கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை நயன்தாரா பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சுக்காக அப்போது திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி நீக்கப்பட்டார். அவர், `நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இப்பல்லாம், கும்பிட்றவங்கையும் சாமி வேஷம் போடலாம். கூப்பிட்றவங்களையும் சாமி வேஷம் போடலாம். அப்படியாகிடுச்சு சினிமா’ என்று பேசியிருந்தார்.. அதனைத் தொடர்ந்து அதுகுறித்து பலரும் பேசியிருந்தாலும், ராதாரவி, நயன்தாரா ஆகிய இருவரிடம் நெருங்கிப் பழகிய நடன இயக்குநர் கலா பேசியது மறக்க முடியாதது.
அப்போதைய நேர்காணல் ஒன்றில் பேசிய நடன இயக்குநர் கலா, `ராதாரவி சார் எனக்கு பல ஆண்டுப் பழக்கம்.. என் நடன வகுப்புக்கான இடத்தை முதலில் அவர் தான் நடிகர் சங்கத்தில் கொடுத்தார்.. அவர் என்னுடைய வழிகாட்டிகளுள் ஒருவர்.. நான் சினிமாவில் எவ்வளவு சாதித்தாலும், என்னுடைய அந்த நடன வகுப்புகளில் உலகில் பல சாதனையாளர்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அவரிடம் இதுபற்றி நான் பேசியபோது, அவர் இப்படியான தவறான நோக்கத்தோடு பேசவில்லை எனக் கூறினார். ஆனால் பெண்களைப் பற்றி யார் பேசினாலும் கொஞ்சம் கவனத்தோடு பேச வேண்டும். ரவி சார் அப்படியான குணம் கொண்டவர் அல்ல.. அவருடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன்.. மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்ட நபர்..’ என்று ராதாரவியைப் பற்றிய தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அவர், நடிகை நயன்தாரா பற்றி பேசியபோது, `நயன்தாரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. அதிகமாக உதவி செய்யும் குணம் கொண்டிருப்பவர். என் மாணவி ஒருவர் தனது தாயின் உடல்நலக் குறைவின்போது பல கலைஞர்களிடம் உதவிக்காக பணம் பெற்றிருக்கிறார். அருகில் நயன்தாராவின் படப்பிடிப்பில் அவரிடம் உதவி கேட்டபோது, உடனே பணம் கொடுத்து உதவியவர் அவர். மேலும், அவரைப் போல தைரியமான பெண்ணைப் பார்க்க முடியாது.. படம் நடித்து, இடைவெளி எடுத்து, சூப்பர்ஸ்டார்களுக்கு சமமாக தனது படத்தை வெற்றிகரமாக தரும் ஒரே நடிகை நயன்தாரா.. அவர் அத்தனை கடும் உழைப்பைத் தருபவர்.. ஒரு மெசேஜ் கொடுத்ததும் உடனே பதிலளிக்கும் கலைஞர்களுள் நயன்தாராவும் ஒருவர்.. அவர், சூர்யா என சிலர் மட்டுமே அப்படியான குணம் கொண்டவர்கள்.. நான் ஏதேனும் நிகழ்ச்சிக்கு அழைத்தால் உடனே வருவதற்கு ஒப்புக் கொள்பவரும் அவர் தான். வர முடியாவிட்டாலும், மிகுந்த மரியாதையோடு என்னால் முடியவில்லை எனக் கூறும் அளவிற்கான குணம் கொண்டவர் நயன்தாரா.’ என்று கூறினார்.
மேலும் அவர், `நயன்தாரா தன் வாழ்வில் அத்தனை அடிபட்டிருக்கிறார். அதனால் அவர் பொதுவில் எதனையும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. நான் ரொம்ப சென்சிட்டிவான குணம் கொண்டிருப்பவள்.. என் அம்மா மறைந்தபோது என்னால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று தெரியாமல் இருந்தது.. ஆனால் அப்போதைய அழுகைக்கும், இப்போதைய அழுகைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.. தொடர்ந்து இந்த வலிகளைத் தாங்கும்போது, அவற்றை பிரச்னைகளோடு எதிர்கொள்வதற்கான தைரியம் தருகிறது.. அதைப் போல தைரியம் கொண்டவர் நயன்தாரா. அவர் தன் வாழ்க்கையில் அதிகமான வலிகளைக் கடந்திருப்பதால் அந்தத் தைரியம் அவரிடம் தன்னம்பிக்கையாக வளர்ந்திருக்கிறது’ என்றும் தெரிவித்திருந்தார்.