நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் தன்னை அடிக்க வந்த சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 


கடந்த 2004 ஆம் ஆண்டு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித்குமார், சினேகா, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “ஜனா”. இந்த படத்தை ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் தினா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் பணியாற்றியிருந்தார். அப்போது மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது. 


ஒரு நேர்காணலில் பேசிய பாவா லட்சுமணண் அஜித்தைப் பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், “அஜித் ரொம்ப நல்ல மனிதர். கடைசியாக நான் அவருடன் திருடா படத்தில் பணியாற்றினேன். அது ஜனா என்ற பெயரில் ரிலீசானது. அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு பைக்கில் தான் வந்தார். பார்டர் தோட்டத்தில் ஷூட்டிங் நடந்த நிலையில் ஒரு 100 ரசிகர்கள் மொட்டை அடித்து விட்டு அஜித்தை பார்க்க வந்தார்கள். நான் கேரவனில் இருந்த அவரிடம் சென்று விஷயத்தை சொன்னேன். மொட்டை தலையுடன் இருந்த அனைவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்து என்னவென்று விசாரித்தார். அதற்கு ரசிகர்கள் நீங்கள் மொட்டை போட்டதால் நாங்களும் போட்டுக் கொண்டோம் என தெரிவித்தார்கள். எல்லாருடனும் சலிக்காமல் தோளில் கைபோட்டுக் கொண்டு போட்டோ எடுத்தார். நான் ஒவ்வொரு ரசிகனாக போட்டோ எடுக்க அனுப்பி கொண்டு, எடுத்து முடித்தவுடன் அவர்களை விலக்கி விடும் பணியை மேற்கொண்டிருந்தேன். 


மதிய உணவு இடைவேளையின்போது நான் மேலே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு 10 பேர் என்னை சூழ்ந்து கொண்டார்கள். என்னை கெட்ட வார்த்தையில் பேசி இவர் யாருன்னு தெரியுதா? ஆனந்தம் படத்தில் நடிச்சிருப்பான்ல அவன் தான் என சொன்னார்கள். அடிக்க கை ஓங்கியதும் நான் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை போட்டு விட்டு கேரவனில் அஜித்தை பார்க்க ஓடினேன். அஜித்திடம் ரசிகர்கள் அடிக்க வந்த விஷயத்தைச் சொன்னேன். 


உடனே ரசிகர்களிடம் சென்று நீங்கள் பார்க்க வேண்டும் என சொன்னீர்கள். நானும் பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டேன். லட்சுமணன் அவர் டூட்டியை செய்றாரு. ஏன் அடிக்க போறீங்க? எல்லாரும் போங்கன்னு சொன்னதும் ரசிகர்கள் போய் விட்டார்கள். அஜித் சொன்னதும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.