பிரபல மூத்த மலையாள நடிகை சுப்புலட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று (நவ.30) உயிரிழந்தார். அவருக்கு வயது 87.


தமிழ் சினிமாவில் பீஸ்ட், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சுப்புலட்சுமி ( R Subbalakshmi).


கேரள மாநிலம், திரிசூரில் 1936ஆம் ஆண்டு பிறந்தவரான சுப்புலட்சுமி பிரபல இசைக்கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். கலைத்துறையில் முக்கியப் பங்காற்றி வந்த சுப்புலட்சுமி, ஒரு டப்பிங் கலைஞராக சினிமா துறையில் தன் பயணத்தினைத் தொடங்கியுள்ளார்.


தன் 66ஆவது வயதில் 2002ஆம் ஆண்டு கேரள சினிமாவில் கால் பதித்த சுப்புலட்சுமி, 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். மலையாள சினிமா தொடங்கி, தமிழ், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் என பல மொழிகளில் நடித்துள்ள சுப்புலட்சுமி, மலையாள சினிமாவில் பிருத்விராஜ் தொடங்கி பலருடன் அன்பான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக வலம் வந்தார். ராப்பகல், கல்யாணராமன்,  திலகம்,  ராணி பத்மினி உள்ளிட்ட பல மலையாள வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 


மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் அவரது கடைசி படமான தில் பேச்சாராவில் நடித்து ரசிகர்களைப் பெற்ற சுப்புலட்சுமி, தமிழில் ராமன் தேடிய சீதை, விண்ணைத் தாண்டி வருவாயா, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன் இவர் சுஷாந்த் உடன் மகிழ்ச்சியாக ஆடி பாடும் வீடியோ வெளியாகி நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்தது.


 






மலையாள சினிமா தொடங்கி நடிகர்கள் விஜய், ரன்பீர் கபூர், சுஷாந்த் என பல மொழிகளில் ரசிகர்களைக் கவர்ந்த இவர் கடந்த சில நாள்களாக வயதுமூப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (நவ.30)  உடல்நலக்குறைவால் சுப்புலட்சுமி உயிரிழந்தார்.


சுப்புலட்சுமிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில், இவரது இளைய மகள் தாராவும், பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் மூத்த நடிகையான சுப்புலட்சுமியின் மறைவுக்கு ரசிகர்களும் திரை உலகினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Annapoorani Review: சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடித்த நயன்.. அறுசுவை விருந்து படைத்தாரா.. அன்னபூரணி விமர்சனம்!


Jigarthanda Double X OTT Release: காத்திருந்தது போதும்! நெட்ஃப்ளிக்ஸில் களமிறங்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - எப்போது தெரியுமா?