கேரளாவின் காட்டுக்குள்ளேயும், மலையிலேயும், வீட்டுக்குள்ளேயுமே கேமராவை வைத்துவிட்டு ஒரு படத்தை ஃபீல் குட்டாக கொடுத்துவிடும் மலையாள சினிமா. அதிலிருந்து வேறுபட்டு சில படங்களும் அவ்வபோது வருவது உண்டு. அந்த வகையில் எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படம் தான் குருப். கேரளாவைத் தாண்டி கேமரா பல இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றதே இதை பிரம்மாண்டமாக பார்க்கப்பட்டது. அதுவும் இந்தப்படம் தாங்கி வந்தது வெறும் கற்பனை கதையல்ல. கேரளா மட்டுமின்றி இந்தியாவையே அதிரச் செய்த குருப்பின் கதை. 1980 களில் கேரளாவை அதிரச் செய்த குற்றவாளியான குருப் என்பவரின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது துல்கர் சல்மானின் குருப். ஒரு உண்மைக்கதை எனும்போது வழக்கமாகவே அதன் மீது ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும். வழக்கத்தை விட பெரிய பட்ஜெட், துல்கர் சல்மான், நிஜக்கதை என ஏகப்பட்ட எதிர்பார்ப்பை தாங்கிக்கொண்டு வெளியான குருப், எதிர்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்ததா?


''என்னை விட எனக்கு இங்கு யாருமே முக்கியமல்ல'' என படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் குருப். பணம் தான் குறிக்கோள். பணம் மட்டுமே குறிக்கோள். 'வாழனும் செமயா வாழனும்' என்ற மைண்ட் செட்டோடு இருக்கும் ஒரு இளைஞன் எந்தவித போர்ஜெரி வேலையிலும் ஈடுபடுகிறார். அவரை உருப்பட வைக்க வேண்டுமென்றால் அரசின் துறைக்கே அனுப்ப வேண்டுமென திட்டமிடும் குடும்பம் அவரை ராணுவ விமானப்படையில் கொண்டு சேர்க்கிறது. ஆனாலும் குருப்பின் போர்ஜெரி அங்கேயும் தொடர்கிறது. அது அவரை அங்கிருந்து வெளியேற்றி வெளிநாட்டுக்கு பறக்க வைக்கிறது. இடம் மாறினாலும் போர்ஜெரி மூளையை விடாமல் பிடித்து பணம் பார்க்கிறார் குருப். ஒரு குற்றத்தை சரி செய்ய மறு குற்றமென குருப் வாழ்க்கை அடுத்த அடுத்த  லெவலுக்கு செல்கிறது. ஒரு கட்டத்தில் பெரிய மாஸ்டர் பிளானுடன் ஊருக்கு வருகிறார் குருப். ''ஒரு இன்சூரன்ஸ் இருக்கிறது. பெரிய தொகை. ஆனால் அதற்கு நான் இறக்க வேண்டும்'' என்ற குருப் குரலோடு அந்த பெரிய ப்ளான் தொடங்குகிறது. 




பணத்துக்காக எந்தக் கட்டத்துக்கும் செல்லும் குருப் ஊருக்கு வந்து தீட்டிய அந்த மாஸ்டர் ப்ளான் என்ன? குருப்பின் திட்டம் அவர் நினைத்தப்படி நினைவேறியதா? என பல கேள்விகளுக்கு விடையளித்து படம் நிறைவடைகிறது.


ப்ளஸ்:
கதைக்களம் 1960,70,80 என பல காலக்கட்டங்களில்பயணிக்கிறது. அதற்கான மெனக்கெடல் கண்கூட தெரிகிறது. ஆடை, ஹேஸ்டைல், பேருந்து, கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்திலும் அந்தக்காலமே பிரதிபலிக்க படக்குழு உழைத்துள்ளது. அதேபோல் நடிகர்களின் தேர்வு கச்சிதமாக இருக்கிறது. பல முக்கிய நடிகர்கள் சிறு வேடங்களில் நடித்து நமக்கு  சர்ப்ரைஸ் தருகிறார்கள். நாயகிக்கெல்லாம் பெரிய வேலை இல்லை என்றாலும் வந்த வேலையை செய்து நகர்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ படத்தின் இரண்டாம் நாயகன். அவர் வரும் காட்சிகளும் விறுவிறுப்பை கூட்டுகிறது


படத்தின் முதுகெலும்பே நாயகன் துல்கர் தான். இந்தப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் முக்கியப்படமாகவே இருக்கும். நடை, உடை, பாவனை என அனைத்திலும் தன்னுடைய சிறப்பை கொடுத்துள்ளார் துல்கர். இசையும் கேமராவும் படத்துக்கு பக்கபலமாகவே இருக்கிறது. ஒரு உண்மைக்கதையில் மையக்கருத்து என்ற லைனுடன் இப்படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன்.




மைனஸ்:
உண்மைக்கதை என்ற வகையில் இப்படம் உண்மையை விட்டு விலகியே நிற்கிறது. நாயகன், மாலிக் போன்ற படங்களில் ஹீரோ குற்றம் செய்தாலும் நாலு பேருக்கு நல்லது என்ற லைனில்தான் பயணிப்பார்கள். ஆனால் குருப் தான் உண்டு தான் சோலி உண்டு என குற்றம் செய்யும் பேர்வழி. படத்தில் குருப் நாயகன் என்றாலும் வெளியில் இருந்து பார்த்தால் அவன் ஒரு குற்றவாளியே. அப்படியென்றால் குற்றவாளிக்கான முக்கியத்துவம்தான் படத்தில் குருப்புக்கு கொடுக்கப்பட்டதா என்பதை பார்ப்பவர்களே முடிவு செய்ய வேண்டும். படத்தின் இரண்டாம் பாதி வேகமாக சென்றாலும் முதல் பாதி நகர்கிறது. தேவையில்லாத காட்சிகள், பட்டென முடிக்க வேண்டிய காட்சியை நீட்டி நெடுநேரம் இழுத்து சென்று படம் பார்ப்பவர்களை செல்போன் நோண்ட வைத்திருக்கிறார்கள். கதையாக நல்ல கதை என்றாலும் திரைக்கதையில் அது சொதப்பி இருக்கிறது. பல காலக்கட்டங்கள் வருவதை இன்னும் தெளிவாக புரியம்படி காட்டியிருக்கலாம். தெளிவற்ற திரைக்கதையால் சில குழப்பங்களும் வருகிறது.


துல்கர் ரசிகர்களுக்கு நிச்சயம் செம ட்ரீட்டாக இந்தப்படம் இருக்கும். பொதுவான ரசிகராக தியேட்டருக்குள் நுழைந்தால் முதல் பாதியில் வளைந்து நெளிந்து இரண்டாம் பாதியில் 'ஒகே'தான் என்று சொல்லிக்கொண்டே நீங்கள் வெளியே வருவீர்கள்.!