ராயன்




தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராயன் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.


ராயன் படத்தின் கதை


காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். மூத்தவரான காத்தவராயன் ( தனுஷ்) தன் தம்பி தங்கச்சியின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர் 


மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ். 


கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் கடைசி தம்பி மாணிக்கம், அடிக்கடி ஏதாவது தகராறு செய்து பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் முத்து, திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கை துர்கா, எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சைலண்டாக இருக்கும் ராயன் என முதல் பாதி செல்கிறது. எதிர்பாராமல் நடக்கும் இரு ரவுடிகளுக்கு இடையிலான மோதலில் ராயனின் தம்பி முத்து மாட்டிக்கொள்ள அவனை காப்பாற்ற அசுர  அவதாரம் எடுக்கிறார் ராயன்.


இந்த கொலைகார கும்பலிடம் இருந்து ராயன் தனது குடும்பத்தை காப்பாறினாரா. ஒருவேளை ராயன்  உயிருக்குயிராக நினைக்கும் அவன் தம்பிகள் அவனுக்கே எதிராக திரும்பினால்? ஆக்‌ஷன் எமோஷன் என தொடர்கிறது ராயன் படத்தின் கதை...


தனுஷ் டைரக்‌ஷன் எப்படி




தனது 50 ஆவது படத்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க நினைத்த தனுஷின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.  நம்பகத் தன்மையான கதைக்களத்தை உருவாக்குவதற்கும் போலித்தன்மை இல்லாமல் கதாப்பாத்திரங்களை இயல்பாக உருவாக்குவதற்கும் வெற்றிமாறனின் வடசென்னை தனுஷுக்கு மிகப்பெரிய பக்கபலமாக நிச்சயம் இருந்திருக்கிறது என்று சொல்லலாம். நிதானமான ஒரு கதைக்களத்தை கட்டமைத்து கொஞ்சம் கொஞ்சமாக பில்டப் கொடுத்து ஒரு அதிரடியான இண்டர்வல் ப்ளாக் உடன் முடிகிறது முதல் பாகம்.


உண்மையில் படத்தின் இரண்டாம் பாகத்தில் மாஸ் காட்டுவது தனுஷ் இல்லை துஷாரா தான். ராயன் மற்றும் துர்காவிற்கு இடையிலான உறவின் வழி ராவணன் மற்றும் சூப்பனகைக்கும் இடையிலான உறவை புதிய கோணத்தில் காட்டியிருக்கிறார் தனுஷ்.


நடிப்பு


தனுஷின் அமைதியான சுபாவம், தேவையான இடத்தில் மாஸ், தம்பி தங்கை செண்டிமெண்ட் எல்லாம் பார்க்கும்போது ரஜினியின் பாட்சா படம் பல இடங்களில் நினைவுக்கு வருவது இயல்புதான். ஆனால் தனது கதாபாத்திரம் மட்டுமில்லாமல் படத்தில் இருக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் தனுஷ் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் கதை தொடங்கி வைப்பது சந்தீப் கிஷன்  என்றால். இரண்டாம் பாகத்தில் துஷாரா விஜயன் தனுஷைக் காட்டிலும் ஒரு படி மேலே செல்கிறார். படம் முழுக்க வரும் செல்வராகவன், இரண்டாம் பாதியில் கவனம் பெறும் எஸ்.ஜே சூர்யா என திரைக்கதையில் இருக்கும் சின்ன சின்ன தொய்வுகளை நடிகர்கள் தங்கள் நடிப்பால் எளிதாக மறைத்துவிடுகிறார்கள்


மைனஸ்


 தேவையற்ற ஆக்‌ஷன் காட்சிகளை ஒரு சில இடங்களில் தவிர்த்து டிராமாவை இன்னும் கொஞ்சம் டெவலவ் செய்திருக்கலாம். அவ்வப்போது நெல்சன் பாணியில் வரும் டார்க் காமெடிகள் நன்றாகவே வர்க் அவுட் ஆகியிருக்கின்றன என்றாலும் ஹ்யூமரில் கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டியிருக்கிறார் தனுஷ்.


செம கெத்தாக அறிமுகமாகும் பிரகாஷ் ராஜ் வழக்கமான குள்ளநரி ரோலில் சுருங்கிவிட்டது வருத்தம்பா..


ஏ  ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் மிகப்பெரிய பலம். தொடக்கத்தில் வரும் ஓ ராயா பாடல் ஆடியன்ஸூக்கு ஒரு இனிமையான வரவேற்பு. அதே நேரம் க்ளைமேக்ஸில் அடங்காத அசுரன் பாடல் ஒரு வெறியாட்டம். 'உசுரே நீ தானே' என்று ரஹ்மான் பாட அண்ணன் தங்கையான தனுஷ் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் ஒரு ஷாட்டிற்கு திரையரஙகுகளில் வரும் ரியாக்‌ஷன் ஒன்றே போதும். 


படத்தின் நிறைய காட்சிகள் இருளில் எடுக்கப் பட்டிருப்பதும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அவற்றை  ஒருவிதமான மங்கலான தன்மையில்  பதிவு செய்திருப்பதும் காட்சி அனுபவத்தை கூட்டும் அம்சங்கள். 


வழக்கமான கதை டெம்பிளெட் தான் என்றாலும் ராயன் படம் இரண்டாம் பாதியில் தனித்து தெரிவதற்கு முக்கிய காரணம் மிகைப்படுத்தல் இல்லாமல்  உணர்ச்சிகளை மிக நேர்த்தியாக கதை நெடுக கைவிடாமல் தனுஷ் கையாண்டிருக்கும் விதம்.