மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சண்டை போட்ட சம்பவத்தை தயாரிப்பாளர் டி.சிவா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனியிடம் பிடித்தவர் விஜயகாந்த். இவர் உடல்நலக்குறைவால் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். விஜயகாந்த் மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது என்னும் அளவுக்கு அவரது நினைவிடத்தில் தினந்தோறும் கூடும் ஆயிரக்கணக்கான மக்களே சாட்சி. விஜயகாந்த் - தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் இடையேயான நட்பு, சக நடிகர்களுடன் கொண்டிருந்த நட்பு, அனைவரையும் மதித்து நடக்கும் தன்மை என அனைத்து திரைத்துறையினரால் என்றும் நினைவுக்கொள்ளப்படும். 


இப்படியான நிலையில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் பற்றி பல சம்பவங்களை பகிர்ந்துள்ளார். 


அதில், “ஒருமுறை விஜயகாந்த் இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்தனர். இவருக்கு எதுவுமே தெரியாது என்பது திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும். விஜயகாந்துடைய சம்பளம், வாங்கியது, விற்றது சொத்துக்கள் என எல்லாமே இப்ராகிம் ராவுத்தருக்கு மட்டும் தான் தெரியும். இதனை வருமான வரித்துறையினர் சொன்னால் நம்புவார்களா? 


விஜயகாந்தை அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று உங்கள் சம்பளம் எவ்வளவு, அந்த படத்துக்கு எவ்வளவு வாங்குனீர்கள் என ஏகப்பட்ட கேள்விகள் எல்லாம் கேட்டார்கள். எல்லாவற்றுக்கும் தெரியாது என்பதையே பதிலாக கொடுத்தார் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் கடுப்பான வருமான வரித்துறை அதிகாரிகள், மிஸ்டர் விஜயகாந்த் இப்படி எல்லாத்துக்கும் தெரியாது என சொன்னால் நாங்கள் உங்களை வேறுவிதமாக விசாரிக்க வேண்டியிருக்கும் என தெரிவித்து விட்டார்கள். 


இதனைக் கண்டு டென்ஷனான விஜயகாந்த் நாக்கை மடித்துக்கொண்டு, என்னையா வேற மாதிரி விசாரிப்ப.. தெரியலன்னா அப்படித்தான் சொல்ல முடியும். வேற மாதிரி ஆயிடும் என ஆவேசமாக பேசினார். பின்னர் நாங்கள் எல்லாம் சொன்ன பிறகு தான் வருமான வரித்துறையினர் நம்பினர். இப்படி ஒரு ஆள் இருப்பாரா என அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு விஜயகாந்திடம் மன்னிப்பு கேட்டனர். 


சம்பளம் பேச சென்றால் இப்ராகிமிடம் பேசிக் கொள்ளுங்கள். யாராவது தர முடியாத சூழல் இருக்கு என சொன்னால் இப்ராகிமை கூப்பிட்டு வாங்க வேண்டாம் என சொல்லிவிடுவது தான் விஜயகாந்தின் பணியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.