Beast Review Tamil: மணி ஹெய்ஸ்ட்... கூர்கா... இன்னும் பல ஹைஜாக் படங்களை முன்வைத்து குறி வைக்கப்பட்ட பீஸ்ட்... ஒரு வழியாக இன்று ரிலீஸ். சன்பிக்சர்ஸ்-விஜய்-அனிருத்-நெல்சல் என பலமான கூட்டணியோடு, கூட்டம் கூட்டமாய் தியேட்டரை குத்தகை எடுத்த பீஸ்ட் படம் எப்படி இருக்கு?


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் தலைவனை கைது செய்யும் ஆபரேஷனில், பரிதாபமாக ஒரு குழந்தை இறக்க, அதனால் வேலையை விட்டு மனநோய் பாதிக்கப்பட்டவராக சிகிச்சை பெற்று வரும் சிப்பாய் ஒருவர், விழா ஒன்றில் சந்திக்கும் இளம்பெண்ணிடம் காதலில் சிக்கி, அவர் அறிவுரையோடு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். அந்த நிறுவனத்தின் காவல் பணியில் ஏற்பட்ட குறைபாட்டிற்காக மால் ஒன்றில் மன்னிப்பு கேட்க போகும் நேரத்தில் மால் ஹைஜாக் செய்யப்படுகிறது. தீவிரவாதிகளிடம் பிணையமாக சிக்கியுள்ள மக்களை மீட்க அரசு ஒருபுறம் காய் நகர்த்திக் கொண்டிருக்க, எதிர்பாராதவிதமாக அங்கு பிணையமாக சிக்கிய முன்னாள் சிப்பாய், தீவிரவாதியை துவம்சம் செய்து, பொதுமக்களை மீட்டாரா? இல்லையா? என்பது தான், பீஸ்ட். 


உண்மையில் இது விஜய் படம். விஜய் ரசிகர்களுக்கான படம். ‛ப்ரேம் ஃபை ப்ரேம்’ விஜய்க்காக மட்டுமே காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. டைட்டில் கார்டில் தொடங்கி, எண்ட் கார்டு வரை விஜய் ஒருவரே படத்தை தாங்குகிறார். சீரியஸ் கதை... ஆனால், அதை எவ்வளவு ஜாலியாக நகர்த்தலாம் என்பதை நெல்சன் அறிந்திருக்கிறார். என்னதான் சீரியஸ் ஜானர் என்றாலும், தனது ஜானரை அவர் கைவிடாமல், அதையே கைபிடித்து நகர்ந்திருக்கிறார்; அது அவருக்கு கை கொடுத்திருக்கிறது என்றும் கூறலாம். 


டாக்டர் படத்தில் நடித்த அதே கிங்ஸ்லே அன் கோ... படத்திற்கு தேவையில்லாத ஆணி. யோகிபாபுவும் அதில் அடக்கம். துப்பாக்கிகளும் தோட்டாக்களும் இடைவிடாது பயணித்துக் கொண்டிருந்தாலும், அந்த சத்தத்தை கடந்து பூஜா புதுவசந்தமாய் தெரிகிறார். ஹைஜாக் படம் என்றாலே, பிணைய கைதிகளை வைத்து பேரம் இருக்கும், பேரம் பேச ஒரு அதிகாரி இருப்பார், தமிழ் சினிமாவில் 90களில் காட்டப்பட்டதைப் போலவே, அந்த கடத்தலில் ஒரு அரசியல் வாதியின் பங்கு இருக்கும். இதெல்லாம் பீஸ்டிலும் இருக்கிறது. மணி ஹெய்ஸ்ட், கூர்கா நியாபகம் வருகிறதா என்றால்... வருவதை தவிர்க்க முடியாது. 


ஓவர் ஆக்ட் உள்துறை அமைச்சரும், சீரியஸ் இல்லாத ஹைஜாக் டீம் தலைவரும் படத்திற்கு பெரிய மைனஸ். கதாபாத்திரத்தை எந்த அளவிற்கு பலவீனமாக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். அல்லது, இயக்குனரால் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனிருத்.... படத்தை விஜய் எந்த அளவிற்கு தாங்குகிறாரோ... அதை அளவிற்கு படத்தை தாங்கியிருக்கிறார். படத்தில் ஒரே பாடல்; படம் முடிந்த பின் இன்னொரு பாடல். மொத்தமே இரு பாடல்கள் தான். ஆனால், பின்னணி என்கிற பெயரில், விஜய் திரையை கிழிப்பதைப் விட, அனிருத் தான் அதிகம் திரையை கிழித்துள்ளார். ஒவ்வொரு முறை தீம் வரும் போது, தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். 


விடிவி கணேஷ் வசனங்கள் அனைத்துமே கலகல. அவர் மட்டுமே காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார். பூஜாவின் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக வரும் சதீஷ், துவக்கத்தில் ஓவர் ஆக்டிங்காக தெரிந்தாலும், பின்னர் விட்டதை பிடித்துவிடுகிறார். செல்வராகவன், செல்லும் ராகவனாக மிளிர்கிறார். விஜய்யின் வீரராகவன் கதாபாத்திரத்தை கையாளும் அவரது விதம், நல்ல ரகம்.  மனோஜ் ஒளிப்பதிவு... ஒரு மாலில் என்ன காட்ட முடியுமோ... எதை காட்டலாமோ... எப்படியெல்லாம் காட்டலாமோ... அதை காட்டியிருக்கிறார். சாந்தமான ஒரு மனிதன்... மிருகமாக பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அந்த மிருகத்தை பீஸ்ட் என்கிறார்கள். அரசியல் வசனங்கள், அசாதாரண சம்பவங்கள், சின்ன சின்ன வசனங்கள் என விஜய்க்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தற்போதைய தேவைகளை படத்திலும் கலந்திருக்கிறார்கள். 


முதல்பாதியில் கொஞ்சம் இழுவை... படம் முழுக்க இல்லாத அழுகை... இது இரண்டும் கொஞ்சம் மைனஸ். ஆனாலும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடத் தேவையான அனைத்தும் திரையில் வருகிறது. குடும்பத்தோடு கொண்டாடும் திரைப்படமா என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை. ஆனால், ரசிகர்களுக்கான படமா என்று கேள்வி கேட்டால், 200 சதவீதம், ஆம் என்று அடித்து கூறலாம். 


சுமார் ரகம் என்று ஒதுக்கிவிட முடியாது... ஓஹோ ஆஹா... என்று கொண்டாடவும் முடியாது. ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம். அதை கடந்து பங்கம் பண்ண எதுவும் இல்லை. விஜய்-பூஜா காம்ப்னேஷன், காக்டெய்ல் தான். பார்த்தாலே போதை தான். ஹைஜாக்கை கடந்து மீண்டும் கதை, ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு போவதும், அதன் பின் எண்ட் கார்டு போட்டு விட்டு, ஜாலியோ ஜிம்கானா பாடல் போடுவதும், தேவையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கே விட்டுவிடுவோம். சம்மரில்... சத்தத்தோடு... ஒன் மேன் யுத்தத்தை பார்க்க விரும்பினால், பீஸ்ட்... பெஸ்ட்!


Also Read | KGF 2 Review: ஒருத்தன் வந்தான்... தீ பிடித்தது திரை... ஒரிஜினல் பீஸ்ட்... நாடி நரம்பை புடைக்க வைக்கும் கே.ஜி.எப்-2!