மசாலா மற்றும் ஆக்ஷன் படங்கள் எடுப்பதில் பிரபலமானவரான இயக்குனர் சுராஜ், இயக்குநர் சுந்தர்.சியிடம் துணை இயக்குநராக பணியற்றியவர். மூவேந்தர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய படம் தான் குங்கும பொட்டு கவுண்டர். 
  
கங்கா கௌரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஷ்ணுராம் தயாரிப்பில், இயக்குநர் சூராஜ், சாய் சுரேஷ் என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு இயக்கிய படம் தான் 'குங்கும பொட்டு கவுண்டர்'. சத்யராஜ், கௌசல்யா, ரம்பா, நந்தினி, கவுண்டமணி உள்ளிட்டோரின் நடிப்பில் சென்டிமெண்ட் கலந்த நகைச்சுவை படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.    



படிப்பறிவு இல்லாத சத்யராஜ் மகனை நல்ல பிரபலமான பள்ளியில் சேர்ப்பதற்காக போராடுகிறார். பெற்றோர் படித்தவர்களாக இருந்தால் மட்டுமே அப்பள்ளியில் சேர்க்க முடியும் என்ற நிபந்தனை இருந்ததால் நன்றாக படித்த ஒரு பெண்ணான கௌசல்யாவின் உதவியை நாடுகிறார். கௌசல்யாவை தனது மனைவியாக நடிக்க சொல்கிறார். அந்த உண்மை சத்யராஜ் மனைவியான ரம்பாவுக்கு தெரிய வர பிரச்சனை சூடு பிடிக்கிறது.  


சத்யராஜ் ஏன் இப்படி செய்ய திட்டமிட்டார் என்பதற்கு இடையில் ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி. டபுள் ஆக்ஷனில் சத்யராஜ் படிப்பறிவு இல்லாதவர் என்றாலும் மிகவும் பண்பான பணக்காரராக ஏழைகளுக்கு உதவியவர் மகனை பள்ளிக்கு அனுப்பவில்லை. கல்வியறிவு இல்லாததால் சொத்து அனைத்தையும் மகன் பறிகொடுக்க செல்வத்தை இழந்த அதிர்ச்சியில் உயிர் விடுகிறார். இனி வரும் தனது சந்ததிகளாவது படிக்க வேண்டும் என சத்தியம் வாங்கிக் கொள்கிறார். 


சத்யராஜ் - கவுண்டமணி காம்போவில் காமெடி சொல்லவே தேவையில்லை. சத்யராஜின் கோயம்புத்தூர் லொள்ளு பேச்சுடன் கவுண்டமணியின் டைமிங் காமெடியும் அவர்கள் அடிக்கும் லூட்டியும் படத்தை தூக்கி நிறுத்தியது. படித்த பெண்ணை தேடும் படலம் சரியான கூத்து தான்.சென்டிமெண்ட் என்பதை எல்லாம் கடந்து மிகவும் ஜாலியாக படம் பார்த்த ஃபீல் கொடுத்தது குங்கும பொட்டு கவுண்டர். பாடல்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.


இயக்குநர் சுராஜ் மசாலா படங்களுக்கு பெயர் பெற்றவர் என்றாலும் ஒரு பிரேக்கிற்கு பிறகு அவர் இயக்கிய தலைநகரம், படிக்காதவன் படங்களை தவிர்த்து அலெக்ஸ் பாண்டியன், சகலகலா வல்லவன், கத்தி சண்டை, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.