பாரடைஸ் ( Paradise Movie Review)
இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் பிரசன்னா விதனாகே இயக்கத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் பாரடைஸ். ரோஷன் மேத்யு மற்று தர்ஷனா ராஜேந்திரன் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சர்வதேச திரைப்பட விழாக்களில் பரவலான கவனத்தைப் பெற்ற இப்படம் தற்போது வெகுஜன ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பாரடைஸ் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
கதை
2022 ஆம் ஆண்டு இலங்கையில் நிதி நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துகிறார்கள். இதே சூழலில் தான் தங்கள் ஐந்தாவது ஆண்டு திருமண தினத்தைக் கொண்டாட இலங்கை வந்துள்ளார்கள் கேசவ் (ரோஷன் மேத்யு) மற்றும் அம்ரிதா ( தர்ஷனா) . இந்த தம்பதியினருக்கு ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிக்காட்டுகிறார் வழிகாட்டியான ஆன்ட்ரூ.
இதே சமயத்தில் தான் ரோஷன் இயக்கவிருக்கும் படம் ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்க ஒப்புக்கொள்வதாக அவனுக்கு இந்தியாவில் இருந்து தகவல் வருகிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறான் கேசவ். இப்படியான சூழலில் தான் கேசவ் மற்றும் அம்ரிதா தங்கியிருந்த விடுதியில் புகுந்து அவர்களின் லேப்டாப் மற்றும் செல்ஃபோனை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கிறார்கள். திருட்டுப்போன தங்களது பொருட்களை காவல்துறையில் புகாரளிக்கிறார் கேசவ். அடுத்தடுத்த எதிர்பாராத சம்பவங்களால் மகிழ்ச்சியான திருமண நாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டிய இந்த பயணம் இந்த தம்பதியின் உறவுக்கே ஒரு அக்னிபரீட்சையாக மாறி இறுதியில் அம்ரிதாவின் கையில் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கிறது.
பாரடைஸ் படத்தில் மறைமுகமாக சொல்லப்படும் இன்னொரு கதை ராமாயணம் ( குறிப்பாக வால்மிகி எழுதிய ராமாயணம்) கேசவ் மற்றும் அம்ரிதாவை ஒவ்வொரு இடமாக சென்று அந்த இடத்தில் நிகழ்ந்த சம்பவங்களை சுற்றிக்காட்டுகிறார் சுற்றுலா வழிகாட்டி ஆண்ட்ரூ. ராமன் ராவணனை கொன்ற இடம் , ராவணன் சீதையை கொண்டுபோய் வைத்த இடம் என நாம் பரவலாக கேட்ட கதைகளையே அவர் சொல்கிறார். அம்ரிதா இந்த கதைகளின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்டபடியே இருக்கிறார்.
" ஒரு ஆபத்தான நிலையில் மாட்டுக்கொள்ளும்போது பெண்கள் யாராவது வந்து தங்களை காப்பாற்றுவார்கள் என்று அழுதுகொண்டு மட்டுமே இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா " என்று ஒரு காட்சியில் ஆண்ட்ரூவிடம் கேட்கிறாள்.
அதே போல் சமண மரபில் உள்ள ராமாயணத்தில் ராவணனைக் கொன்றது ராமன் இல்லை சீதை தான் என்றும் அவள் கூறுகிறாள். ஒரே கதைக்கு ஒவ்வொருத்தரின் பார்வையிலும் வெவ்வேறு உண்மைகள் இருக்கலாம் என்பதை படம் பல காட்சிகளில் அடிகோடித்து வருகிறது. ராமாயணத்தைப் பற்றிய இந்த சின்ன சின்ன மறுவிசாரணை காட்சிகள் தற்போது சமகாலத்தில் இருக்கும் இந்த தம்பதியின் உறவை பார்வையாளர்களை உற்று நோக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது.
வெளியில் பார்க்க இனிமையான காதல் ஜோடிகளாக தெரியும் இந்த தம்பதிகளுக்கு இடையில் பேசப்படாத எத்தனையோ முரண்களை மெளனத்தின் வழி உணர்த்திவிடுகிறார் இயக்குநர். தங்களது திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாட மட்டுமே கேசவ் இலங்கையை தேர்வு செய்யவில்லை. தனது கதை தயாரிப்பு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டால் தனது நண்பர்களின் முகத்தைப் பார்த்து அவமானப்படுவதை தவிர்க்க தான் இந்த சுற்றுலா வந்ததாக ஒரு காட்சியில் சொல்கிறான். இன்னொரு காட்சியில் இப்படியான நிதி நெருக்கடியில் இலங்கைக்கு வந்தால் செலவில் நிறைய மிச்சப்படுத்தலாம் என்பதே அவனது நோக்கமாகவும் இருக்கிறது. இதை எல்லாம் பார்வையாளர்கள் நாம் உணரும்போது வெளிப்படுத்தும் கோபத்தில் பாதியைக்கூட அவனது மனைவி அம்ரிதா வெளிப்படுத்துவதில்லை.
அம்ரிதாவின் கதாபாத்திரம் மிக எளிமையானது. அவள் சின்ன சின்ன விஷயங்களை மகொழ்ச்சியை தேடுபவள். மான் வேட்டையாட காட்டிற்கு செல்லும்போது அதை கொள்ள அவள் அதை அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்கும்போது எல்லாம் அவள் மனதில் இருக்கும் ஒரே கேள்வி அந்த மான் உயிரோடு இருக்கிறதா இல்லையா என்பதே. ராமாயணத்தில் சீதைக்கு இருக்கும் அதே கனிவான குணங்கள் தான் அம்ரிதாவுக்கு இருக்கின்றன. ஆனால் பல இடங்களில் அம்ரிதா குரலற்றவளாக தனது சரியோ தப்போ தனது கனவனின் முடிவுகளுக்கு துணை நிற்கும் குணமுடையவளாக இருக்கிறாள். இந்த அத்தனை உணர்ச்சிகளையும் தர்ஷனா தனது மெளனத்தில் துல்லியமாக கொண்டு வந்து விடுகிறார்.
இயக்குநர் ராஜீவ் ரவி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவைப் பொறுத்தவை ஒரு தனித்துவம் என்னவென்றால் கதாபாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்ப காட்சிகள் அமைக்கப் பட்டிருப்பது. உதாராணமாக ஒரு காட்சியில் ராமன் ராவணனை கொன்ற இடத்திற்கு செல்கிறார்கள். அந்த இடத்தை பார்வையாளர்களாகிய நாமும் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் ஆனால் அந்த இடம் காட்டப்படுவதில்லை. ஏனால் கேசவுக்கு இந்தியாவில் இருந்து அப்போது தான் முக்கியமான ஒரு கால் வருகிறது. அவன் தனது படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியில் இங்கு பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. அதனால் அம்ரிதாவைப் போல் நமக்கு அந்த இடத்தை முழுவதுமாக பார்வையிடுவதற்கான நேரம் கிடைப்பதில்லை.
இசையமைப்பாளர் கே காட்டின் அமைதியை குலைக்காமல் தேவையான இடத்தில் மட்டும் பின்னணி இசையை சேர்த்திருப்பது சிறப்பு.ராமாயணத்தைப் போல் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக புரிந்துகொள்ளப் படுகிறது. இந்த கதைகள் பெரும்பாலும் ஆண்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவும் , தங்கள் உடைமைகளாக கருதும் பொருட்களுக்காக எடுத்த முடிவுகளே. அதன் விளைவுகளை அவர்களுடன் இருக்கும் பெண்களும் எதிர்கொள்கிறார்கள். படத்தின் தொடக்கம் முதல் தனது கணவன் தனது உள்ளுணர்வின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகளையும் அதன் விளைவுகளையும் சேர்ந்து எதிர்கொண்டு வரும் அம்ரிதா இறுதியில் தனது சொந்த உள்ளுணர்வினால் ஒரு செயலை செய்கிறாள். சரியோ தப்போ அது அவள் எடுத்த முடிவு. பிறர் அதை எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். வரலாறு அவளை நல்லவளாகவோ கெட்டவளாகவோ எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம் . அதுதான் அவளின் அக்னிபரீட்சை. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை பார்க்க நினைப்பவர்களை பாரடைஸ் படத்தை காணலாம்.