சை.கௌதம் ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், முனீஸ்காந்த், ராமதாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை இயக்கிய கௌதமராஜ் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் நேற்று (மே.26) இப்படம் திரையரங்குகளில் வெளியானது.


நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய நடிகர் அருள்நிதி இப்படத்தில் வென்றாரா, படம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம்!


ராமநாதபுரம் மாவட்டம் தெக்குபட்டி கிராமத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த அருள் நிதியும், பின் தங்கிய சாதியைச் சேர்ந்த சந்தோஷ் பிரதாப்பும் நண்பர்கள். சமூகத்தில் பிறருக்கு சமமாய் தனது சாதி மக்களை உயர்த்த நினைக்கும் சந்தோஷ் பிரதாப்பின் நடவடிக்கைகள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒருக்கட்டத்தில்  சூழ்ச்சியின் காரணமாக அருள் நிதியின் மூலமாகவே சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. 


படத்தின் முதல் பாதி சிறப்பாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் பாதியில் சாதி பாகுபாடுக்கு எதிராக ஏதோ கருத்து சொல்லப் போகிறார்கள் என நினைத்தால் வழக்கமான பழிவாங்குதல் படமாகவே இந்த படம் அமைந்துள்ளது. நடிப்பில் அருள்நிதி வழக்கம்போல் எந்தக் குறையும் வைக்கவில்லை. அதேபோல் தனக்கான இடத்தை எதிர்பார்த்து காத்திருந்த சந்தோஷ் பிரதாப்பிற்கு மிகச் சிறப்பான வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் அமைந்துள்ளது. அருள்நிதி - துஷாரா விஜயன் காதல் காட்சிகள் படத்திற்கு தேவையில்லாதவை என்றாலும் ரசிக்கத்தக்க வகையிலே படமாக்கப்பட்டுள்ளது.


கே.கணேஷ்குமாரின் சண்டைக் காட்சிகள்  ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் டி.இமானின் இசையில் , யுகபாரதியின் வரிகளில் ‘அவ கண்ண பாத்தா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளை மட்டும் ரசிக்க வைக்க பின்னணி இசை உதவி இருக்கிறது. மிகச் சரியான கதையை திரைக்கதை சொதப்பல்லால் வழக்கமான படங்களாக கொடுத்துள்ளார் இயக்குனர் கௌதமராஜ்.


கதையில் பெரிய அளவில் ட்விஸ்ட் இல்லாவிட்டாலும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சாதிகளின் ஆதிக்கத்தையும், அதன் கொடூரத்தையும் வெளிப்படுத்துகிறது. இப்படியான நிலையில் கழுவேற்றி மூர்க்கன் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


அதன்படி படத்தின் முதல் பாதி வேற அளவில் எதிர்பார்க்க வைத்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் சாதிக் கலவரங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலை மிகச் சரியாக இந்த படத்தில் தெரிவித்துள்ளதாகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். மொத்தத்தில் கிராமத்து கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தியேட்டரில் ஒரு முறை பார்க்கலாம்.