ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயிலர் ஓடிடி ரிலீஸ்


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சுதந்திர தின விடுமுறை நாள்களைக் குறிவைத்து பான் இந்தியா திரைப்படமாக வெளியான ஜெயிலர் திரைப்படம், முதல் வாரத்திலேயே சுமார் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.


தொடர்ந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் ஜெயிலர் திரைப்படம், 525 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், கிட்டத்தட்ட 600 கோடிகள் வசூலை இப்படம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஓடிடி தளத்தில் ஜெயிலர் விரைவில் வெளியாக உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒரு மாதத்துக்கு ஓடிடி ரிலீஸ்


திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று ஜெயிலர் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது






நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் தான் இதுவரை 500 கோடிகளைக் கடந்த தமிழ் படமான இருந்து வந்த நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படம் 500 கோடிகள் வசூலைக் கடந்த படமாக உருவெடுத்துள்ளது.


மொத்தமாக 625 கோடிகள் வசூலை 2.0 எட்டிய நிலையில், ஜெயிலர் இந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை 600 கோடிகள் வசூலை ஜெயிலர் எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.


கார், செக் தந்த கலாநிதி மாறன்


மற்றொருபுறம் ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியைக் கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சனுக்கு செக் மற்றும் கார்களை சன் பிச்சர்ஸ் நிறுவனரும் தயாரிப்பாளருமான கலாநிதி மாறன் நேற்று வழங்கினார்.


நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது பங்குத்தொகையாக ரூ.100 கோடிகளும், இயக்குநர் நெல்சனுக்கு ஒரு கோடி ரூபாய் செக்கும் வழங்கப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


மேலும், நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்ட கார்களில் BMW X7 காரை அவர் தேர்ந்தெடுக்கும் வீடியோவும், நெல்சனுக்கு போர்ஷே கார் வழங்கப்படும் வீடியோவும் வழங்கப்பட்டது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.


படக்குழு


நடிகர் ரஜினிகாந்துடன் பிற மொழி சூப்பர் ஸ்டார்களான மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகம் ஆகியோரும் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர்கள் வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ஹூக்கும், ரத்தமாரே உள்ளிட்ட பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் வெளியானது முதல் படத்தின் பின்னணி இசையும் கவனமீர்த்து இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


இந்நிலையில், குறுகிய காலத்தில் ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.