சரிபோதா சனிவாரம் விமர்சனம்
நானி , எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் சரிபோதா சனிவாரம் . அபிராமி , அதிதி பாலன் , பி சாய்குமார் , சுபலேகா சுதாகர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். விவேக் ஆத்ரேயா இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படம் சூர்யாஸ் சேட்டர்டே என வெளியாகியுள்ளது. நானியின் 31 ஆவது படமாக 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.
சரிபோதா சனிவாரம் கதை
சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அதிகமாக கோபப்படும் இளைஞனாக வளர்கிறான் சூர்யா(நானி). சூர்யாவின் அம்மா புற்றுநோயால் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க இருக்கிறார். தான் இறப்பதற்குள் தனது மகன் மற்றும் மகளுக்கு சொல்ல வேண்டிய முக்கியமானவற்றை எல்லாம் சொல்கிறார். சூர்யாவிடன் தனது கோபத்தைக் கட்டுபடுத்த அவன் அம்மா ஒரு வழி சொல்கிறார். ஒவ்வொரு முறை தனக்கு கோபம் வரும்போது அதை எல்லாம் வாரத்தில் ஒரு நாள் மட்டும் காட்டவேண்டும். எவ்வளவு கோபம் வந்தாலும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தனது கோபத்தை வெளிகாட்டுவேன் என சூர்யா அவருக்கு சத்தியம் செய்துகொடுக்கிறார்.
வாரம் முழுவதும் அமைதியாக இருந்துவிட்டு தன்னை கோபப்படுத்துபவர்களின் பெயர்களை டைரியில் எழுதிவைத்துக் கொள்வது. சரியாக சனிக்கிழமை ஆனதும் ஒவ்வொருத்தராக தேடி போய் அடித்து நொறுக்குவது என ஹீரோ அறிமுகத்துடன் தொடங்குகிறது படம்.
மறுபக்கம் தனது அண்ணனிடம் இருந்து தனக்கு சேர வேண்டிய சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க போராடுகிறார் இன்ஸ்பெக்டர் தயாநந்த்( எஸ்.ஜே.சூர்யா). தனது அண்ணன் மேல் அவருக்கு ஏன் இவ்வளவு இந்த பகை என்பதை எஸ்.ஜே சூர்யாவுக்கே உரிய பாணியில் ஒரு காட்சியில் சொல்லப்படுகிறது.
அரசியல்வாதியான தனது அண்ணன் மீது கோபம் வரும்போதெல்லாம் அப்பாவி மக்களை போட்டு புரட்டிப்போட்டு அடித்து கொடுமை செய்கிறார். அதே போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக வந்து சேரும் கல்யாணி ( பிரியங்கா மோகன்) தான் சூர்யா சின்ன வயதில் இருந்து காதலித்து வரும் அத்தை மகள்.
கோபத்தை கட்டுப்படுத்த முடியாத இந்த இரண்டு ஆண்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதற்கான சூழல்களை அமைத்து ஆக்ஷன் நிறைந்த ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
அதிகபட்சமான கோபம்னா என்னனு தெரியுமா ஒருத்தரை பயப்படுத்துவது இல்லை ஒருத்தருக்கு தைரியம் கொடுப்பது என்கிற படத்தின் வசனம் தான் ஹீரோவுக்கும் வில்லனுக்குமான வித்தியாசம்.
விமர்சனம்
புதுப்புது ஐடியாக்களுக்கு தெலுங்கு சினிமாக்களில் எப்போது பஞ்சமே இருந்ததில்லை. அந்த வகையில் சுவாரஸ்யமான ஒரு ஐடியாவாக இருந்தாலும் அதில் தேவைக்கதிகமான துணைக்கதைகளை சேர்த்து கலந்தடித்திருக்கிறார் இயக்குநர்.
எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திபடுத்த வேண்டும் என்று இயக்குநர் கொஞ்சம் சீரியஸான சபதம் எடுத்தது போல் அம்மா செண்டிமெண்டில் தொடஙகும் கதை , அக்கா செண்டிமெண்ட் , மாஸ் காட்டும் ஆக்ஷன் , காதல் , வில்லன் , வில்லனுக்கு ஒரு அண்ணன் , அடிமைபடுத்தப்பட்ட மக்களை காப்பாற்றும் நாயகன் , கடைசியில் அப்பா செண்டிமெண்ட் என முருகன் பூமியைச் சுற்றிவந்தது போல் ஒரு ரவுண்ட் வருகிறது. போகுமிடமெல்லாம் நானும் வருவேன் என்பது போல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் காதை கிழிக்கும் இசையுடன் பின்னாடியே வருகிறார்.
இதற்கிடையில் சண்டைக்காட்சிகளுக்கு தேவைப்படுவார்கள் என்று கூடுதலாக சில வில்லன்களும் படம் முழுக்க வந்துகொண்டே இருக்கிறார்கள்.
எதார்த்தமான கதைகளில் நானி மிக இயல்பாக வெளிப்படுத்தும் நடிப்பு இந்த மாதிரியான வழிந்து திணிக்கப்பட்ட பில்டப் படங்களில் பெரிதாக கவனத்தை ஈர்ப்பதில்லை. பிரியங்கா மோகனுக்கு படம் முழுவதும் வரும் முக்கியமாக கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் தனக்கே உரிய க்யூட்னெஸ்ஸோடு செய்திருக்கிறார்.
எஸ்.ஜே சூர்யா
எப்போதும் போல் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் தனியாக தெரிகிறார் நம் எஸ்.ஜே.சூர்யா. ஒரு வித்தியாசமான கேரக்டரை எழுதவேண்டும் என்றால் எஸ்.ஜே சூர்யாவை மனதில் வைத்து எழுதினாலே போதும் போல. இந்த படத்திற்கும் மாநகரம் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் சின்ன சின்ன வித்தியாசங்களை காட்டியிருக்கிறார்.
ஸ்டண்ட் காட்சிகளில் இசையும் ஸ்லோ மோஷன் இருந்த அளவிற்கு எடிட்டிங் கொஞ்சம் கண்டினியூட்டியோடு இருந்திருக்கலாம். ஓரளவிற்கு மேல் இதுதான் கதை என்று தெரிந்துவிட்ட பின் முடிந்த அளவிற்கு க்ளைமேக்ஸில் ஹீரோ வில்லன் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சி வரும்வரை நாம் ஆர்வமாக இருப்பது போல் நடிக்க வேண்டியதாக இருக்கிறது.
ரிஸல்ட்
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தைப் போல் இப்படத்தின் கதைக்களவும் ஒரு சுவாரஸ்யமான ஐடியா. ஆனால் மாவீரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்த காரணம் சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் அதில் கொஞ்சம் நம்பகத்தன்மைக்காக எதார்த்தத்தோடு நெருக்கமாக கையாண்டிருந்தார் இயக்குநர். ஆனால் எதார்த்தமான கதையான சரிபோதா சனிவாரம் கொஞ்சம் சூப்பர் ஹீரோ படம் அளவிற்கு பில்டப் கொடுப்பதாலேயே அது சலிப்பானதாக மாறிவிடுகிறது.