Yaadhum Oore Yaavarum Kelir in Tamil: அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரு நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் தடைகளை தாண்டி 2 ஆண்டுகளுக்குப் பின் வரும் மே 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதன் விமர்சனத்தைக் காணலாம். 


கதைக்கரு


நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகும் மக்களின் வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் விளக்கும் படமாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அமைந்துள்ளது. புனிதன் என்ற பெயரில் வலம் வரும் இலங்கை தமிழரான விஜய் சேதுபதி தன்னுடைய இலக்கை அடைய தனக்கென  ஒரு குடிமகன் அடையாளம் வேண்டும் என நினைக்கிறார். ஆவணங்கள் படி அவர் “கிருபாநதி”யாக உருவெடுக்கிறார். அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் மகிழ்திருமேனி, கிருபாநதியை கொல்ல நினைக்கிறார். இதற்கு காரணம் என்ன? இலக்கை அடைய ஒரு அகதியாக விஜய் சேதுபதி என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்? என்பதே இப்படத்தின் கதையாகும். 


நடிப்பு எப்படி?


விஜய் சேதுபதி தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும் அழுத்தமில்லாத காட்சி அமைப்பால் அவை அனைத்தும் நம் மனதில் ஒட்ட மறுக்கிறது. மறைந்த சின்ன கலைவாணர் விவேக்கை மீண்டும் திரையில் பார்ப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. 


படம் எப்படி?


நிலம், நாடு, அரசியல்  போன்றவற்றால் மக்கள் எவ்வாறு பிரிக்கப்படுகிறார்கள்? அகதிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? அவர்களின் வலிகள், எதிர்பார்ப்புகள் என்ன என்பதை சொல்ல முயன்ற இப்படம் அதில் பாதியளவே வெற்றி பெற்றிருக்கிறது. படத்தின் 2 ஆம் பாதி தான் உயிர் என்னும் போது அதனை இன்னும் அழுத்தமாக காட்சிகளின் வழியே சொல்ல முயற்சித்திருக்கலாம்.


இப்படியான ஒரு கதையைப் பேசும் போது அதற்கு வசனம் எவ்வளவு முக்கியமானது. அதனை சிறப்பாக கையாண்டுள்ளனர். குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மிகச்சிறப்பாக பேசப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி பேசும் வசனம் சபாஷ்..! நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக இருக்கும் மக்களின் வலிகளை படம் பார்ப்பவர்களின் கண்கள் கலங்கும்படி செய்து விடும் என்பது நிச்சயம். சொல்லப்போனால் அகதிகள் என்றாலும் அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 


படத்திற்கு பாடல்கள் பெரிய அளவில் தேவைப்படாத ஒன்றாகவே உள்ளது. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை சில இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. மொத்தத்தில் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்க்கையின் வலிகளை சொன்ன ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரவேற்கத்தக்க படங்களில் ஒன்று..!