KGF 2 Movie Review in Tamil: பாகுபலிக்கு இணையான எதிர்பார்ப்போடு, இரண்டாம் பாகத்தை இன்று இறக்கியிருக்கிறது கே.ஜி.எப். விமர்சனத்திற்கு முன்பே விடையை சொல்லிவிடலாம்.... பாகுபலி 2 எப்படி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோ... அதே மாதிரி கேஜிஎப் ரசிகர்களுக்கு, அதன் இரண்டாம் பாகமும், அதன் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது. 


முதல்பாகத்தின் தொடர்ச்சி தான், தங்க சுரகத்திற்காக பொதுமக்களை அடிமைப்படுத்தியவர்களை முதல் பாகத்தில் அழித்த யாஷ், இரண்டாம் பாகத்தில், அதே சுரங்கத்தின் எஜமானராக தொடர்கிறார். முதல் பாகத்தில் அடிமையாக இருந்த மக்கள், பணியாளர்களாக அதே பணியை தொடர்கின்றனர். போன பாகத்தில் விட்ட குறை, தொட்ட குறையாக இருந்தவர்கள் இந்த பாகத்தில் வஞ்சகம் தீர்க்க வருகிறார்கள். சுரங்கத்தை கைப்பற்ற நகர்த்தப்படும் காய்களை வழக்கம் போல, துவம்சம் செய்கிறார் ராக்கி பாய். 


இந்த முறை இந்திய பிரதமராக ரவீனா டாண்டன்; ராக்கி பாய் சாம்ராஜ்யத்தை ஒழிக்க வருகிறார். அவரை ராக்கி பாய் அவரை சமாளித்தாரா? அழிக்கப்பட்டதா கே.ஜி.எப்., சாம்ராஜ்யம்? அது தான் இரண்டாம் பாகம். சஞ்சய் தத் எண்ட்ரி உள்ளிட்ட பல சஸ்பென்ஸ்களோடு, வழக்கமான ஆர்ப்பரிப்போடு தொடங்கியதில் இருந்து முடியும் வரை, இருக்கையின் நுனியில் நம்மை அமர வைக்கிறது திரைக்கதை. 


நாடி நரம்பெல்லாம் கே.ஜி.எப்., மோகம் பாய வைத்து, நம்மை அப்படியே கதாபாத்திரத்தோடு அழைத்து செல்ல வைக்கிறது ரவி பிரஸ்ரூரின் பின்னணி இசை. கருப்பு படிந்த சுரங்கத்தை அச்சு மாறாமல் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது புவன் கவுடாவின் கேமரா. கதையை விட திரைக்கதையை ஆழமாக நம்பிய இயக்குனர் பிரசாந்த் நீலின் இயக்கம், என்ன வேண்டுமோ அதை கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தின் அதே படயலை கொஞ்சம் கூட குறைவில்லாமல், இன்னும் நிறைவாய் கொடுத்திருக்கிறார். 


தோட்டாக்களும், கத்திகளும், கதறல்களும் அதிகம் அதிகம் இருந்தாலும், ராக்கி பாயின் சுத்தியல் வரும் போது, அதெல்லாம் அடங்கிப் போகிறது. போதைக்கு தேவையான ஆக்ஷன் போதும் போதும் என்று இருந்தாலும், அதற்கு ஊறுகாயாக தாய் சென்டிமெண்ட் வைத்திருப்பது , முதல் பாகம் போலவே, இரண்டாம் பாகத்திற்கு சரக்கு குறையாமல் காப்பாற்றியிருக்கிறது. ஒரு இந்திய அரசாங்கத்திற்கு சவால் விட்டு, தன் சாம்ராஜ்யத்தை இழக்கும் போதும், கர்ப்பணி மனைவியை இழந்து கண்ணீருடன் எதிர்ப்பவர் கதையை முடிக்கும் போதும், ஒட்டு மொத்த தங்கத்தோடு கடலில் சென்று கப்பற்படை தோட்டாக்களுக்கு உயிரை விடும் போதும், ராக்கி பாஸ் மாஸ்.... கொஞ்சம் கூட குறைவில்லை. ‛என் மகனுக்கு பாடை கட்டும் வேலை கூட பிறருக்கு கிடைக்காது...’ என அவரது தாய் கூறும் பிளாஷ் பேக் டயலாக்கோடும், ‛போகும் போது யாரும் எதையும் கொண்டு செல்வதில்லை.. ஆனால் இவன் போகும் போது எல்லாத்தையும் எடுத்துட்டு போய்டான்...’ என பின்னணி டயலாக் ஒலிக்கும் போது, ஒட்டுமொத்த தங்கத்தோடு கடலில் மூழ்கும் போதும், கண்ணீர் வர வைக்கிறார் யாஷ். 


மாளவிகாவிடம் கதை கூறி முடித்துவிட்டு, ராக்கி இறந்துவிட்டார் என்பது போல, பிரகாஷ் ராஜ் எழுந்து செல்லும் போது, அந்த பைலை எடுத்து வைக்கும் அலுவலக உதவியாளர், கேஜிஎப் ஜாப்டர் 3 என்கிற பைலை பார்த்து இன்ப அதிர்ச்சி ஆகும் போது தான், இன்னும் முடியவில்லை, கே.ஜி.எப்.,3 ம் பாகம் இருக்கிறது என்கிற சமிக்ஞையோடு முடிகிறது இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் ஒரு மாநிலத்தில் நடந்த கதை, இரண்டாம் பாகத்தில் இந்திய பிரச்சனையாக கொண்டு வரப்பட்டது, முடியும் போது அமெரிக்கா, இந்தோனேஷியா தேடும் நபராக முடிக்கிறார்கள். மூன்றாம் பாகத்தில் உலகளாவிய கதைக்களமாக மூன்றாம் பாகம் இருக்கப்போகிறது என்பது உறுதியாகியிருக்கிறது. 


பீஸ்ட்-கேஜிஎப் போட்டியில் எது முந்தப் போகிறது என்கிற எதிர்பார்ப்பை, கிட்டத்தட்ட கேஜிஎப் தனக்கு சாதகமாக்கியிருக்கிறது. ‛திரை தீப்பிடிக்கும்... வெடி வெடிக்கும்... ராக்கி பாய் வந்தா...’ என்று அடித்து சொல்லலாம். 


Also Read | Beast Review: ‛பெஸ்ட் ஆர் ஒர்ஸ்ட்...’ பீஸ்ட் என்ன மாதிரி படம்? சமரசம் இல்லாத விமர்சனம் இதோ!