினி மற்றும் ஜீவிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நேற்று ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில், ”பரவாயில்லை! நான் மீண்டும் முயன்றேன். நான் மீண்டும் தோற்றேன். நான் மீண்டும் கற்றேன். ஆனால் இது கடைசியாக நேர்ந்தது எனது தவற்றாலோ அல்லது எனது தோல்வியாலோ அல்ல. அது முழுக்க முழுக்க துரோகமும், வஞ்சனையும் ஆகும்” என்று பதிவிட்டிருந்தார். ஆழ்ந்த தத்துவ ரீதியான இந்த ட்வீட் அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் இரண்டு நாயகர்களில் ஒருவராக தேர்வாகியிருந்தார். இன்னொரு நாயகர் விக்ராந்த். இருவருமே புரொஃபொஷனல் கிரிக்கட்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


விஷ்ணு விஷாலின் இந்த ட்வீட்டைப் பார்த்த அவரது ரசிகர்கள், எந்தப் படம் ட்ராப் ஆனதற்கு இந்தச் சோகம் என்று கேட்டு வருகின்றனர். ஏற்கெனவே பலமுறை லால் சலாம் படத்தில் இருந்து விஷ்ணு விஷால் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு தூபம் போடுவதுபோல் சில தினங்களுக்கு முன்னர், "You got to stand for your own self.. No one will....." என்கிற கேப்ஷனுடன் தனது புகைப்படத்தை விஷ்ணு விஷால் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் லால் சலாம் படப்பிடிப்பு ஆரம்ப நாளிலேயே இத்தகைய ட்வீட்டை அவர் பகிர்ந்துள்ளார்.


 
ஐஸ்வர்யாவின் கம் பேக் படம்: 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம்  நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப் பின்  'ஓ சாத்தி சால்' எனும் ஹிந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாவதாகவும் அறிவித்தார். 


இதற்கிடையில் தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 3வது படம் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து ஹீரோவாக நடிக்கின்றனர். அதேசமயம் யாரும் எதிர்பாராதவிதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.மேலும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகவும்,  கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீன் பாஸ்கரும் பணியாற்றுகின்றனர்.


ஸ்போர்ட்ஸ் டிராமாவை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் 33 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜீவிதாவும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.