ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து ஆர்.ஆர்.ஆர். படத்தின் பாடல், குஜராத் மொழி படம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருதுகள்:
அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிகர்கள், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதானது வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள திரையுலகினரும், ரசிகர்களும் ஆர்வமுடன் பார்ப்பார்கள்.
இதற்காக உலகம் முழுவதில் இருந்து பல மொழி திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் நடித்த ஆர்.ஆர்.ஆர். படமும், குஜராத் மொழிப்படமான லாஸ்ட் பிலிம் ஷோ ஆகியவை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
பரிந்துரை:
இதில் ஆர்.ஆர்.ஆர். படம் சிறந்த இயக்குநர் (ராஜமெளலி), சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்), சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்), சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த படத்தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே), சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்), சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்), சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (சாபு சிரில்), சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி), சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி ), சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்) ஆகிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது.
ஒரிஜினல் பாடல், சர்வதேச படம்:
இதனிடையே குறும்படம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் இடம் பெற்றுள்ள படங்களின் பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இடம் பெற்றுள்ளது. இதேபோல் சர்வதேச படப்பிரிவில் இந்தியாவில் இருந்து குஜராத் மொழிப்படமான லாஸ்ட் பிலிம் ஷோ இடம் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆஸ்கர் விருதுகளின் இறுதிப்பட்டியல் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இறுதிப்பட்டியலில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.