LEO Review Tamil :


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லியோ”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதன் விமர்சனத்தை நாம் காணலாம். 


லியோ படத்தின் கதை


காஷ்மீரில் தனது மனைவி சத்யா, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்வை கழித்து வருகிறார் பார்த்திபன். ஒரு பக்கம் விலங்கு நல ஆர்வலர், மறுபுறம் காபி ஷாப் பிசினஸ் என அமைதியான மனிதராக இருக்கும் பார்த்திபன், தன் குடும்பத்தினர் மீது கைவைத்தால் கொலைவெறி கொண்ட மனிதராக மாறி விடுகிறார். அப்படி ஒரு திருட்டு கும்பலுடன் மோத போய் அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவுகிறது. தான் செய்த சம்பவத்தால் குடும்பத்துக்கு ஆபத்து இருப்பதை தெரிந்து கொண்டு பார்த்திபன் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள நினைக்கிறார்.


இப்படியான நிலையில் கேங்ஸ்டரான ஆண்டனி தாஸ் பார்த்திபனின் போட்டோவை பார்த்து விட்டு அவரை "லியோ தாஸ்"  என நினைத்து நெருங்குகிறார். ஆனால் தான் லியோ இல்லை என பார்த்திபன் மறுக்க, விடாமல் அவரை லியோ தான் என ஒப்புக்கொள்ள சொல்லி  ஆண்டனி தாஸ் நெருக்கடி கொடுக்கிறார். இந்த கலவர பூமியில் லியோ தாஸ் யார்?.. ஆண்டனி தாஸ் லியோவை தேடும் காரணம் என்ன? ... பார்த்திபன் தான் லியோ என்றால் அவர் ஏன் நடிக்கிறார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்கிறது "லியோ". 


நடிப்பு எப்படி?


விஜய்யை ஏன் ஆக்ஷன் ஹீரோவாகவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதை சொல்லி விடும் அளவுக்கு அசத்தியுள்ளார். முழு படமும் அவரை சுற்றியே நகரும் நிலையில் லியோ, பார்த்திபன் ஆகிய இரண்டு கேரக்டர்களுக்கும் விஜய்  முடிந்த வரை வித்தியாசம் காட்டி நியாயம் சேர்த்துள்ளார்.




இதற்கு அடுத்து திரையில் தன் மிரட்டுவது ஆண்டனி தாஸ் ஆக வரும் சஞ்சய் தத் வில்லத்தனம் தான். இதனை தாண்டி த்ரிஷா, அர்ஜுன், மடோனா செபாஸ்டியன்,மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட கேரக்டர்களை  கதையின் நகர்த்தலுக்கு வைத்து கச்சிதமாக காய் நகர்த்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். 


மொத்தத்தில் படம் எப்படி?


லோகேஷ் படம் என்றால் சொல்ல வேண்டுமா.. படம் முழுக்க வன்முறை ஆட்டம் தான். பழைய பாடல்கள், மாஸ்டர் பட ரெஃபரன்ஸ்கள்  என முதல் பாதியில் மிகப்பெரிய  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை சற்று சலிப்பையே ஏற்படுத்துகிறது. படத்தின் ஹைலைட்டே லியோ தாஸ் கேரக்டர் தான் என்றாலும் பெரிய அளவில் அழுத்தமில்லாத கிளைமேக்ஸ் நெருடலாகவே உள்ளது.  லோகேஷ் யுனிவர்ஸில் லியோவும் இணைந்துள்ள நிலையில், விஜய்க்கு டஃப் கொடுக்க சஞ்சய் சத், அர்ஜுன் போன்ற அதிரடி வில்லன்கள் இருந்தும் அவர்களுடனான சண்டை காட்சிகள் சட்டென்று முடிந்து விடுவது ஏமாற்றமே. ஆனால் தளபதி மணிக்கணக்கில் அடியாட்களுடன் சண்டை போடுவது என்ன நியாயமோ..!




அதேபோல் த்ரிஷா உடனான காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் இருவருக்குமான நீண்ட உரையாடல் வரும் காட்சி எந்த வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை. மேலும் படத்தை தாங்கி பிடிக்கும் அனிருத் இசை, அன்பறிவ் சண்டை பயிற்சி, மனோஜ் ஒளிப்பதிவு ஆகியவை சரியாக இருந்தும் சொல்ல வந்த விஷயத்தை இழுத்தடிக்காமல் விரைவாக சொல்லியிருந்தால் லியோவை இன்னும் அதிகமாக கொண்டாடி இருக்கலாம்.