தீபக் குமார் மிஸ்ராவின் இயக்கத்தில், இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ் ‛பஞ்சாயத் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் இது. செம ஹிட் அடித்த இந்த தொடரின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு, திடீரென வந்து சேர்ந்தது பஞ்சாயத் 2.
உ.பி.,யின் கடைகோடியில் உள்ள ஒரு கிராமத்தில், பிடித்தமே இல்லாமல் வேலைக்கு வரும் ஊராட்சி செயலாளருக்கும், பெண் ஊராட்சி தலைவரின் கணவர் மற்றும், ஊராட்சி உதவியாளர், ஊராட்சி துணை தலைவர் ஆகியோரிடையே நடக்கும் காமெடி கலாட்டா தான் ஒட்டுமொத்த கதையும்.
முழு நீள இந்தி தொடரான இதில், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் சப் டைட்டில் இருப்பதால் முதல் பாகம் செம ஹிட் அடித்தது. இரண்டாம் பாகம் வெளியான பிறகும், சிறிது நாட்கள் கழித்தே தமிழ் சப்டைட்டில் இணைக்கப்பட்டது. அதன் பின், வழக்கமான எதிர்பார்ப்போடு அனைவரும் தொடரை தொடர ஆரம்பித்தனர்.
முதல் பாகத்தில் புதிதாக வந்த ஊராட்சி செயலாளருடன் எவ்வாறு ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஒன்றிணைகிறார்கள், அவர்களுக்குள் ஏற்படும் பாசப் பினைப்பு ஆகியவை தான் கதை. இரண்டாம் பாகத்தில், அதே ஒற்றுமையோடு தொடங்கும் கதையில், அடுத்த ஊராட்சி தலைவருக்கு ஆசைப்படும் சக கிராம வாசி, ஈகோ பிரச்னையில் ஊராட்சி நிர்வாகத்தை அவமதிக்கும் எம்.எல்.ஏ., என சிரிப்பு சீரிஸ், கொஞ்சம் சீரியஸ் சீரிஸ் ஆகியுள்ளது.
வழக்கமான காமெடிகள் இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் சோகம், பிரிவு, அழுகை என எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது முதல் பாகத்தோடு ஒப்பிடும் போது, முற்றிலும் வேறுபட்டது. கடந்த சீசனில் ஊராட்சி தலைவரின் மகளான ரிங்கியை ஒரு சீனில் கூட காட்டாமல், பெயரை மட்டுமே பயன்படுத்தி பாகத்தை முடித்தார்கள். இந்த பாகத்தில் ரிங்கி கதாபாத்திரம் முக்கியத்துவமாக உள்ளது.
ஊராட்சி செயலாளரை பாதுகாப்பது, பாசம் காட்டுவது என வழக்கமான பாஃர்மட்டில் பயணித்து, இறுதியில் அவருக்கு பணி மாறுதல் ஏற்படும் அளவிற்கு நிலை மோசமாகும் போது, அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதோடு இரண்டாம் பாகம் முடிகிறது. ஒரு கடைகோடி கிராமத்தின் வாழ்வியலை, வழக்கத்தை, எதார்த்தத்தை இதை விட எளிமையாக யாரும் காட்ட முடியாது. அது முதல் பாகத்திலேயே கிட்டத்தட்ட நிறைவேறிய விசயம்.
இரண்டாம் பாகத்தில் விட்டதை தொட்டிருக்கிறார்கள். ஜிதேந்திரகுமார், நீனா குப்தா, ருகுபீர் யாதவ், ஃபைசல் மாலிக், சந்தன் ராய் என , கடந்த சீசனில் நடித்த அதே பாத்திரங்கள், அதே நிலை கொஞ்சமும் மாறாமல் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் இருந்த ஏதோ ஒன்று, இரண்டாம் பாகத்தில் குறைகிறது. அது காமெடியாக கூட இருக்கலாம்.
மற்றபடி, உபி.,யில் என்ன நடக்கும், எப்படி நடக்கும், எதெல்லாம் நடக்கும் என்பதை நிர்வாக ரீதியான காட்சிகளாக எளிதில் காட்டியிருக்கிறார்கள். கிராமத்து அரசியலை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் இந்த தொடர், முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகம் பார்க்காதவர்கள், அதை பார்த்து விட்டு இரண்டாம் பாகம் பார்த்தால், புரியும், பிடிக்கும்.