அரவிந்த ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத் குமார், காஷ்மீரா பர்தேசி நடிப்பில் மீண்டும் ஓர் சிலை கடத்தல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘பரம்பொருள்’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


 




கதைக்கரு 


கதாநாயகன் அமிதாஷின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவரைக் காப்பாற்ற பல லட்சங்கள் தேவைப்படுகிறது. எந்த வழியிலாவது பணத்தை சம்பாதித்து தன் தங்கையை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வீட்டில் திருட முயற்சிக்கிறார். அது போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமாரின் வீடாக இருக்கிறது.


கூடிய விரைவில் நிறைய பணத்தை சம்பாதித்து விட்டு போலீஸ் வேலையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சரத்குமாரின் கையில் சிக்கிக் கொள்கிறார் அமிதாஷ். அவருக்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட சரத்குமார், அமிதாஷுடன் ஒரு டீலிங் போட்டு கொள்கிறார்.


ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த சிலை உடைய இதனைத் தொடர்ந்து நடக்கும் அதிரடி திருப்பங்கள் என்ன,  சரத்குமாரின் ஆசை நிறைவேறியதா..? அமிதாஷ் தன் தங்கையின் உயிரை காப்பாற்றினாரா..? என்பதே மீதி கதை.


நடிகர்களின் நடிப்பு 


‘போர் தொழில்’ திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சரத்குமார், பரம்பொருளில் முற்றிலும் மாறுபட்டு பணத்தாசை பிடித்த சுயநலமான போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய தேர்ந்த நடிப்பினால் கதாபாத்திரத்துடன் நச்சென்று பொருந்தியுள்ளார்.


ஆரம்பத்தில் கதாபாத்திரத்துடன் ஒட்டாமல் ஓரமாக நின்றாலும் கதை நகர நகர கேரக்டருடன் வந்து ஒட்டி கொள்கிறார் அமிதாஷ். சிலை செய்யும் கலைஞராக சில இடங்களில் வந்து போகும் காஷ்மீரா பர்தேசி இன்னும் கொஞ்சம் கூட நடித்திருக்கலாம். வெளிநாட்டு சிலை கடத்தல்காரர்களாக வரும் வின்செண்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர். மற்ற நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வாகவே இருக்கின்றனர்.




கதையின் கலவை : 


சரத்குமாரின் இயல்பான நடிப்புடன் அவர் பேசும் வசனங்கள் அவ்வப்போது சிரிப்பை வர வைக்கிறது. பாலாஜி சக்திவேல் - சரத்குமார், அமிதாஷ் இடையே ஆன ஒரு உரையாடல் காட்சி திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. தேவையான இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் பிரமாதம். பாடல்கள் எதுவும் கதையோடு ஒன்றவில்லை. பி.ஜி.எம்மிலும் சொல்லும்படி புதிதாக எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


வீக் எண்டிற்கு ஏற்ற விருந்து :


என்னதான் முதல் பாதியின் சில இடங்களில் பரம்பொருள் தடுமாற்றம் கண்டிருந்தாலும் இடைவேளைக்கு பின் காட்சிகள் சூடு பிடிக்கின்றன. ஒரு சிலையை வைத்து இரண்டு மணி நேரம் கதையை ஓட்டும் இயக்குநர் யாரும் எதிர்பார்த்திராத க்ளைமாக்ஸுடன் படத்தை முடித்து இருக்கிறார்.


மொத்ததில் உங்கள் போரிங்கான வீக்கெண்டை விறுவிறுப்பாக மாற்ற பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத பரம்பொருளை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.