நடிகர் தனுஷின் நானே வருவேன் படம் வெளியானதை முன்னிட்டு தியேட்டர்களை திருவிழா நடக்கும் இடமாக தனுஷ் ரசிகர்கள் மாற்றியுள்ளனர். 






துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில் படம் இன்று தியேட்டர்களில் வெளியானது. 






நாளை தமிழ் சினிமாவின் 50 வருட கனவான பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ள நிலையில் நானே வருவேன் படம் வெளியானதால் என்ன நடக்குமோ என தனுஷ் ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. 






பல இடங்களில் காலை 4 மணி காட்சிகள் இல்லாமல் 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், சில ஊர்களில் மட்டும் சிறப்பு காட்சிகள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதலே தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர். கட் அவுட், பேனர், மேளதாளம் என தியேட்டர்களை திருவிழா நடக்கும் இடமாகவே ரசிகர்கள் மாற்றி விட்டனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 






மேலும் நானே வருவேன் படம் செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் ஆக அமைந்துள்ளதாகவும், படம் சைக்கோ த்ரில்லரா, த்ரில்லர் படமா என புரியவேயில்லை. ஆனால் செல்வா மாஸ் காட்டி விட்டார் என ட்விட்டர் விமர்சனங்களும் ஒரு பக்கம் வரத் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் தயாரிப்பாளர் தாணு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.