நடிகை நமீதா தனது பிறந்தநாளை முன்னிட்டு 1008 தாமரைகளைக் கொண்டு சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.
பிரபல தமிழ் நடிகையும் பாஜவைச் சேர்ந்தவருமான நடிகை நமீதா நேற்று தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து வீரேந்திர சௌத்ரி என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நமீதா.
அதன் பின் 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நமீதா முந்தைய தேர்தல்களில் பாஜவுக்காக தேர்தல் பரப்புரைகளிலும் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நமீதா, முன்னதாக சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 1008 தாமரைப்பூக்களைக் கொண்டு சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நமீதா பேசியதாவது:
என் பிறந்தநாள் அதற்காக வாழ்க்கையில் முதன்முறையாக பெரிய பூஜை செய்துள்ளேன். இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பானது. என் குழந்தைகளுடன் சேர்ந்து இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன்.
கர்நாடகாவுக்கு நான் போய் வந்தேன். நான் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் அங்கு எதிர்வினையாற்றினர்.பாஜக இந்த முறை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என நான் நினைக்கிறேன். பாஜகவுக்கு நல்ல நேர்மறையான எதிர்வினை கிடைக்கிறது. அங்கு பாஜக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டும். அதற்காகதான் இந்த சிறப்பு பூஜை” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளை எழுப்பிய நிலையில், என் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மட்டுமே வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த நமீதா, ”அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறி விடைபெற்றார்.