Parking Movie Review in Tamil
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் ராம்குமார் பாலாகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பார்க்கிங் படம், இன்று(டிசம்பர் 1, 2023) வெளியாகியுள்ளது. இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு காணலாம்.
கதை : டைட்டிலுக்கு ஏற்றவாரு, பார்க்கிங் எனும் சிறு விஷயம் எப்படி பூதாகரமாக வெடிக்கும் என்பதே படத்தின் ஒரு வரிக்கதை. இதில் ஈஸ்வர் (ஹரிஷ் கல்யாண்), இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்) ஆகிய இருவரும் ஒரே காம்பவுண்டில் இருக்கும் வாடகை வீட்டில் இருக்கின்றனர். ஈஸ்வர் வாங்கும் புதிய காரால், அங்கு பல ஆண்டுகளாக இருக்கும் இளம்பரிதிக்கு சிக்கல் ஏற்படுகிறது. வாய் தகராறில் ஆரம்பிக்கும் சின்ன பிரச்சினையுடன் ஈகோவும் கலந்து எதிர்பாராத விஷயங்கள் நடிக்கிறது. இந்த முன்னணி கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் ஈகோ பிரச்சினையில் யார் வெல்கிறார்கள்? என்பதை மீதிக்கதை விவரிக்கிறது.
நடிகர்களின் பங்கு என்ன?
இதுவரை ரொமாண்டிக் கதைகளில் அசத்திய ஹேண்ட்சம் ஹீரோ ஹரிஷ் கல்யாண், திரில்லர் கதையிலும் மிரட்டி இருக்கிறார். ஒரு பக்கம் மனைவியிடம் அன்பாக இருப்பது மறு பக்கம் ஈகோவால் கொந்தளிப்பது என புதுவித நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தின் மற்றொரு தூணாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வரட்டு கெளரவம், தன்மானம் கொண்ட வயதானவராக நடிக்கவில்லை. வாழ்ந்து காட்டியுள்ளார். அரசு ஊழியராக இருக்கும் இவரின் கஞ்சத்தனம், பெண் பிள்ளையை பொத்தி பொத்தி வளர்க்கும் விதம் ஆகியவற்றை நிஜ வாழ்க்கையுடன் பொருத்தி பார்க்க முடிகிறது.
மேயாத மான் புகழ் இந்துஜா ஷங்கர் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணின் காதல் மனைவியாக நடித்துள்ளார். நிதானமான கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுள்ளார். வீட்டின் உரிமையாளரான இளவரசு, எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக ரமா, அவரின் மகளாக பிரார்த்தனா நாதன் ஆகியோரும் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக நடித்துள்ளனர்.
படத்தின் மற்ற அம்சங்கள்
படத்தில் பெரிதாக பாடல்கள் இல்லையென்றாலும் சாம் சி.எஸின் பின்னணி இசை, படத்தோடு கலந்து மக்களை ஒன்றவைக்கிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு துல்லியமாக உள்ளது.
படம் தியேட்டர் மெட்டிரியலா?
நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் நுட்பமாக தனது எழுத்தில் சேர்த்துள்ளார் இயக்குநர் ராம்குமார் பாலாகிருஷ்ணா. அத்துடன் தன் கதைக்கான கதாபாத்திரங்களையும் ஆழமாக எழுதியுள்ளார். நண்பர்கள், குடும்பத்தினர் என யாருடன் வேண்டுமென்றாலும் சென்று இப்படத்தை காணலாம். சண்டை சச்சரவு, வைலன்ஸ் காட்சிகளை விரும்பாதவர்களுக்கு கொஞ்சம் கடி இருக்கலாம். ஆக மொத்ததில், ஈகோவே உருவான ஈஸ்வர், இளம்பரிதியின் நடிப்பு அடிப்போலி.!