தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்கள் காலங்களை கடந்தும் வரலாற்றில் இடம்பெறும் அந்தஸ்தை பெறும். அப்படி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தவர் சசிகுமார். இயக்குநர் பாலு மகேந்திரா, பாலா, அமீர் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டார்.


அப்படி இயக்குநராக ஒரே படத்தில் உச்சிக்கு சென்ற சசிகுமார் இயக்கத்தை நிறுத்திக்கொண்டு நடிகராக பரிணாமம் எடுக்க என்ன காரணம் என்பது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். 



நான் சினிமாவுக்கு வரும் போதே ஒரு படம் இயக்கணும் அடுத்த படம் நடிக்கணும் என முடிவு எடுத்து தான் வந்தேன்.  சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு நாடோடிகள், ஈசன், போராளி என இப்படி தான் வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கணும், இயக்கணும் என்று தான் வந்தேன். அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. நான் எப்போது படம் தயாரிக்க ஆரம்பித்தேனோ அப்போதில் இருந்து எனக்கு கடன் வர ஆரம்பமானது. அந்த ஒரு சூழலில் ஒரு இயக்குநரா கடன் சுமையை எடுத்துக்கிட்டு ஸ்ட்ரெஸுடன் செய்யமுடியவில்லை.


அப்போது அந்த நேரத்தில் நடிகனாக ஓடினா தான் அந்த கடனை எல்லாம் அடைக்க முடியும் என யோசித்தேன். அப்படி ஓட ஆரம்பிச்சதுதான் என்னை இழுத்துட்டு போயிடுச்சு. நான் ஓடல என்னை ஓட வைச்சாங்க அப்படின்னு தான் சொல்லணும். 


இப்போ எனக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை. அடுத்ததா நான் ஒரு படத்தை இயக்கனும்னா 24 மணிநேரமும் அதை பத்தியே மட்டும்தான் யோசிக்கணும், சிந்திக்கணும். ஆனா ஒரு நடிகனா இருந்தா கொஞ்ச நேரம் இடைவேளை கிடைக்கும். 


சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் மிக பெரிய வெற்றியையும் பார்த்துவிட்டேன், அதே சமயத்தில் பெரிய சரிவையும் பார்த்துவிட்டேன். வெற்றிபெற்றா என்னென்ன கிடைக்குமோ அது எல்லாத்தையும் நான் முதல் படத்திலேயே பார்த்துட்டேன். எடுத்தோன சிக்ஸர் அடிச்ச மாதிரி இருந்துது. அதேபோல தான் எனக்கு தோல்விகளும் இருந்துது. அதில் இருந்து மீண்டு வரணும் என்ற அந்த விடாமுயற்சி தான் என்னை இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன். 


ஒரு வெற்றியையும் தோல்வியையும் இரண்டையுமே நான் தூரத்தில் வைச்சு தான் பார்த்தேன். அதுனால தான் அது என்னை எங்கேயும் பாதிக்கவில்லை.  அதை மண்டைக்குள்ள ஏத்திக்கிட்டு இருந்தேனா அது எனக்கு போதையாக மாறி இருக்கும். அது என்னோட மனசுல இருந்து. வெற்றி வந்த போதும்  தலையில் வைச்சுக்கிட்டு ஆடலை. அடுத்த படத்தை நோக்கி நகர்ந்து விட்டேன். அது தான் அவை என்னை பாதிக்காததற்கு காரணம் என பேசி இருந்தார் சசிகுமார்.