அபூர்வ சகோதரர்கள், கார்கி  உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ், சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66.


சந்தானபாரதியின் சகோதரர்




80களின் பிரபல திரைப்படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த ஆர்.எஸ்.சிவாஜி, “தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார். இறுதியாக இவர் சென்ற ஆண்டு சாய் பல்லவியின் அப்பாவாக நடித்த 'கார்கி' படம்  மூலம் பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர். சந்தானத்தின் மகனான ஆர்.எஸ்.சிவாஜி, 1956ஆம் ஆண்டு பிறந்தார். பிரபல இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி இவரது உடன்பிறந்த சகோதரர் ஆவார்.


கமல்ஹாசனுடன் திரைப்பயணம்


1981ஆம் ஆண்டு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமான ஆர்.எஸ். சிவாஜி, 
தன் திரை வாழ்க்கையின் தொடக்க காலத்தில் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து கவனமீர்த்து வந்தார்.


மீண்டும் ஒரு கோகிலா, விக்ரம், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், குணா, கலைஞன், என பல கமல்ஹாசன் படங்களில்  காமெடி மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துள்ள ஆர்.எஸ்.சிவாஜி,  அவருக்கு உற்ற நண்பர்களுள் ஒருவராகவும் வலம் வந்துள்ளார்.




“சார், நீங்க எங்கயோ போய்ட்டீங்க” எனும் தன் அபூர்வ சகோதரர்கள் பட காமெடி வசனம் மூலம் இன்றும் பலரையும் சிரிக்க வைத்து வருகிறார். 


அபூர்வ சகோதரர்கள் முதல் கார்கி வரை


கடந்த சில ஆண்டுகளில் நயன் தாராவின் கோலமாவு கோகிலா, தாராள பிரபு,  நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, நடிகை சாய் பல்லவியின் கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்து கவனமீர்த்த ஆர்.எஸ்.சிவாஜி, கார்கி படத்தில் ஆச்சர்யப்படுத்தும் வகையில்  தன் கரியரின் இறுதி காலத்தில், இமேஜ் பார்க்காமல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைக் குவித்தார்.


நேற்று இவர் இறுதியாக யோகி பாபுவுடன் நடித்துள்ள 'லக்கி மேன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற உலக சினிமா விழாவில் ஆர்.எஸ். சிவாஜி கலந்துகொண்ட நிலையில், இன்று அவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வந்துள்ள தகவல் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஆர்.எஸ்.சிவாஜியின் இறுதிச் சடங்குகள் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் திரைத்துறையினரும் தமிழ் சினிமா ரசிகர்களும் ஆர்.எஸ். சிவாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Jailer OTT Release: ஓவரா கலெக்‌ஷன் அள்ளிட்டாங்க போல.. ஒரு மாதத்துலையே ஓடிடியில் வெளியாகும் ஜெயிலர்: தேதி அறிவிப்பு