நடிகர் விஷால், சுனைனா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம்  ‘லத்தி’.  பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்;  இந்தப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்;


 


 


                                             


கதையின் கரு: 


சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்த முருகானந்தம் (விஷால்) பிரச்சினை ஒன்றின் காரணமாக  பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருக்கிறார்; அவருக்கு பரிந்துரை செய்து மீண்டும் அவரை காவல் பணியில் சேர்த்து விடுகிறார் பிரபு; இதற்கிடையே பிரபுவின் மகளிடம் பிரபல ரவுடியான சுறாவின் மகன் வெள்ளை ( ராணா) அநாகரிகமாக நடந்து கொள்ள, அதனை தட்டிக்கேட்க முயலும் பிரபுவின் முயற்சி தோல்வியில் முடிகிறது. 


ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தும் கூட, மகளிடம் அப்படி நடந்து கொண்டவனை எதுவும் செய்யமுடியவில்லையே என்ற குற்ற உணர்வில் தவித்து வரும் பிரபுவிடம், ஒரு கட்டத்தில் வெள்ளை தனியாக சிக்க, அவரை முகத்தை மூடி, லத்தி ஸ்பெஷலிஸ்ட் ஆன முருகானந்தத்தை வைத்து பிரபு வெளுத்து எடுக்கிறார். 


இதனையடுத்து, தன்னை அடித்தவனை கொன்றே தீருவேன் என்று முருகானந்ததை ஒரு பக்கம் வெள்ளை வெறிகொண்டு தேட, இதற்கிடையே இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு, பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு தெருவில் வீசப்படுகிறார். இந்த வழக்குக்கும், வெள்ளைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?, வெள்ளையிடம் முருகானந்தம் சிக்கினாரா? இந்த பிரச்னைக்கு நடுவே மாட்டிக்கொள்ளும் முருகானந்தின் மகனான ராசுவுக்கு என்ன ஆனது? உள்ளிட்டவற்றிற்கான பதில்கள்தான் லத்தி படத்தின் கதை!


கவனம் ஈர்த்த விஷால் 


‘ஆக்‌ஷன்’ ‘சக்ரா’ ‘எனிமி’ ‘வீரமே வாகை சூடும்’ என தொடர்தோல்வி படங்களை கொடுத்த விஷாலுக்கு  ‘லத்தி’ நல்லதொரு படமாக வந்திருக்கிறது; உயர் அதிகாரிகளிடம் கான்ஸ்டபிளாக திணறுவது, மனைவியின் அன்புக்கு அடங்கி போவது, மகனின் அன்பில் கரைவது, ஆக்‌ஷன் காட்சிகளில் வழக்கம் போல அதகளம் செய்வது என நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் விஷால் ;


விஷாலின் மனைவியாக வரும் சுனைனா அழகு. பொறுப்பான மனைவியாக அவர் வெளிப்படுத்திருக்கும் நடிப்பு மிளிர்கிறது. வெள்ளையாக வரும் ராணா மற்றும் அவரது அப்பா கதாபாத்திரத்தில் ஆழம் இல்லை. எப்போதும் ஸ்கோர் செய்யும் முனீஸ் காந்த் இதில் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்.  இன்ன பிற கதாபாத்திரங்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. 


ஏமாற்றிய யுவன் 


படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் இயக்குநர் வினோத் குமாரும் மற்றும் சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்னும்தான். படத்தின் இறுதியில் ரெளடிகளிடமிருந்து விஷால் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் என்றாலும், அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால், வினோத் கட்டமைத்திருக்கும் காட்சிகள், 2 ஆம் பாதியில் சில காட்சிகளை தவிர்த்து பார்க்கும் போது இப்படம் சுவாரசியமானதாகவே அமைந்திருக்கிறது. அதே போல 2 ஆம் பாதியை முழுக்க முழுக்க க்ளைமேக்ஸாகவே சித்தரித்திருப்பது  சோர்வை தருகிறது.


இறுதியில் நடிக்கிறேன் என்ற பெயரில் விஷாலின் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு செயற்கையாக இருக்கின்றன. பீட்டர் ஹெய்னின் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுகின்றன. க்ளைமேக்ஸின் மெனக்கெடலுக்கு பாராட்டுகள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்  ‘ஊஞ்சல் மனம் பாடல்’ அழுகு.. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருக்கலாம். ஆக மொத்ததில் லத்தி நிச்சயம் ஏமாற்றத்தை தராது என்பது மட்டும் உண்மை.