போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள சபாபதி திரைப்பட போஸ்டரை திரும்பப் பெறவில்லை எனில், திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தப்படும் என தபெதிக அமைப்பு அறிவித்துள்ளது.


நடிகர் சந்தானம் நடிப்பில் சபாபதி என்ற திரைப்படம் உள்ளது. இந்த படம் வருகின்ற நவம்பர் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தானம் உடன் புகழ், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஷி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பார்ஸ்ட் லூக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் பிளாட்பார்மில் அமர்ந்து புகழ் தண்ணியடிக்க, பிளாட்பார்ம் சுவரில் சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. ’தண்ணீர் திறந்து விடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம். திரண்டு வாரீர்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரின் மீது நடிகர் சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த போஸ்டர் ஹாலிவுட்டில் 2008 ம் ஆண்டு வெளியான ரோல் மாடல்ஸ் திரைப்பட போஸ்டரை காப்பியடித்து உருவாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சபாபதி திரைப்பட விளம்பர போஸ்டர் போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 





’போராளிகளை இழிவுபடுத்தும், மனிதநேயமற்ற திரைப்பட விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும். மறுத்தால் திரைப்பட திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்துவோம்’ என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘நடிகர் சந்தானம் நடித்து திரையரங்கிற்கு வரவுள்ள சபாபதி என்ற திரைப்படத்தின் விளம்பர போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றார்கள். அதில் "தண்ணீர் திறந்து விட ஆர்ப்பாட்டம் அனைவரும் திரண்டு வருக" என்ற வாசகம் இருக்கின்றது. அந்த வாசகத்தின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல காட்சி்ப்படுத்தி இருக்கின்றார்கள். நகைச்சுவை என்ற பெயரில் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களை, போராட்டக்காரர்களை இழிவுபடுத்தி இருக்கின்றனர். நகைச்சுவை என்ற பெயரில் மனிதநேயமற்ற காட்சிகளை வைத்து திரைப்படம் ஆக்குவதை கடுமையாக கண்டிக்கின்றோம்.





உடனடியாக அந்தத் திரைப்படத்தில் இந்தக் காட்சியை நீக்க வேண்டும். வெளியிட்டிருக்கின்ற படங்களை (stills) திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு அந்த திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண