சல்யூட்... இந்த டைட்டிலை கேட்டதும், துப்பாக்கியும் கையுமாக போஸ்டரில் நிற்கும் துல்கர் சல்மானை பார்த்ததும், இது ஒரு போலீஸ் புகழ்பாடும் கதை என்று நினைக்கத் தோன்றும். உண்மையில் இது போலீஸ் கதை தான்; ஆனால், அவர்களின் புகழ் பாடவில்லை. அவர்களின் தவறுகளை தோலுறிக்கிறது.
போலீஸ் கதைகளில் நாம் பார்க்காத ஜானர்களே இல்லை. ஆனால், சல்யூட்... உண்மையில் நாம் பார்க்க ஜானர் தான். ஒரே குடும்பத்தில் அண்ணன் டிஎஸ்பி, தம்பி எஸ்.ஐ., தம்பதி கொலை வழக்கை விசாரிக்கும் அவர்கள், அரசியல் நிர்பந்தம் காரணமாக, அவசரத்தில் ஒருவரை குற்றவாளியாக முன் வைத்து சிறை அனுப்புகின்றனர். தம்பி எஸ்.ஐ.,க்கு அந்த நபர் குற்றவாளி இல்லை என தெரிகிறது. ஆனால், டிஎஸ்பி அண்ணன் உள்ளிட்ட அந்த அணியில் இருப்போர் அதை ஏற்க மறுக்கின்றனர்.
அந்த குற்ற உணர்ச்சியில் நீண்ட விடுப்பில் செல்லும் தம்பி, தற்செயலாக ஊர் திரும்பும் போது, மீண்டும் அந்த குற்ற உணர்ச்சியில் சிறையில் இருப்பவரை விடுவிக்கவும், உண்மையான குற்றவாளியை பிடிக்க எடுக்கும் முயற்சி தான் சல்யூட். மலையாள திரையுலகம் பொதுவாகவே கதைகளில் புதுமையை கையில் எடுக்கும். குறைந்த பட்சம் முயற்சியாவது எடுக்கும். அது எந்த வகை கதையாக இருந்தாலும் சரி. அப்படி ஒரு முயற்சியை தான் சல்யூட் படத்திலும் எடுத்திருக்கிறார்கள்.
கடைசி வரை வில்லன் யார் என்பதே தெரியாமல், காட்டாமல், கதையை அவ்வளவு அற்புதமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரோஸ். குற்ற உணர்ச்சியில் கூனி குறுகும் போதும், உயர் அதிகாரிகளின் தடுப்புகளை தாண்டி ஓடும் போதும், வேற மாதிரி தெரிகிறார் துல்கர். எந்த ஒரு காட்சியும், இப்படி தான் இருக்கும் என் அனுமானிக்க முடியாத அளவிற்கு, தரமான க்ரைம் த்ரில்லரை தந்திருக்கிறார். துல்கரின் அண்ணனாகவும், டிஎஸ்பி-யாகவும் வரும் மனோஜ் கே ஜெயன், தம்பி பாசத்திலும் சரி, தன் பதவியை தக்க வைக்க தம்பியை பந்தாடுவதிலும் சரி... வேறு லெவலில் நடித்திருக்கிறார். அவரோடு வரும் போலீஸ் அணியும் சிறப்பான பங்களிப்பு.
அஸ்லாம் கே ப்ரையிலின் ஒளிப்பதிவு, கேரளாவின் க்ரைம் பக்கங்களை கண் முன் கொண்டு வருகிறது. ஜாக்ஸ் பீஜாய்யின் இசை, படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறது. பெரிய ட்விஸ்ட் எல்லாம் கொடுத்து படத்தை படமாக மாற்றாமல், எதார்த்தத்தில் என்ன நடக்கும், என்ன நடக்கலாம் என்பதை யூகித்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் ஒரு விசயத்தை மாற்ற முடியும்; மாற்றியதை திருத்தவும் முடியும் என்பதே கதையின் மையம். ஆனால், மாற்ற நினைக்கும் போது, அவர்கள் எது மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதையும், வழக்கு என்பது புலி வால்; அதை பிடித்தால் விட முடியாது என்கிற எதார்த்தத்தையும் பேசியிருக்கிறது சல்யூட். நல்ல கதை... அதனால் தான், படத்தை துல்கர் சல்மானே தயாரித்துள்ளார்.
கேரளாவில் நடக்கும் கதை. மலையாளத் திரைப்படம். அதை தமிழில் மொழி பெயர்க்கும் போது, அந்த பகுதியின் பெயர்களை வைத்தே கதையை நகர்த்தலாம். வம்பாக... சென்னை, பெருங்குளத்தூர், தாம்பரம் , மார்த்தாண்டம் என சம்பந்தமே இல்லாத ஊர் பெயர்களை சூட்டியது தேவையற்றது. அவர்கள் ஊரின் பெயரை கூறும் போது, மலையாளத்தில் பெயர் பலகையில் வரும் ஒரிஜினல் ஊர்களின் பெயர்கள், கொஞ்சம் நெருடல். அதை தவிர்த்திருந்தால், குறையே இல்லாத படம் என்று கூட கூறியிருக்கலாம்.
மலையாளத்தில் வெளியான இப்படம், தமிழிலும் சோனி லைவ்வில் வெளியாகி உள்ளது. இந்த வார இறுதியை நல்ல க்ரைம் த்ரில்லரோடு கொண்டாட விரும்பினால், ‛சல்யூட்’ நிச்சயம் சல்யூட் அடிக்கும்.