தமிழ் திரையுலகின் தரமான இயக்குனர்களில் ஒருவர் ராதாமோகன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் சட்னி – சாம்பார். யோகிபாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் கடந்த 26ம் தேதி டிஸ்னி – ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியது.
சட்னி - சாம்பார்:
குடும்பங்களை மையமாக கொண்ட மென்மையான கதைகளை கையாள்வதில் ராதாமோகன் தனித்துவமானவர். அந்த வகையில் அவரது கை வண்ணத்தில் உருவாகியுள்ள இந்த சட்னி –சாம்பார் எப்படி இருக்கிறது? என்பதை கீழே காணலாம்.
தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலா தளமான ஊட்டியின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது அமுதா கஃபே. அந்த உணவகத்தின் உரிமையாளர் நிழல்கள் ரவி. செல்வச் செழிப்பாக பெரும் புகழுடன் வாழும் அமுதா கஃபேவின் உரிமையாளர் நிழல்கள் ரவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறக்கும் தருவாய்க்கு செல்கிறார்.
கதை என்ன?
அப்போது தனது மகன் கார்த்தியிடம் ( சந்திரன்) தான் சென்னையில் இருந்தபோது ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், அந்த பெண் மூலமாக தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அந்த மகனை தான் பார்க்க வேண்டும் என்றும், அவனை குடும்பத்தில் ஒருவனாக சேர்த்துக் கொள்ளுமாறும் இது தனது கடைசி ஆசை என்றும் கூறுகிறார். அவனது கடைசி ஆசையை நிறைவேற்ற மகன் போராடுகிறார்.
நிழல்கள் ரவி தனது முதல் மனைவியை பிரிந்தது ஏன்? ஊட்டியில் மகிழ்ச்சியாக வாழும் அவருக்கு முதல் மனைவி மூலமாக மகன் இருப்பது தெரியவந்தது எப்படி? முதல் மனைவியின் மகனை நிழல்கள் ரவியின் குடும்பம் ஏற்றுக் கொண்டதா? முதல் மனைவியின் மகனை தனது குடும்பம் ஏற்றுக்கொள்ள இரண்டாவது மனைவியின் மகன் நடத்தும் போராட்டம் என்ன? தந்தையை அடியோடு வெறுக்கும் சென்னையில் வசிக்கும் மகனை ஊட்டிக்கு எவ்வாறு அழைத்து வருகின்றனர்? நிழல்கள் ரவியின் இரண்டாவது மனைவியின் மகனுக்கு அவனது காதலியின் தந்தை பெண் கொடுக்க மறுத்தது ஏன்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் எபிசோட் எபிசோடாக விடை தருகிறது சட்னி – சாம்பார்.
சிரிக்க வைக்கும் திரைக்கதை:
கதையின் மையக்கருவாக இதைப்பார்த்தால் நிச்சயம் எம்.ஜி.ஆர். காலம் தொட்டு தமிழில் இந்த கதைக்களத்தில் 100 படங்களுக்கு மேல் வந்திருக்கும். ஆனால், இந்த சிக்கலான குடும்ப போராட்ட கதையை ராதாமோகன் நகைச்சுவை பாணியில் எபிசோட்களாக கொடுத்து அசத்த வைத்திருக்கிறார்.
இந்த வெப்சீரிசுக்கு ஏன் சட்னி –சாம்பார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் நியாயமான காரணத்தை ராதாமோகன் தந்துள்ளார். சென்னையில் வசிக்கும் முதல் மனைவியின் மகனாக யோகி பாபு பிரதான நாயகனாக நடித்து நம்மை கட்டிப்போடுகிறார். அவரது யதார்த்தமான நடிப்பு, அவருக்கு உரித்தான நகைச்சுவையான உடல்மொழியும், வசன உச்சரிப்பும் நம்மை ரசிக்க வைக்கிறது. தந்தையை வெறுப்பதும், தம்பிக்காக அவர் பொறுத்துக் கொள்வதும் என பாசப்போராட்டத்தை அவருக்கே உரித்தான பாணியில் காட்டியிருப்பது சிறப்பு.
வசனமே பிரதான பலம்:
கதையின் இரண்டாவது நாயகனாக யோகி பாபுவை தனது குடும்பம் ஏற்றுக்கொள்ள சந்திரன் நடத்தும் போராட்டமும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இந்த உணர்வூப்பூர்வமான சிக்கலை நகைச்சுவையாக நமக்கு தந்ததன் மூலமாகவே ராதாமோகன் நம்மை முழு தொடரையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறார். இந்த வெப்சீரிசுக்கு மிகப்பெரிய பலமே வசனம். நல்ல கதைகளை கொண்ட பல வெப்சீரிஸ் மோசமான வசனங்களால் ரசிகர்களை வெறுப்படைய வைக்கும். ஆனால், நாம் நன்றாக பழகிய இந்த கதைக்கு பலமே பொன் பார்த்திபன் எழுதிய வசனங்கள்தான். குறிப்பாக, தமிழில் வரும் வசனங்கள் மட்டுமின்றி, இந்த தொடரில் ஆங்காங்கே ஆங்கிலத்தில் வரும் வசனங்களும் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.
அதேசமயம், வாய்விட்டு சிரிக்க வைக்கும் வசனங்களை எபிசோட் முழுக்க நிரப்பியிருக்கும் வசனகர்த்தா சில வசனங்கள் மூலம் நெற்றியில் அடித்தாற்போலவும் பதிய வைத்துள்ளார். அதற்கு பீட்டர் சொல்லும் “ஒரு ஆளை கொல்றது மட்டும் கொலை இல்ல.. ஒருத்தரரோட ஆசையை கொல்றதும் கொலைதான்” என்று சொல்லும் ஒரு வசனமே போதும்.
தீபாசங்கரின் அற்புத நடிப்பு:
இந்த வெப்சீரிசுக்கு மிகப்பெரிய பலமே தீபாசங்கர். சென்னையில் ஒரு தாயாக யாருடைய உதவியும் இல்லாமல் யோகிபாபுவை வளர்க்கும் அமுதாவாக அவரது நடிப்பு எபிசோடிற்கு எபிசோட் அவருக்காக நம்மை பரிதவிக்க வைக்கிறது. உருவக்கேலிக்காக மட்டுமே கருப்பாக, குண்டாக இருப்பவர்களை பயன்படுத்தும் நமது தமிழ் சினிமா போக்கில் அவரை பிரதான நாயகியாக காட்டி கதைக்கு பலமாக மாற்றியிருப்பதற்காகவே ராதாமோகனுக்கு தனி பாராட்டுகள். அவரை தூற்றியவர்களே அமுதா கதாபாத்திரத்தை போற்றும் வகையில் எழுதியதும் அனுபவ இயக்குனருக்கான அடையாளத்தை காட்டுகிறது.
அசத்தல் நடிப்பு:
சிறந்த நடிகரான இளங்கோ குமரவேலை ராதாமோகன் அளவிற்கு யாரும் பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். அவரது பீட்டர் கதாபாத்திரம் தொடர் முழுக்க நன்றாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ராதாமோகனின் ஒவ்வொரு படைப்பிலும் கதை நாயகன், நாயகி தவிர்த்து மற்றொரு கதாபாத்திரம் நம்மை ரசிக்க வைக்கும். அந்த வகையில், இந்த தொடரில் நம்மை ரசிக்க வைத்துள்ள கதாபாத்திரம் சுப்பையா. அனுபவ நடிகரான சார்லி தனது நடிப்பின் அனுபவத்தால் அந்த கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். குடிகாரனாக, சூதாட்டம் ஆடுபவராக, பொறுப்பற்ற தந்தையாக என அவரது நடிப்பு நம்மை மிகவும் கவனிக்க வைக்கிறது.
வெறும் யோகிபாபுவை மட்டும் சுற்றி கதையை பின்னாமல் அவர் சந்திக்கும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் வலிகளையும் நமக்கு கூறியிருப்பது கதைக்கும், நமக்கும் தேவையாக இருக்கிறது. சோபியாக வரும் வாணிபோஜன் போன்ற பல பெண்கள் இன்னும் இந்த சமுதாயத்தில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்பதற்கு அந்த கதாபாத்திரமே எடுத்துக்காட்டு. இந்த தொடரில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு நியாயமான கதாபாத்திரமாக அமைந்திருப்பது இந்த தொடருக்கு கூடுதல் பலம் ஆகும்.
குடும்பத்துடன் ரசிக்கலாம்:
இந்த கதைக்களத்திற்கு ஊட்டியில் உயிர் கொடுத்தது இந்த தொடருக்கு மிகப்பெரிய பலமாகும். யோகிபாபு, சந்திரன், வாணி போஜன் மட்டுமின்றி நிதின் சந்தியா, மைனா நந்தினி குறிப்பாக அந்த சிறுவன் அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். சந்தர்ப்ப சூழலில் மனிதர்கள் படும் ஆசைகளும், அந்த தவறுக்காக அவர்கள் அனுபவிக்கும் குற்ற உணர்வுகளுக்கும் நிழல்கள் ரவி கதாபாத்திரம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. குடும்பத்துடன் சென்று ஊட்டிக்கே சென்று விருந்து சாப்பிடுவது போல சட்னி – சாம்பார் ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, சிரித்து பார்ப்பதற்கு சட்னி – சாம்பார் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு கியாரண்டி. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிசிற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார். ஜிஜேந்திரன் எடிட் செய்துள்ளார்.