பார்வையாளர்களை தியேட்டருக்கு மீண்டும் அழைத்து வரும் விதமாக சென்னையில் உள்ள கமலா தியேட்டர் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும் இன்றளவும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்காக இடமாக இருந்த தியேட்டர்கள் காலப்போக்கில் திருமண மண்டபங்களாக மாறிய கதைகளும் அரங்கேறி வந்தன. அதேசமயம் தியேட்டர்களுக்கு படம் பார்க்க மக்களை வரவழைக்கும் பொருட்டு சலுகை விலையில் டிக்கெட்டுகள், பெண்களுக்கு தனி காட்சிகள் என தியேட்டர் நிர்வாக மாஸ் காட்டுவது உண்டு.
நிலைமை இப்படியிருக்க 2020 ஆண்டு நிகழ்ந்த கொரோனா பரவலால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டது. நோய் தொற்று அச்சத்தால் மக்கள் தியேட்டருக்கு வர பயந்தனர். அவர்களை மீண்டும் வரவைக்கும் பொருட்டு விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மக்கள் தியேட்டருக்கு படையெடுக்க தொடங்கினர். கொரோனாவால் சுற்றுலாத்தலங்கள் மூடியிருக்க மக்களுக்கு மீண்டும் தியேட்டரே பொழுதுபோக்கு இடமாக மாறியது. இதனால் பழைய தியேட்டர்கள் புது தொழில்நுட்ப வசதிகளுக்கு அப்டேட் ஆனது. கிராமப்புற தியேட்டர்கள் கூட ஏசி வசதி பெறத் தொடங்கியது.
2021 ஆம் ஆண்டு இரண்டாம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு நடப்பாண்டில் வீரமே வாகை சூடும், வலிமை, ஆர்.ஆர்.ஆர்., எதற்கும் துணிந்தவர், டான், விக்ரம், யானை உள்ளிட்ட படங்கள் வரிசையாக வந்ததால் தியேட்டர் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து கோப்ரா, விருமன், வெந்து தணிந்தது காடு, திருச்சிறம்பலம் ஆகிய படங்கள் வெளியாவதால் மீண்டும் தியேட்டர்களின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் இயங்கும் கமலா சினிமாஸில் புதன்கிழமை தோறும் டிக்கெட் விலை ரூ.99 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காசி டாக்கீஸில் புதன்கிழமையில் இந்த சலுகை விலை டிக்கெட் நடைமுறையில் உள்ள நிலையில் இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்