Aalavandhan Movie Review in Tamil:


கமல் ஹாசன் எழுத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி 2001 ஆம் ஆண்டு வெளியான “ஆளவந்தான்” திரைப்படம் 22 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில், படத்தின் விரிவான விமர்சனத்தை 2கே கிட் பார்வையில் பார்க்கலாம் வாங்க..


படம் பார்க்க செல்வதற்கு முன் நடந்தவை..


ஆளவந்தான் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது என்ற அறிவிப்பு வந்தவுடன், அப்படத்தை பற்றி அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். “ நீ அந்த படத்தை பார்த்து இருக்கியா? இந்த காலத்தில் வந்து இருக்க வேண்டிய படம் அது...இந்த முறை நீதான் இதை பார்த்துவிட்டு விமர்சிக்க வேண்டும்” என படத்திற்கு டிக்கெட் போட்டு கொடுத்தனர். ஒரு சிலரிடம் படத்தின் கதையை பற்றி  கேட்டேன். அந்த நிமிடம் வரை கமலுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அப்போதுதான் தெரிந்தது அது டபுள் ஆக்‌ஷனில் உருவாகிய படம் என்று.


கதைக்குள் மூழ்கடித்த முதல் பாதி 


தியேட்டருக்கு சென்ற உடன் ப்ளேஷ் பேக்கில் ஆரம்பித்தது படம். விஜய் குமார், நந்த குமார் என்ற இரட்டையர்களின் துயரத்துடன், பிற்காலத்திற்கு நகர்ந்தது கதை. பூவா தலையா விளையாட்டில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலி, போர்டிங் பள்ளியில் இணைந்து ராணுவத்தில் சேர்ந்து பெரிய அதிகாரி ஆகிவிட்டான்.  அவனுக்கு ஒரு காதல் கதை, சினேகிதி யார் என்று பார்த்தால், கே.ஜி.எஃப் 2 படத்தில்  ராக்கி பாயை துரத்தி துரத்தி அடித்த ரவீணா டாண்டன்தான்.



செய்தி வாசிப்பாளராக நடித்த இவர் என் கண்ணுக்கு சில சமயங்களில் நடிகை தபு போல் தென்பட்டார். “செய்தி மீடியாவில் சினிமா, கிரிக்கெட்டிற்கு இருக்கும் முக்கியத்துவம், உங்கள் ராணுவத்திற்கு இல்லை” என அவர் பேசிய வசனத்தை, ஊடக்கத்தில் வேலை பார்க்கும் என்னால் நன்றாக பொருத்தி பார்க்க முடிந்தது. அதை தொடர்ந்து, “எதிரி உன் கடவுளுக்கு பயப்படமாட்டான். ஏனென்றால் எதிரி வழிபடும் கடவுள் வேறு.” என கமல் பேசிய வசனம், என் கவனத்தை ஈர்த்தது. 


இதற்கு அடுத்து கதாநாயகி கர்ப்பமாக உள்ளதாக கூறுகிறார். அதை கேட்டவுடன் எனக்கு பெரிய ஷாக். இந்த காலத்தில் கூட, திருமணத்திற்கு முந்தைய உடலுறவை தவறாக பார்க்கும் சமூதாயத்தின் மத்தியில், 22 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு கலைஞர், பெண் கதாபாத்திரத்தை ஸ்டிரியோடைப்பை உடைக்கும் வகையில் எழுதியுள்ளார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. 
அத்துடன் இது முடிந்துவிடவில்லை, கமல் எனக்கு தொடர்ச்சியாக ஷாக் கொடுத்து கொண்டு இருந்தார்.



கமலின் அண்ணன், நந்து ஒரு அசைலத்தில் உள்ளார். அங்கு அவரை சந்திக்க ஹீரோ, ஹீரோயினுடன் செல்கிறார். பெண்ணை நம்பாதே..பெண்ணை நம்பாதே என வாயை திறத்திலிருந்து கவிதை மழையை பொழிந்து தள்ளுகிறார் வில்லன் கமல். இதில், அந்த கம்பியை ப்ரேமாக பயன்படுத்திய விதம் நன்றாக இருந்தது. அத்துடன் கல்லை எரியும் கிராபிக்ஸ் காட்சிகளும், படக்குழுவினரின் மெனக்கெடல் பிரமாதம் என்று எண்ணத்தை கொடுத்தது.


இப்போது கமலின் கல்யாணம்,  அதில் ரவீணா, ஷாம்பெயின் பாட்டிலை ஓபன் செய்யும் காட்சி அடுத்த வாவ் மொமண்டாக அமைந்தது. ஒரு பெண் அதுவும் சமூகம் கூடி இருக்கும் இடத்தில் சரக்கு பாட்டிலை வைத்து மகிழ்வதும், முற்போக்கான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 


சிரிக்க வைத்த பாடல்கள் 


அடுத்து சிரி சிரி சிரி என்ற பாடல், இதை கேட்டவுடன், “சிரி சிரி சிரி..அவன் வாயில் பெட்ரோல் ஊத்தி எரி..” என்ற சந்தானத்தின் காமெடி வசனம்தான் நியாபகத்திற்கு வந்தது. கடவுள் பாதி மிருகம் பாதி என்று எனக்கு தெரிந்த அந்த ஒரே ஒரு பாடலும் வந்தது. கொய்ராலாவின் “ஆப்பிரிக்க காட்டு புலி” பாடல் வேடிக்கையாக இருந்தது.



நந்து ஏதேதோ செய்து வெளியே வந்த பின், சூப்பர் அனிமேஷன் காட்சி காண்பிக்கப்பட்டது. இது சிறு வயதில் பார்த்த ஹீ-மேன், ஜாக்கி சான் போன்ற கார்டூன் நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டு வந்தது. நடிகையாக நடித்துள்ள மனிஷா கொய்ராலாவிடம் கடவுளாக இருக்க நினைக்கிறார் வில்லன் கமல்.  இருவருக்கும் ரொமான்ஸ் காட்டு தீயாக பரவ, மழையில் ஒரு பாடலுடன் சிற்றின்ப நடனக்காட்சியும் வருகிறது. அந்தரங்கம் எட்டிப்பார்க்கும் வேளையில், மீண்டும் பூவா தலையா விளையாட்டு வினையாக மாறி, மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை முடித்துவிடுகிறது. இந்த இடத்திலும் அனிமேஷன் காட்சி பயன்படுத்தப்பட்டு இருந்தது. குருதி வெளியேற நடக்கும் கொலை செய்யும் காட்சிகளை ராவாக காட்டாமல், அனிமேஷனில் காட்டி, ரியாலிட்டியை காட்டிய விதம் சூப்பராக இருந்தது. 



தப்பித்து செல்லும் போது, ஒவ்வொரு மாடியிலும் நிற்கும் லிப்ட், ஒவ்வொரு காட்சிகளை காட்டுகிறது. இதை பார்க்கும் போது, “அடடே யாருப்பா இந்த கமல் அதிமேதாவி அப்போவே பிறந்துட்டாரு” என்று தோன்றியது.


இருக்கையின் நுனியில் அமர வைத்த இரண்டாம் பாதி! 


இடைவேளைக்கு பின்னர், ஊட்டிக்கு செல்கிறார் கதைமாந்தர். சிறுவயதின் கசப்பான அனுபங்களை சந்தித்த கமல், வீட்டிற்குள் நுழைந்து, பீடி அடித்த கதையை விவரித்து, நந்துவின் டைரியையும் படிக்கிறார்.டைரியை படிக்க தொடங்கும் போது, கதை மீண்டும் ப்ளாஷ்பேக்கிற்கு நகர்கிறது. 



அப்பாவின் திருமணத்திற்கு மீறிய உறவால் அம்மாவின் வாழ்வு தற்கொலையில் முடிகிறது. இரண்டாவது தாயாக சித்தி என்ற பெயரில் நுழையும் அந்த நபரை இரட்டையர்கள் வெறுக்கின்றனர். “முத்தம் கொடுத்தால்..சிகரெட் வாடை அடித்தது..”, “வீட்டில் குடுத்தனம் நடக்கவில்லை குடிதான் நடந்தது..” என்பது போன்ற வசனம் சித்தி கதாபத்திரத்தை பற்றிய புரிதலை கொடுத்தது. சித்தி, தனது அப்பாவை தவிர்த்து வேறு ஒருவருடன் உறவில் இருக்கிறார் என்ற விஷயம் இருவருக்கும் தெரிய வருகிறது. விஜய், போர்டிங் பள்ளியில் படித்து வர நந்து இங்கேயே வசித்து வருகிறான். கர்ப்பமாகிவிட்டேன் என பொய் சொல்லி, கோழி இரத்ததை வைத்து கர்ப்பம் கலைந்துவிட்டது அதற்கு காரணம் நந்துதான் என சித்தி நடத்திய கபட நாடகம் அச்சுறுத்தலாக இருந்தது.



சாட்டை அடி வாங்கும் நந்து தாய் பாசத்திற்கு ஏங்குகிறான். பாதிக்கப்பட்ட அந்த சிறுவனை பார்க்க பரிதாபமாக இருந்தது. சித்தி போட்ட மொட்டையால், சக மாணவர்களின் கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளாகிறான். நந்துவின் அப்பாவிற்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக நெஞ்சு வலி வருகிறது. அப்போது போன் செய்து, சொத்துக்களை அபகரிக்க முயற்சியில் ஈடுபடுகிறாள் இதை பார்த்த நந்து, அவளை வம்பிழுக்க, பெல்டால் சரமாரியாக தாக்குகிறாள். அத்துடன் அவனை கொலை செய்யவும் முயற்சி செய்கிறாள். ஆனால், நந்து முந்திக்கொண்டு அவளின் கதையை முடிக்கிறான். 


ப்ளாஷ் பேக் முடிந்த பின், நந்து தன் அன்னியான ரவீணாவை கொல்ல முயற்சி செய்து கொண்டு இருக்கிறான். அவ்வப்போது அவன் கனவிலும் கற்பனையிலும் தோன்றும் அம்மா, பாதகம் செய்தவள் இங்கு இருக்கிறாள். அவள் வேறு என புரிய வைக்க, நந்து தன்னை தானே மாய்த்து கொள்கிறான். “நீ யாருடா என் சாவை முடிவு பண்றது? என் சாவை நான் தான் முடிவு பண்ணனும்” என்ற வசனத்திற்கு விசில் சத்தம் குவிந்தது. 


லாஜிக் ஓட்டைகள் இதிலும் இருக்கதான் செய்தது..


அன்னி தேஜஸ்வினியை கொலை செய்யும் போது நந்து லாரி, கார் என அனைத்தையும் ஓட்டுகிறார். அதுவும் கையால் அல்ல காலால். அசைலத்தில் வளர்ந்து வெளியே வந்து நந்துவிற்கு எப்படி வாகனங்களை இயக்க தெரியும்? என்பதில் லாஜிக் இடிக்கிறது. மாடியில் இருந்து கீழே அங்குமிங்கும் குதித்து டாம் க்ரூ ஸ் போன்று சாகசம் செய்தது கூட சற்று காமெடியாக இருந்தது.



இப்படத்தில் கண்களை மூடிக்கொள்ளும் அளவில் பல வயலன்ஸ் காட்சிகளும் இருந்தது. இந்த கால சினிமாவின் கொடூர காட்சிகளை பார்த்து வரும் எனக்கு, இது புதிய அனுபமாக இருந்தது. காரணம், வன்முறைக்கு பின் பெரும் எமோஷன் இருப்பதுதான். அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் பெயரில் சில இயக்குநர்கள் பாயசத்தை போடுகின்றனர். ஆனால், இந்த படக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வு நன்றாகவே உள்ளே ஊடுருவி செல்கிறது. 


கமலுக்கு ஓ போடு..


ஆகமொத்தம் இந்த படம், இந்தியா சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. முற்போக்கு சிந்தனை மட்டுமல்லாமல் கிராபிக்ஸ் காட்சிகள், எழுத்து, ஒளிப்பதிவு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, அனிமேஷன் காட்சிகள் என அனைத்தும் இதை ஏ1 க்ரேட் படமாக மாற்றியுள்ளது. ஆனால், காலத்திற்கு ஏற்ற படங்களை எடுக்காமல் முன்னோடியாக செயல்படும் கமலுக்கு இந்த படம் அப்போது கை கொடுக்கவில்லை. ஏனென்றால் 22 ஆண்டுகளுக்கு முன், இந்த படத்தை யாரும் விரும்பி இருக்க மாட்டார்கள். அப்போது நடந்த துரதிஷ்டம், ரீ-ரிலீஸ் ஆன பின் அதிர்ஷ்டமாகிவிட்டது.


இறுதியாக மக்களின் கவனத்திற்கு!


இந்த கட்டுரையின் மூலம் நான் எந்தவகையிலும் யாரையும் மது அருந்த தூண்டவில்லை. ஆனால், 22 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற கதையை எழுதிய பரந்த மனதை கண்டு இந்த விமர்சனத்தை எழுதும் போதும் கூட வியந்து கொண்டுதான் இருக்கிறேன்....