அதர்வா நடிப்பில் 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் அதர்வாவுடன் பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதனுடன் திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் நடிகர் அதர்வா.


அண்மையில் அதர்வா, ஸ்ரீ கணேஷ் இருவரும் பேட்டி அளித்தனர். 






அதர்வா பேசுகையில், “சினிமாவில் 12 வருஷம் கடந்ததே தெரியலை. ஒரு ரோலர் கோஸ்டர் போல இந்தப் பயணம் இருக்கு.ஒவ்வொரு படத்துக்கும் முடிக்க எடுத்துக் கொண்ட காலம் அதிகம். உதாரணத்துக்கு பரதேசி படம் மட்டுமே மூன்று வருஷம் நடித்தேன். இப்படிக் காலம் போனதே தெரியலை.ஆனால் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா இப்போதும் எனக்கு நல்ல நண்பர்.அவங்க படம் தேசிய விருது பெறுவது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார்.


8 தோட்டாக்கள் படத்துக்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு ஸ்ரீ கணேஷின் அடுத்த படம் வெளியாக இருக்கிறது, ஸ்ரீகணேஷ் பேசுகையில், “எட்டுதோட்டாக்கள் என்னைச் சுற்றி இருக்கும் மக்கள் கதைகளைக் கேட்டு உருவானது. படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம் எல்லாம் அப்படி உருவானதுதான். குருதியாட்டம் படத்தை எடுத்து முடிப்பதற்குள் நிறைய தடங்கல்களைக் கடந்தோம். நிறைய பேர் முதுகில் குத்தினார்கள். அவற்றை பற்றி இங்கே பேசவில்லை. ஆனால் அதெல்லாம்தான் இந்தப் படம் உருவாகக் காரணம். என் போராட்டங்கள் வழியாக இல்லாமல் என் சாதனைகள் வழியாக அறியப்பட விரும்புகிறேன்” என்கிறார். 


குருதியாட்டம் கபடி விளையாட்டுப் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் கபடிப் போட்டியில் வென்ற ஒரு இளைஞர் கோப்பையைக் கையில் ஏந்தியபடியே மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்தது குறித்த இருவரும் அவர்கள் போன்ற வீரர்களுக்கு இந்தப் படம் மரியாதை செய்யும் எனக் கூறினார்கள்.