பகத் பாசில் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிவருவதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதனுடைய நீட்சி தான், மலையன்குஞ்சு திரைப்படம். இடிக்கி மாவட்டத்தில், எலக்ட்ரீசனாக உள்ள பகத், தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். மற்றவருக்கு தொந்தரவு தர மாட்டார்; மற்றவர் தொந்தரவை ஏற்கவும் மாட்டார். வித்தியாசமான, அதே நேரத்தில் எதார்த்தமான கதாபாத்திரமாக வலம் வருகிறார்.
அவர் வீட்டு அருகே பழங்குடியின குடும்பம் ஒன்றும் வசிக்கிறது. அவர்களுக்கு குழந்தை பிறந்து , அந்த குழந்தை அழும் போதெல்லாம், அதன் சத்தம் தன் வேலையை கெடுக்கும் போது, ஆத்திரத்தில் கொதிக்கிறார் பகத். இதனால் ஒரு கட்டத்தில் அந்த குழந்தையின் தந்தைக்கும், பகத்திற்கும் சண்டை வந்து, போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் செல்கிறது.
எப்படி யாரோடும் ஒட்டாமல் வாழும் பகத்திற்கு, அவரது தந்தையின் தற்கொலை தான் காரணம் என்கிற பின்னணி சொல்லப்படுகிறது. திருமண ஏற்பாட்டில், தனது தங்கை வேறு ஒருவருடன் காதல் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியதால், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டதும், தந்தை தற்கொலையை பார்த்ததில் மன அழுத்தம் ஏற்பட்டு, பகத் தவித்து வருவதும் தெரிகிறது.
அவரத தாயை தவிர வேறு யாருடனும் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் பகத், ஒரு கட்டத்தில் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரியில் சிக்கி, அதிலிருந்து அவர் மீண்டு, அவர் வெறுத்து ஒதுக்கிய குழந்தையை அவரே காப்பாற்றி வெளியேறுவதும், இறுதியில் , அந்த குழந்தையும், அவரும் யாரும் இல்லாமல் தனித்து நிற்பதுமாக முடிகிறது கதை.
ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு சாடிஸ் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக நடித்திருக்கிறார் பகத். புரோட்டா கடையில், அனைவரும் ஊற்றிய பின் தன்னிடம் வரும் சால்னாவை கீழே தட்டி விட்டு, புதிய சால்னா வாங்குவது, குழந்தை பெயர் சூட்டும் விழாவிற்கு செல்லும் போது தன்னைப் பார்த்து குரைக்கும் நாயை, விழா முடிந்து போகும் போது, ஓங்கி மிதித்து விட்டு திரும்புவது என அவரது கதாபாத்திரத்தை அழகாக காட்சிகளால் காட்டியிருக்கிறார் இயக்குனர் சஜிமோன் பிரபாகர்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. முழு படையலுக்கு காத்திருந்தவனுக்கு, பாயாசத்தோடு பந்தி கிடைத்த மாதிரி, தனது திறமையை நிரூபிக்க அவருக்கு நல்ல வாய்ப்பு. கதைக்கான படத்தில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார் ஏ.ஆர். ஒளிப்பதிவை பொருத்தவரை, மகேஷ் நாராயணன், இடுக்கியின் அழகை, இரவும், பகலுமாக அள்ளி அள்ளி தந்திருக்கிறார். ஜூலை 22 ம் தேதி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியானாலும், ஆங்கில சப்டைட்டில் இருப்பதால், எளிதில் அறிந்து கொள்ளலாம்.
மனிதனின் நேசம், அவனின் பாசம், பாசத்தால் அவன் சந்திக்கும் ஏமாற்றம் என ஒரே வட்டத்தில் மனிதாபிமானத்தையும் சேர்ந்து மலையன்குஞ்சு உருவாக்கப்பட்டுள்ளது. ‛பொன்னி மோலே’ என்று க்ளைமாஸில் கதறி கதறி பகத் அழும் காட்சிகள், நம்மை அறியாமல் உருக வைக்கிறது. நல்ல நடிப்பு, நல்ல இயக்கம், நல்ல இசை , நல்ல ஒளிப்பதிவு என பல நல்ல விசயங்கள் படத்தில் உள்ளன. அதே நேரத்தில், வழக்கமான மலையாள படங்களின் ‛ஸ்லோ’ திரைக்கதை , நமக்கு கொஞ்சம் பொறுமையிழக்கச் செய்யலாம். மற்றபடி, மலையன்குஞ்சு, மனக்கு இதமான படம் தான்.