கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதா ரவி, வடிவேலு, செந்தில் மற்றும் பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரீ-ரிலிஸ் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படம் 2k கிட் பார்வையில் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.


படம் பார்ப்பதற்கு முன் இருந்த மனநிலை : 


பொதுவாக நான் புதிதாக வெளிவரும் படங்களுக்கு சென்று விமர்சனம் செய்வதே வழக்கம். முதன்முறையாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படத்திற்கு விமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறியவுடன் தயங்கினேன். அதுவும் முத்து திரைப்படம் என்ற உடன் முதலில் மறுத்தேன்; காரணம் அந்த திரைப்படத்தை பல முறை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டதாலே. அதன் பிறகு மனதை சற்று மாற்றி கொண்டு விமர்சனம் செய்வதற்கு ஒப்பு கொண்டேன். 


கதைக்கரு : 




கிராமத்து பிண்ணனியில் காதல், சண்டை காட்சிகள், நகைச்சுவை, மாஸான வசனங்கள் என அனைத்தும் கலந்து படைக்கப்பட்டுள்ள அசத்தல் படைப்பு முத்து. எஜமான் - பணியாள் இருவரும் ஒரே பெண்ணை காதலிக்க, அதில் இருந்து தொடங்குகிறது படம், ஃப்ளேஸ்பேக்கில் மறைக்கப்பட்ட உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆக்‌ஷன், உணர்ச்சிகள் நிரம்பி வழிந்து நகர்கிறது முத்து திரைப்படம்.


தலைவர் தலைவர்தான் : 


தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்த்திருந்தாலும் ரஜினியின் மாஸ் வசனங்களும் ஸ்டைல் மற்றும் ஸ்வேகும் பெரிய திரையில்தான் முழுமை பெற்றிருப்பதாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்ட் முதல் படத்தின் கடைசி நொடி வரை திரையரங்கில் விசில் சத்தம் அடங்கவில்லை. எளிமையான பணியாள் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் ரஜினியின் ஸ்வேகில் பஞ்சம் இருந்தது போல் தெரியவில்லை. சிம்பிளான ஸ்டோரி லைனுடன் உருவாகியுள்ள இப்படத்தை தாங்கி நிற்பதே ரஜினியின் ஸ்டைல் தான் என்றே கூறலாம்.


இளமை மாறாத வசனங்கள் :


சிறு வயதில் ரஜினியின் பட வசனங்களை கூறி கொண்டு சுற்றியதெல்லாம் நினைவில் இருக்கிறது. அந்த வசனங்களை பெரிய திரையில் பார்க்கும் போதும் அவற்றிற்கு பறக்கும் விசில்களை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ரஜினியின் ஒவ்வொரு வசனத்திற்கும் ஆரவாரம் அதிகரித்து கொண்டே இருந்தது. குறிப்பாக ‘’ கெடைக்கிறது கெடைக்காம இருக்காது”,  நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்’’ ‘’விக்கலு.. தும்மலு’’ போன்ற வசனங்களுக்கெல்லாம் ஆர்பரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.


ரஜினியின் ஆன்மீகமும் அரசியலும் :


சிறு வயதில் இருந்து முத்து திரைப்படத்தை பார்த்து வளர்ந்திருந்தாலும் அப்போது அந்த திரைப்படத்தில் இருக்கும் ஆன்மீகம் மற்றும் அரசியல் பற்றிய வசனங்களையும் பாடல் வரிகளையும் என்னால் இதற்கு முன்னதாக கண்டுபிடிக்க இயலவில்லை. தற்போது பார்க்கும் போது முத்துவின் தந்தை குடும்பத்தை துறந்து ஆன்மீகத்தை தேர்வு செய்து வடநாட்டுக்கு செல்வது, நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்’’ ”கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு” போன்ற பாடல் வரிகள் எல்லாம் ரஜினியின் ஆன்மீக ஈடுபாடு மற்றும் அரசியல் குறித்து சிந்திக்க வைத்தது.


இசையால் ஆண்ட ஏ.ஆர்.ரஹ்மான் :




படத்தில் ரஜினியின் நடிப்புக்கு இணையாக ஸ்கோர் செய்திருந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. பி.ஜி.எம், பாடல்கள் என அனைத்தும் திரையரங்கில் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்கவே மீண்டும் ப்ளே செய்யப்பட்டது. பி.ஜி.எம் என்று பார்க்கையில் அம்பலத்தான் எண்ட்ரியின் போது வரும் பி.ஜி.எம், ஒருவன் ஒருவன் முதலாளி பி.ஜி.எம் எல்லாம் தாறுமாறாக ஒலித்தது. 


கவனத்தை ஈர்த்த விசித்ரா :


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் விசித்ரா, முத்து திரைப்படத்தில் ரதி என்ற கதாபாத்திரத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அவர் திரையில் வரும் போதும் விசில்கள் பறந்தன. மேலும் வடிவேலு மற்றும் செந்திலின் நகைச்சுவை காட்சிகளுக்கும் சிரிப்பலைகள் மிதந்த வண்ணம் இருந்தது.


ஆகச்சிறந்த அனுபவம் :


அத்தனை தடவை பார்த்துவிட்டோம் அப்படி என்ன வித்தியாசமாக இருந்துவிட போகிறது என்ற பெரும்பாலனோரின் மனநிலையோடு படம் பார்க்க சென்ற எனக்கு இத்தனை அருமையான அனுபவம் கிடைக்கும் என துளியும் நினைக்கவில்லை. சில படங்கள் எத்தனை காலம் கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும். அத்தகைய படங்களில் ஒன்று தான் முத்து. நூறு முறை என்ன நூறாயிரம் முறை தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும் சரி, நிச்சயம் முத்துவை திரையரங்கில் சென்று ஒருமுறை பாருங்கள். படத்தோடு உங்கள் குழந்தைப்பருவ நினைவுகளையும் சற்று கிளறிபாரத்தது போல் இருக்கும். நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறுங்கள்..!