பாலிவுட் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய இரண்டாவது திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உருவெடுத்துள்ளது.


தி கேரளா ஸ்டோரி:


கடந்த மே 5ஆம் தேதி வெளியாகி பெரும்  சர்ச்சைகளைக் கிளப்பிய  திரைப்படமாக உருவெடுத்த தி கேரளா ஸ்டோரி திரைப்படம்,  பாலிவுட்டின் இரண்டாவது அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக உருவெடுத்துள்ளது. அதா ஷர்மா, சித்தி இத்னானி,  தேவதர்ஷினி, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் இப்படத்தை இயக்கியுள்ளார்.


மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியானது முதலே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் என பல அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்றொருபுறம் இப்படத்துக்கு ஆதரவுகளும் இணையத்தில் குவிந்தன.


தடையும், வரிவிலக்கு:


மேலும், தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசியதைவிட இப்படத்தில் இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பல அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் இப்படத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டன.


மேலும் மேற்கு வங்கத்தில் இப்படம் தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் போதிய லாபம், கூட்டம் இல்லாததால் இப்படம் இனி திரையிடப்படாது என படம் வெளியாகி இரண்டே நாள்களில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவித்தன. ஆனால் ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.


வசூலில் புதிய சாதனை:


இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான 12 நாள்களில் 156.69 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.  மேலும் 13ஆம் நாளான இன்று  சுமார் 9.25 கோடிகள் வரை வசூலிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


 






இந்த ஆண்டு பாலிவுட்டில் அதிக வசூலைக் குவித்த படமாக நடிகர் ஷாருக்கானின் பதான் படம் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலித்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில் நடிகர் ரன்பீர் கபூரின் தூ ஜூட்டி மெய்ன் மக்கார் திரைப்படம் இந்தியாவில் 144.64 கோடிகளும், சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கா ஜான் திரைப்படம் மூன்று வார இறுதியில் இந்தியாவில்
110.03 கோடிகளையும் வசூலித்தது. 


இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரன்பீர் கபூர், சல்மான் கான் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை முறியடித்து இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் வசூலித்த இரண்டாவது படமாக தி கேரளா ஸ்டோரி உருவெடுத்துள்ளது.