Raavana Kottam Review: ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘இராவண கோட்டம்’


சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்த்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் விக்ரம் சுகுமாறனின் முதல் படமான மதயானைக் கூட்டம் சாதியை மறுத்தாலும், சில இடங்களில் சாதியைத் தூக்கிப் பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில்,  இராவண கோட்டம்  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின், அதேபோன்ற விமர்சனங்கள் இந்தப் படத்துக்கும்  எழுப்பப்பட்டன. இந்த விமர்சனங்களுக்கெல்லாம் இராவண கோட்டம் பதில் அளித்ததா?  இராவண கோட்டம் திரைப்படம் எப்படி இருக்கிறது? வாங்க பார்க்கலாம்!


கதைக்கரு




இராமநாதபுரம் மாவட்டம், ஏனாதியைச் சுற்றியுள்ள தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சிறு சிறு கிராமங்கள், அங்கு மேலத் தெரு, கீழத் தெருவில் வசிக்கும் இரு வேறு சமூகத்தினர் ஒன்னுக்குள் மண்ணாக பங்காளிகளாகப் பழகி வருகின்றனர்.


இவர்களை இரு சமூகத்து தலைவர்களான பிரபுவும் இளவரசுவும் நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வழிநடத்துகிறார்கள். இதனிடையே கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை கிராமத்தில் இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினரின் முயற்சிகள் அரங்கேறுகின்றன.


சாந்தனு - ஆனந்தி காதல் இதற்கு பகடைக்காயாய் மாற, தண்ணீர் பஞ்சத்தின் மூல வேறான சீமைக் கருவேல மரக்காட்டின் ஆபத்து குறித்து கண்டறிந்து செயல்படும் பிரபுவும் இளவரசுவும் கொல்லப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? இரு பிரிவுகளிடையே கிராமத்தில் மூண்ட கலவரம் ஓய்ந்ததா என்பதே மீதிக்கதை!


1957ஆம் ஆண்டு நிகழ்ந்த முதுகளத்தூர் கலவரத்தின் பின்னணியில், சாதீய பிரச்சினை, முக்கோணக் காதல் கதை மற்றும் சில கமர்ஷியல் அம்சங்களையும் கூட்டி கதை சொல்லியிருக்கிறார்கள்.


கதாபாத்திரங்கள்


சிட்டி பையனாக மாடர்ன் உடையில் துள்ளல் நடனத்துடன் நாம் பார்த்துப் பழகிய சாந்தனுவுக்கு நேர் எதிராக, தென் தமிழகத்தில் குளிக்கக்கூட தண்ணீர் இல்லாத கிராமத்தில் கெத்தாக வலம் வரும் கிராமத்து இளைஞன் வேடம்.





பாவக்கதைகள் தங்கம் கதாபாத்திரத்துக்குப் பிறகு இந்தப் பாத்திரத்தை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளார். காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, பிரபுவுக்காக கதறி அழும் காட்சிகள், நண்பனிடம் பேச முடியாமல் வருந்தும் காட்சிகளில் சாந்தனு மிளிர்கிறார். இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர் பிரபுவும் இளவரசுவும் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர்.


பரியேறும் பெருமாள் படத்தில் வந்தது போல் இரு சமூகத்து பிரச்னை, தன்னைச் சுற்றி நடக்கும் சிக்கல்கள் புரியாமல் வெள்ளந்திப் பெண்ணாக வலம் வரும் அதே கதாபாத்திரம் கயல் ஆனந்திக்கு. இன்னும் கொஞ்சம் பக்குவப்படலாம்!


சாந்தனுவின் நண்பராக மதிமாறனாக நடித்துள்ள சஞ்சீவ் சரவணனுக்கு கனமான பாத்திரம். தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கலாம். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை செய்கின்றன.


ஒற்றைக் கையிழந்த வில்லனாக வரும் நடிகர் கதைக்குத் தேவையானதை செய்து மிரட்டி கவனம் ஈர்த்துள்ளார்.


நிறை,குறைகள்




முதல் பாதி தமிழ் சினிமா பார்த்துப் புளித்துப்போன காதல் காட்சிகளுடன் நகரும் நிலையில், இரண்டாம் பாதி வேகமெடுத்து கதையுடன் ஒன்ற வைக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இரு பிரிவினரிடையே கலவரம் தூண்டப்படும் காட்சிகள், பிரபு - இளவரசு உடல்களை வைத்துக் கொண்டு நிகழ்த்தப்படும் அரசியல் ஆகிய காட்சிகள் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. 


சாதீய கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் எனும் டைட்டில் கார்டுடன் தொடங்கினாலும்,  எங்க அய்யா பாடல், பிரபுவை சித்தரிக்கும் விதம் உள்ளிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான துதியாகவே மாறும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. முந்தைய படத்துக்கு எழுந்த கடும் விமர்சனங்களால்  பிரபுவின் அறிமுகக்காட்சி பின்னணியில் அம்பேத்கர், பெரியார் படங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.


அரிவாள், கம்பு, சாதிப் பிரச்னைகள் தாண்டிய தென் தமிழகத்து மக்களின் அடையாளங்களும் பாரம்பரிய வாழ்க்கையும் எப்போது வெள்ளித்திரையில் பதிவு செய்யப்படும் எனத் தெரியவில்லை. முதல் பாதியில் போதிய கவனம்செலுத்தி, இந்தக் குறைகளை நிவர்த்தி செய்திருந்தால்,  இராவண கோட்டம் அதன் நோக்கத்தை பூர்த்தி செய்து கவனம் ஈர்த்திருக்கும்!