இயக்குநர் ராம் சங்கையா இயக்கி பசுபதி நடித்திருக்கும் படம் தண்டட்டி. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். படம் குறித்தான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.


அறிமுக இயக்குனர் ராம் சங்கைய்யா இயக்கியிருக்கும் படம் தண்டட்டி. பசுபதி, ரோஜினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து சாம் சி.எஸ் பின்னண் இசை கொடுத்திருக்கிறார்.


ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராம் சங்கைய்யா “இந்த கதையில் நடிப்பதற்கு இரண்டு நடிகர்களை நான் மனதில் வைத்திருந்தேன். ஒருவர் மம்மூட்டி மற்றொருவர் பசுபதி. மம்மூட்டி அளவிற்கு என்னால் செல்ல முடியவில்லை என்றாலும் பசுபதி சார் எனக்குக் கிடைத்தார்” என்றார். 


 அவரைத் தொடர்ந்து  நடிகர் பசுபதி, தயாரிப்பாளர் வெங்கடேசன், நடிகை ரோகினி அம்மு அபிராபி , இசையமைப்பாளர் கே. எஸ். சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஆகியோர் பேசினார்கள், நடிகர் விவேக் பிரசன்னா பேசியபோது மேலும் சில சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.


”தங்கமான மனிதர்கள் சேர்ந்து தண்டட்டி பற்றி சொல்லியிருக்கும் படம் தண்டட்டி” என்று தனது பேச்சை ஆரம்பித்தார் விவேக் பிரசன்னா


“ பிரின்ஸ் பிக்சர்ஸுடன் இது எனக்கு இரண்டாவது திரைப்படம். இந்தப் படத்தில் நடிகர் பசுபதி மற்றும் ரோகினி இருக்கிறார்கள் என கேள்விப்பட்டதுமே நடிப்பதற்கு நான் சம்மதித்து விட்டேன். மிகவும் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். ஒரு குடிகாரனாக நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்திற்காக தாடி வளர்க்கச் சொல்லி இயக்குநர் என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் அப்போது க்ளீன் ஷேவ் லுக்கில் இருந்தேன். குடிகாரன் என்றால் தாடி கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா என்று நான் அவரிடம் கேட்டேன். மேலும் எனது ஊரில் க்ளீன் ஷேவ் செய்த ஒரு குடிகாரரை எனக்கு தெரியும் என்று சொல்லி இயக்குநரின் மனதை மாற்றி இந்தப் படத்தில் க்ளீன் ஷேவ் லுக்கில் இருக்கும் ஒரு முழு நேர குடிகாரனாக நடித்திருக்கிறேன்” என்றார். 


 தண்டட்டி திரைப்படம் வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கி சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்குப் பின் பசுபதி நடித்து வெளியாகும் திரைப்படம் தண்டட்டி.