கேரள படங்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன? என்பதற்கு உதாரணம் தான், ‛பயணிகள் கவனிக்கவும்’. மலையாளப்படங்கள் பெரும்பாலும் மனிதம் பேசும். அப்படிப்பட்ட கதையை தான் அவர்கள் எடுத்து வருவார்கள். இங்கு தான், ஹீரோ, வில்லன் என அதே தூசை தட்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த ஆரவாரத்தில், இது மாதிரியான படங்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும். அதனால் தான் படத்தின் தலைப்பே, ‛பயணிகள் கவனிக்கவும்’ என்று வைத்திருக்கிறார்கள் போல!
2019ல் கேரளாவில் கொண்டாடப்பட்ட ‛விக்ருதி’ படத்தின் ரீமேக் தான் ‛பயணிகள் கவனத்திற்கு’. சமூக வலைதளத்தின் சக்தி என்ன, அதன் தீங்கு என்ன, அதன் விளைவு என்ன, என்பது தான் கதைக்கரு. வாய் பேச முடியாத ஒரு சம்பதி, அதே போல வெளிநாட்டு வேலையில் இருக்கும் இளைஞர் ஒருவர், சென்னைக்கு விடுமுறைக்கு வரும் இளைஞர், இவர்கள் தான் கதாபாத்திரங்கள். மெட்ரோ ரயிலில் அசதியில் உறங்கும் வாய் பேச முடியாத தந்தையை, எதார்த்தமாக பார்க்கும் அந்த இளைஞர், அவர் குடிபோதையில் படித்திருப்பதாக நினைத்து போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்.
அந்த போட்டோ வைரல் மீம்ஸாக மாறி, அவரை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது தான் படம். வாய் பேச முடியாத குடும்பத்தலைவனாக விதார்த் வாழ்ந்திருக்கிறார். அடித்து சொல்லலாம், இது தான் அவருக்கு ‛கம் பேக்’ படம். ஒவ்வொரு காட்சியிலும் கண்ணீர் வரவழைக்கும் முயற்சியில் அவர் இறங்குவது, படத்திற்கு பெரிய பலம். இந்த விதார்த், இத்தனை நாட்கள் எங்கு போனார் என்பது தான் கேள்வி.
அவருக்கு மனைவியாக வரும், மற்றொரு செவித்திறன் , பேசும் திறனற்ற கதாபாத்திரத்தில் லட்சுமி ப்ரியா, பார்க்கவே மனது முழுக்க நிறைகிறார். அந்த இரு கதாபாத்திரங்களும் நல்ல குடும்பத்திற்கான உதாரணமாக தெரிகின்றனர். வெளிநாட்டிலிருந்து வரும் இளைஞராக கருணாகரன். அவருக்கும் நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். குடும்பத்தோடு உருகுவதும் சரி, தவறு செய்து விட்டு குற்ற உணர்ச்சியில் மூழ்கும் போதும் சரி, அவரும் நன்கு நடித்திருக்கிறார்.
தீர விசாரிக்காமல் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் பதிவுகளின் பாதிப்புகளை, இரு பக்கத்திலிருந்தும் எடுத்து வைத்திருக்கிறார்கள். போலீசில் புகாரில் சிக்கி, சிறைக்கு செல்லும் தருவாயில், விதார்த்திடம் கருணாகரனின் தாய் கெஞ்சும் போதும், அதற்கு விதார்த் ரியாக்ட் செய்யும் போதும், கல் நெஞ்சமும் உருகும். ‛மன்னிப்பு’ தான், அவனுக்கு நான் தரும் தண்டனை என விதார்த் எழுதி தெரிவிக்கும் போது, உடைந்து போய் அவர் முன் வந்து வணங்கி நிற்கும் கருணாகரனின் குற்ற உணர்ச்சி, பார்க்கும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் கேள்வி கேட்கும்.
இந்த காலகட்டத்திற்கு ஏற்ற திரைப்படம். சமூக வலைதளம் என்றுமே ஷாக் அடிக்கும் வயர் தான்; அதை மின்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, அதை ஆடையாக அணிய முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை கூறியிருக்கிறார்கள். அந்த நல்ல மெஜேஜ்ஜிற்காக ‛பயணிகள் கவனிக்கவும்’ பார்க்கலாம். அந்த வகையில் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் பாராட்டை பெறுகிறார். படத்தில் குறைகள் குறைவு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என நிறைய நிறைகள் இருக்கிறது. ஆனால் இது போன்ற படங்கள் கவனிக்கப்படாமல் போனால், அது தான் குறையாக இருக்கும். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‛பயணிகள் கவனிக்கவும்’ , தாமதமாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கவனிக்கப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது.