நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் திரைப்படம் வெளியாக உள்ளது. கோலிவுட்டில் தற்போது முக்கிய இயக்குநராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படம் ‘மாநகரம்’


2017ஆம் ஆண்டு நடிகர்கள் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கஸண்ட்ரா, சார்லி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இயக்கத்தில் , வெளியான இப்படம், 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடிகள் வரை வசூலித்தது. ஜாவேத் ரியாஸ் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். 


மாநகரம் படத்தின் வெற்றியே இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்துள்ளதற்கு அடித்தளமிட்டது. இந்நிலையில், இப்படம் இந்தியில் மும்பைக்கார் எனும் பெயரில் தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். 


நடிகர்கள் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸே, தான்யா மனிக்தலா, ராகவ் பினானி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், மும்பைக்கார் திரைப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் முன்னதாக இப்படத்தில் ட்ரெய்லரைப் பகிர்ந்து, விஜய் சேதுபதி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்தியிலும் இப்படம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜேக் அண்ட் ஜில், கலியுகம் ஆகிய மலையாளப் படங்களுக்குப் பிறகு சந்தோஷ் சிவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் தன் சொந்தக் குரலிலேயே இந்தி டப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






விஜய் சேதுபதி பான் இந்தியப் படங்களில் சமீபத்திய ஆண்டுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், முன்னதாக ஃபார்ஸி சீரிஸில் நடித்திருந்தார். த ஃபேமிலி மேன் தொடர் மூலம் புகழ்பெற்ற ராஜ் அண்ட் டிகே இயக்கிய இந்த சீரிஸூம் பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக கத்ரினா கைஃப் உடன் இணைந்து நடித்து வரும் மெர்ரி க்ரிஸ்துமஸ் படத்தில்  விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.