எந்த பெரிய பில்டப்பும் இல்லாமல், கூச்சல் குழப்பம் இல்லாமல் கூலாக இன்று வெளியானது நானே வருவேன். செல்வராகவன்-தனுஷ்-யுவன் கூட்டணியில் நீண்ட நாட்களுக்குப் பின் வரும் படம் என்பதால், அதுவே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. படம் தொடங்கியதும் ஹாலிவுட் ட்ராமா படங்களை போல மெல்ல நகர்கிறது. இரட்டை சிறுவர்களில் ஒருவன் சைக்கோ போல இருக்கிறான். தந்தையை கொல்கிறான்; குடும்பத்திலிருந்து விலகி நிற்கிறான். இரட்டையர்கள் ஒன்றாக இருந்தால், ஒரு உயிர் பிரியும் என ஜோதிடர் சொல்ல, சைக்கோ சிறுவனை கோயிலில் விட்டுவிட்டு மற்றொரு மகனோடு செல்கிறார் தாய். 


அந்த குழந்தை என்ன ஆனான் என்பது தெரியாமல், 20 ஆண்டுகளை கடந்து புதிய கதை பிறக்கிறது. மனைவி, மகள் என மகிழ்வான குடும்பத்தோடு இருக்கும் தனுஷ். திடீரென மகளின் தோற்றத்தில் மாற்றம். அமானுஷ்ய சக்தியின் வேலை என தெரிய, அது யார் என பார்த்தால், சோனு என்கிற பெயரில் ஒரு குழந்தையின் ஆவி தனுஷ் மகள் மீது இருக்கிறது. அது ‛கதிர்’ என்கிற தனது அப்பாவை கொலை செய்தால் தான், தனுஷ் மகளிடமிருந்து வெளியேறுவேன் என்கிறது. 



மகளுக்காக அந்த கதிரை தேடி கொலை செய்ய செல்கிறார் தனுஷ். கொலை செய்தாரா, கதிர் என்கிற கதாபாத்திரத்திடம் இருக்கும் ஆவியின் தம்பி காப்பாற்றப்பட்டாரா என்பது தான் கதை. கதிர்-பிரபு என்கிற இரட்டையர் தான் , இரட்டை தனுஷ்கள். சைக்கோ கதிர் தான் முதலில் காட்டப்பட்ட சைக்கோ சிறுவன். வடமாநிலத்தில் ஜில்லென்ற மலைபிரதேசத்தில் வாய் பேச முடியாத மனைவி, இரட்டை குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த கதிர், ஒரு கட்டத்தில் தனக்குள் இருக்கும் சைக்கோ தனத்தால் சிலரை வேட்டையாட, அதை அவரது குழந்தை பார்க்க, அதன் பின் நடந்த மாற்றங்களும், அதில் ஒரு குழந்தையும், மனைவியும் பலியாக, எஞ்சியுள்ள மகனுடன் அவர் தனியாக வசிக்கும் ப்ளாஷ்பேக் உள்ளிட்டவை இடையிடையே வருகிறது. 


படம் தொடங்கும் போது அது செல்வராகவன் படமாகத் தான் தொடங்கியது; பின்னர் அது மிஸ்கின் படமாக மாறியது. அதன் பின்... ராகவா லாரன்ஸ் படம் போல நகர்ந்து கொண்டிருந்தது. அப்புறம் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென அஜய் ஞானமுத்து படமாக மாற துடித்தது. இறுதியில் ஒரு வழியாக மீண்டும் செல்வராகவன் படமாக மாற்றப்பட்டது. 


நானே வருவேன்... என்கிற தலைப்பு ஒரு பேய் படத்திற்கான தலைப்பு. படமும் பேய் படம் போல தான் தோன்றியது. ஆனால், திரைக்கதைக்கு பேயை துணைக்கு அழைத்திருக்கிறார்கள். மற்றபடி பேய் இருக்கு... ஆனா இல்லை! இடைவேளை விடும் போது, ‛வாவ்... செம்ம...’ என்று தான் தோன்றுகிறது. இடைவேளைக்குப் பின் இரண்டு தனுஷ், இரண்டு குழந்தைகள், இரட்டை குழந்தைகள், இரு ஜானர் என எல்லாமே இரண்டாக வந்து, படத்தின் வேகத்தை குறைத்திருப்பதை உணர முடிகிறது. 


செனக்கெட எதுவும் இல்லை; குறிப்பிட்ட நேரத்தில்(2 மணி நேரம்) படத்தை முடித்த வகையில் செல்வராகவன் வெற்றி பெற்றிருக்கிறார். இன்னும் 15 நிமிடம் நீட்டி முழக்கியிருந்தால் கூட, ட்ரோல் பட்டியலில் படம் இணைந்திருக்கும். அந்த வகையில் நானே வருவேன் தப்பித்தது. படத்தை இரு தோல்கள் தாங்கியிருக்கிறது. ஒன்று, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா. மற்றொன்று ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். எந்த ஃப்ரேமும் வீணாகவில்லை; எந்த ஃப்ரேமையும் பி.ஜி.எம்., விட்டு வைக்கவில்லை. பாடல்கள் ஓகே. 






செல்வராகவன், துணைக்கு வந்து, வந்த வேகத்தில் மறைந்து விடுகிறார். அவரவது இறந்து போகும் கதாபாத்திரம்; ஆனால் யோகிபாபு உடன் இருந்தும், அவ்வளவு நேரம் தான் வருகிறார். அவரோடு பிரபு போட்டி போடுகிறார்... ஃப்ரேமில் வரும் நேரத்திற்காக. இந்துஜா... தனுஷ் மனைவியாக ஜொலிக்கிறார். அப்பாவும் மகளும் தான் நெருக்கம் என்பதால், இந்துஜா சீன்கள் நறுக்கப்பட்டுவிட்டன. 


பொன்னியின் செல்வன் மாதிரி பெரிய எதிர்பார்ப்பு கொண்ட படத்தோடு மோதும் அளவிற்கு பயங்கரமான படமா என்று கேட்டால், அதை பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும். அதே நேரத்தில் படம் தேறாதா என்று கேட்டால், அந்த ரகம் இல்லை. பார்க்கும் படியான படம் என்று தான் சொல்ல வேண்டும். இந்திய அளவில் ஒரு படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது அந்த படத்தோடு போட்டி போட்டால், அது தரமான படமாக தான் இருக்கும் என சினிமா ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற, சாதூர்யமான யுக்தியோடு படத்தை களமிறக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. படத்தில் தனுஷ் சம்பளத்தை தவிர பெரிய செலவு இருப்பதாக தெரியவில்லை; எப்படி பார்த்தாலும் லாபம் தான் கிடைக்கப் போகிறது. நானே வருவேன்... விரும்பினால் படம் பார்க்க நீங்களும் வருவீர்கள்!