லலிதம் சுந்தரம்.... எளிமையான அழகான என்று பொருள். பெயருக்கு ஏற்றபடியே, எளிமையான கதையை, அழகான காட்சிகளுடன் திரைக்கு கொண்டு வந்திருக்கும் படம். மும்பை, பெங்களூரு, கொச்சி என மூன்று இடங்களிலிருந்து தொடங்கும் கதை. மூன்றும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள். கொச்சினில் வியாபாரத்தில் நலிவடைந்து மனைவியை பிரிந்து வாழும் அண்ணன், மும்பையில் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் தங்கை, பெங்களூருவில் ஐடி துறையில் பணியாற்றும் கடைகுட்டி தம்பி. மூவரும் கேரளாவில் வண்டிப்பெரியாறில் இருக்கும் முதுமையான தந்தையை பார்க்க வருகிறார்கள்.




இறந்து போன தாயின் விருப்பத்தை கூறி, ஒரு வாரம் அவர்களை அங்கு தங்க கூறும் தந்தை, தவிர்க்க நினைத்து பின்னர் அதை ஏற்கும் முதியவரின் மூன்று குழந்தைகளும், தங்கள் பழைய பாசத்தை தங்களுக்குள் கொண்டு வந்து, மனக்கசப்புகளிலிருந்து மாறுவது தான் கதை. குடும்பக் கதை என்று ஒரு வரியில் கூறிவிட முடியாது. குடும்பத்தில் நடக்கும் கதை என்று தான் கூற வேண்டும். நேர்த்தியாக, துல்லியமாக, உண்மையாக குடும்ப உறவுகளை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். 


பணிகளை தவிர்த்து பனிப்பிரதேசத்தில் தஞ்சம் அடையும் அவர்களின் மனதிற்குள் இருக்கும் கானல் நீரெல்லாம், அங்குள்ள தேனீர் இலைகளுக்குள் புதைந்து போவது தான் கதை.  அண்ணனாக பிஜூ மேனேன், தங்கையாக மஞ்சு வாரியர், தம்பியாக அனு மோகன். தங்கை கணவராக சய்ஜூ குரூப். அப்புறம் அவர்களின் குழந்தைகள். இது தான் படத்தில் வருவோர். படமாகவே அவர்கள் வாழ்ந்துவிட்டார்கள். இது ஒரு அக்மார்க் மலையாளப்படம். ஆனால், தமிழில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஒரு தமிழ் படத்தில் கூட, இவ்வளவு அழகாக வசனங்களை எதார்த்தமாக வைக்க முடியாது. அந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமான வார்த்தைகள். தங்கையிடம் அண்ணன், அண்ணனிடம் தங்கை, தம்பியிடம் அண்ணன், அண்ணனிடம் தம்பி, தம்பியிடம் அக்கா, அக்காவிடம் தம்பி என பாசங்கள் பகிரப்படுகிறது. 


போதாக்குறைக்கு இறந்த அம்மாவின் அன்பு, வாழும் அப்பாவின் ஆசை என எங்கு பார்த்தாலும் பாச மழை. குடும்ப உறவுகளையும், அதன் உன்னதத்தையும் கூறும் படங்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அதற்கு இந்த படம் உயிர்ப்பித்திருக்கிறது. அன்பைத் தவிர வேறு எதுவும் இங்கு பெரிதல்ல என்பதை அடித்து கூறியிருக்கிறார்கள். பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. வண்டிப்பெரியாரின் வளமான காட்சிகள், எதார்த்த வசனங்கள், உண்மையான கண்ணீர், காதல், பாசம் என படம் முழுக்க நாம் பயணிக்க முடிகிறது. 


மஞ்சு வாரியரின் அண்ணன் மதுவாரியர் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம், உண்மையில் பேசப்படும் குடும்ப காவியம். பிஜிபாலின் இசை, எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு வந்திருக்கிறது. சுகுமாறர் ஒளிப்பதிவும், லிஜோ பாலின் எடிட்டிங்கும் படத்திற்கு நல்ல பலம். ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள லலிதம் சுந்தரம்... குடும்பத்தோடு அமர்ந்து கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!